பக்கம்:நா. பார்த்தசாரதி சிறுகதைகள் 1.pdf/195

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

முதல் தொகுதி / உறியடி ★ 193



அடிச்சுட்டுக் கோவில் மரியாதையை வாங்கிட்டு வந்துடு. கலியாணத்துக்கு முதல்நாள் பெருமாளுக்குப் பணி செய்து ஆசி பெற்றது போலவும் ஆகும்” என்று மகனிடம் கூறியிருந்தார்.

“சரி அப்பா! நானே உறியடிக்குப் போய்விட்டு வருகிறேன்” என்று அவனும் சம்மதித்திருந்தான். ‘கடைசி நாள், ஊரை விட்டே கண்காணாத சீமைக்கு ஒடப் போகின்றோம். போவதற்கு முன் பெற்ற தகப்பனை ஏமாற்றினாலும் பெருமாளையாவது திருப்திப்படுத்திவிட்டுப் போவோம்’ என்றுதான் அவன் அதற்குச் சம்மதித்திருந்தான். உறியடித்து முடிந்ததும் நேரே குளக்கரை மாந்தோப்புக்குப் போனால், அங்கே பூங்காவனம் ஒடுவதற்குத் தயாராகக் காத்திருப்பாள்.அவளோடு இரவோடு இரவாகவே போய்விட்டால் நாளைக் காலை தூத்துக்குடி சென்று கொழும்புக்குக் கப்பலேறிவிடலாம்.

எல்லாவற்றையும் ஒழுங்காகத் திட்டமாக நடைபெறத்தக்க விதத்தில்தான் நினைத்திருந்தான் அவன். ‘எண்ணங்களை எண்ணுவதுதான் மனிதர்களால் ஆகமுடிவது. எண்ணங்கள் நிறைவேறுவது தெய்வசித்தத்தால் ஆவது’ என்று அவன் கண்டானா என்ன?

உறியடி விழாவின் கோலாகலம் ஊரில் உற்சாகமாகப் பொங்கி வழிந்து கொண்டிருந்தது. அந்தி நேரம் ஆயிற்று. சண்முக வடிவேலுக் கரையாளர் மகனை அழைத்து உறியடிக் கழியைக் கையில் கொடுத்துக் கோவிலுக்கு அனுப்பினார்.

“ஏ அப்பா! விடிஞ்சாக் கலியாணம். உறியடியை முடிச்சிட்டுப் பெருமாளைப் நல்லபடியா வேண்டிக்கிட்டு வா. பாய்ஞ்சு பாய்ஞ்சு அடிக்கிறேன் என்று வீணா உடம்பை அலட்டிக்கிடாதே.நான் போய் மேளகாரனுக்குச் சொல்லிவிட்டு ரங்காநாத உடையாரு கடையிலே நாலு கட்டு வெத்திலை எடுத்தாரணும். அப்புறம் பந்தலுக்கு வாழைமரம் தோரணம் கட்டணும்” என்று அவனுக்கு விடைகொடுக்கிற சாக்கில் கலியான ஏற்பாடுகளின் பெருமையை அளந்தார்.

'செய்யுங்கள்; செய்யுங்கள்! நாளைக் காலைவரை என்ன வேண்டுமானாலும் செய்யுங்கள். நாளை இந்நேரம் உங்கள் மகனும் நாராயணக் கரையாளர் மகளும் கொழும்புக் கப்பலிலே போய்க் கொண்டிருப்பார்கள்’ என்று மனத்தில் கறுவிக் கொண்டே கிளம்பினான் அவன்.

“அடே அப்பா சேது! வாசல்லே நல்ல சகுனம் ஆகுதான்னு பார்த்துக்கிட்டுப் புறப்படு!”

“ஊம்! ஊம்! எல்லாம் நல்ல சகுனந்தான் ஆகுது. நான் வரேன்!” வேண்டாவெறுப்பாகக் கூறிவிட்டுச் சென்றான் சேதுராமலிங்கம். கிழவர் உட்புறம் சென்றார்.இன்று போலவே அன்றும் கோவில் வாசலில் உறியடியைக் காண்பதற்காக ஏராளமான ஜனங்கள் கூடியிருந்தார்கள். மரங்களுக்கு இடையே மூங்கில் சட்டத்தில் உறிக் கலயங்கள் தொங்கிக் கொண்டிருந்தன. உறிக் கலயங்களுக்குக் கீழே ஒருபுறம் பெண்களும் மற்றொருபுறம் ஆண்களுமாகப் பார்ப்பதற்குக் காத்திருந்தார்கள்.

நா.பா. 1 - 13