பக்கம்:நா. பார்த்தசாரதி சிறுகதைகள் 1.pdf/193

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

முதல் தொகுதி / உறியடி ★ 191



பெண்ணின் குடும்பத்திற்கும் சண்முகவடிவேலுக் கரையாளர் குடும்பத்திற்கும் ஜன்மப்பகை. இதனால் இருவருக்கும் பெருத்த மனஸ்தாபம் ஏற்பட்டது.

“அடே சேது, நீ என்னிடம் முரண்டுபிடிக்கிறது நியாயமில்லே. உன்னைப் பெற்ற அப்பனை உனக்கு மதிக்கத் தெரியணும். உனக்குப் பார்த்திருக்கிற பொண்ணு கருப்பு, அழகில்லை என்கிறதற்காக நீ மறுக்கிறது சரியாகாது. வருகிற ஆவணி மாதம் உறியடித் திருநாளைக்கு மறுநாள் முகூர்த்தம்கூடப் பார்த்துட்டு வந்தாச்சு!”

“நல்லாப் பாருங்க! எனக்கென்ன? தாலி கட்டப்போறவன் நானா இருந்தாத்தானே?”

“அது முறைப்பொண்ணு. கண்டிப்பாக நீதான் தாலி கட்டணும். உனக்கு என்றே பிறந்த பொண்ணை அல்லாட விடக்கூடாது.”

“சூர்ப்பனகை மாதிரி ஒரு அவலட்சணத்தைக் கொண்டாந்து என் தலையிலே கட்டணும்னு சதி செய்றீங்க நீங்க. எனக்கும் வீம்பு, முரண்டு எல்லாம் தெரியும்.”

“சீ! நிதானிச்சுப் பேசுடா கழுதை. உன்னை அந்தப் பொண்ணு கழுத்திலே தாலிகட்ட வைக்கலேன்னா நான் சண்முகவடிவேலுக் கரையாளன் இல்லை. பார்த்துக்கிட்டே இரு.”

சேது ராமலிங்கம் பதில் சொல்லவில்லை. தகப்பனாரோடு மேலும் எதிர்த்துப் பேசிக் கொண்டிருந்தால், அவருடைய கோபம் எல்லை மீறிக் கையிலகப்பட்டதைத் துரக்கிவிடுவார் என்பது அவனுக்குத் தெரியும். பேசாமல் அவர் முன்னால் நிற்காமல், வேறெங்கோ சென்றுவிட்டான். ஆனால் தான் அவ்வாறு வெளியே சென்றதைத் தன்னுடைய சம்மதமாக அவர் எடுத்துக் கொள்வார் என்று அவன் எதிர்பார்க்கவில்லை.

பையனை எப்படியாவது வற்புறுத்தியோ, அரட்டி மிரட்டியோ தாம் பார்த்திருந்த சம்பந்தத்தை முடித்துவிடுவது என்று பிடிவாதமாக இருந்தார் சண்முக வடிவேலுக் கரையாளர். கலியாணத்தை நிச்சயம் செய்து உறவின் முறையார்களைக் கூட்டி வெற்றிலை பாக்குக்கூடக் கொடுத்துவிட்டார்."என்னய்யா பெரிய கரையாளரே! உம்ம பையன் இந்தப் பெண் வேண்டாம்னு முரண்டு செய்யறானாம், நீர் என்னடா வென்றால் உம் பாட்டுக்கு வெற்றிலை பாக்கு மாற்றி முகூர்த்த நாளும் பார்த்துவிட்டீரே?” என்று சிலர் தம்முடைய சந்தேகத்தை அவரிடம் கேட்டனர்.

“விடலைப் பயல்தானே? இப்ப அப்படித்தான் சொல்லிக்கிட்டிருப்பான். நான் சரிப்படுத்தி விடுவேன். எப்படியும் நம்ம ஆதிநாராயணப் பெருமாள் உறியடித் திருநாளுக்கு மறுநாள் இந்தக் கலியாணம் நடந்தாகணும்.” என்றார் அவர்.

“என்னமோய்யா! உம்ம மகன் இணங்கமாட்டான் என்று ஊரெல்லாம் ஒரே ‘கசமுசலா’ இருக்கு பார்த்துச் செய்யும். சின்னத்தனமாச் சமயத்திலே காலை வாரி விட்டுடப் போறான்” என்று எச்சரித்துவிட்டுப் போனார்கள் அவர்கள்.

எப்படியானால் என்ன? பெரிய கரையாளருக்கும் அவர் மகன் சேது ராமலிங்கத்திற்கும் கலியான விஷயமாக மனஸ்தாபம் ஏற்பட்டுப் பெரிய வாய்ச்சத்தம்