பக்கம்:நா. பார்த்தசாரதி சிறுகதைகள் 1.pdf/194

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

192 ★ நா. பார்த்தசாரதி சிறுகதைகள்



வரை முற்றிவிட்டதென்று ஊராருக்குப் பராபரியாகத் தெரிந்திருந்தது. பெரிய கரையாளர் பார்த்திருந்த பெண் ‘அழகில்லை’ என்பதற்காகச் சேதுராமலிங்கம் அந்தப் பெண்ணை வெறுத்துக் கொண்டிருக்கும் விஷயமும் பரவியிருந்தது.

சேதுராமலிங்கத்தின் ஆசையை எல்லாம் கொள்ளை கொண்டிருந்தவள் நாராயணக் கரையாளர் மகள் பூங்காவனம். ஆனால் நாராயணக் கரையாளருக்கும் சண்முக வடிவேலுக் கரையாளருக்கும் குடும்பப் பகை முற்றியிருந்தது. பூங்காவனமும் சேது ராமலிங்கமும் தனிமையில் குளக்கரை மாந்தோப்பில் அடிக்கடி சந்தித்துக் கொண்டிருக்கும் விவரம்கூட இரண்டு கரையாளர்களுக்கும் தெரியாது. தெரிந்திருந்தால் நாராயணக் கரையாளர் தம் மகளை மென்னியைத் திருகிப் போடக்கூடத் தயங்கமாட்டார். அதேபோல் பகையாளி மகளோடு உறவாடும் குற்றத்துக்காகச் சண்முக வடிவேலுக் கரையாளரும் தம் மகனை அடித்து நொறுக்கியிருப்பார்.ஆனால் இந்தப் பரம்பரை வைரிகளுக்கு கொஞ்சமும் தெரியாமல் இவர்களுடைய காதல் வளர்ந்து அருகே நெருங்கிப் பழக ஆரம்பித்திருந்தனர். அன்பு செய்கின்ற விந்தையை மனிதன் எப்படி அளவிடமுடியும்? பூங்காவனமும், சேதுராமலிங்கமும் பிரிக்க முடியாதபடி மனமொருமித்து நெருங்கிப் பழகிவிட்டார்கள். அதனால்தான் தகப்பனார் பார்த்த முறைப்பெண்ணை மணந்து கொள்ள முடியாதென்று மறுத்து முரண்டு பிடித்துக்கொண்டிருந்தான் சேதுராமலிங்கம். இதைப் புரிந்து கொள்ளாமல் தாம் பார்த்து வைத்திருக்கும் பெண் கறுப்பாக இருப்பதனால்தான் அவன் மறுக்கிறான் என்றும் கடைசியில் எப்படியும் அவனைச் சரிக்கட்டி விடலாமென்றும் பகற் கனவு கண்டவாறே கலியாண ஏற்பாடுகளை மும்முரமாகச் செய்து கொண்டிருந்தார் சண்முக வடிவேலுக் கரையாளர்.

ஆனால் சேதுராமலிங்கமோ வேறு விதமாகத் திட்டம் போட்டிருந்தான். கடைசி வரை தகப்பனாருடைய ஏற்பாட்டிற்கு சம்மதிப்பவன் போல் பேசாமல் இருக்க வேண்டியது. முகூர்த்தத்துக்கு முதல்நாள் உறியடி விழா முடிந்ததும் இரவோடு இரவாகப் பூங்காவனத்தையும் அழைத்துக் கொண்டு எங்காவது அக்கரைச் சீமைக்கு ஒடி விடுவதென்று தீர்மானித்திருந்தான். அவனைத் தன் உயிரினுமினியவனாகக் கருதியிருந்த பூங்காவனமும் அதற்கு இணங்கியிருந்தாள். நாட்கள் கழிந்து கொண்டிருந்தன.

வன்னிய நத்தத்தில் நாளை விடிந்தால் உறியடித் திருநாள். அதற்கு மறுநாள்தான் தம் மகனுக்கும் வளர்த்து வைத்திருந்த பெண்ணுக்கும் கலியாணம்.ஆகையால் அதில் முழு நேரத்தையும் ஈடுபடுத்தியிருந்தார் பெரிய கரையாளர்.

போதாத குறைக்கு அந்த வருடம் உறியடி முறையும் அவருடையதாக இருந்தது. ஆனால் அதற்காக அவர் ஒன்றும் கஷ்டப்படவில்லை.

“இந்தா சேது! இந்த வருஷ உறியடி முறை நமக்குத்தான். நாளைக்குக் கலியான காரியமா எனக்கு அங்கே இங்கே நாலு இடத்துக்கு அலையனும். நீயே உறியை