பக்கம்:நா. பார்த்தசாரதி சிறுகதைகள் 1.pdf/196

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

194 ★ நா. பார்த்தசாரதி சிறுகதைகள்



ஆதிநாராயணப் பெருமாள் குதிரை வாகனத்தில் எழுந்தருளினார். வீதிப் புறப்பாடு முடிந்தபின் உறிமரத்துக்கு முன்னால் குதிரை வாகனம் வந்து நின்றது. சேதுராமலிங்கம் கம்பும் கையுமாகப் பயபக்தியுடன் வாகனத்தடியில் போய் அடக்கு ஒடுக்கமாக நின்றான். அர்ச்சகர் அவன் கழுத்தில் மாலை போட்டு விட்டுத் தலையில் பரிவட்டம் கட்டினார். அவன் மரியாதைகளை ஏற்றுக் கொண்டு சாஷ்டாங்கமாகக் கீழே விழுந்து பெருமாளை வணங்கினான். பின் அடிக்கும் கழியை வலது கையில் மாற்றிப்பிடித்துக் கொண்டு உறிமரத்தை நெருங்கினான். கூட்டம் இருபுறமும் ஒதுங்கி அவனுக்கு வழிவிட்டது. உறியடிக்கப் போகிறான் என்ற ஆவலால் கூட்டத்தில் சப்தம் குறைந்து அமைதி நிலவியது.

மஞ்சளையும் சுண்ணாம்பையும் கரைத்துப் பீச்சாங் குழாயில் அடைத்துக் கொண்டு ஒருவன் வந்து நின்றான்.இன்னோர் பக்கம் உறிச் சட்டத்தை இழுத்து உயரே தூக்கும் கயிற்று நுனியைப் பிடித்துக் கொண்டு இன்னொருவன் நின்றான். பெண்கள் கூட்டத்தில் முண்டியடித்துக்கொண்டு முன்புறம் நின்றவளைப் பார்த்தபோது சேதுராமலிங்கம் முகத்தைச் சுளித்தான்.

மறுநாள் எந்த ‘அவலட்சணத்திற்கு’ அவன் மாலையிட வேண்டுமென்று ஏற்பாடாகியிருந்ததோ அந்த ‘அவலட்சணம்' கையில் ஒரு சிறுமியைப் பிடித்துக் கொண்டு முன்புறம் நின்று கொண்டிருந்தது. தன் கணவனாக வரப் போகிறவனின் தீரத்தைக் கண்டு மகிழ்வதற்காக வெட்கத்தையும் மறந்து வந்திருந்தாள் அவள். தீவட்டிகளின் வெளிச்சத்தில் அவளுடைய அட்டைக்கரி நிறத்தைப் பார்த்தபோது அருவருப்பாக இருந்தது. அந்த வெறுப்பில்தான் முகத்தைச் சுளித்தான் அவன்.

‘உன் லட்சணத்துக்கு இதைப் பார்க்க வேறு வந்திட்டியா பெண்ணே?’ என்று எண்ணிக் கொண்டே உறியை எப்படிப் பாய்ந்து அடிக்கலாமென்று குறி பார்த்தான் சேதுராமலிங்கம்.

கம்பை இரண்டு கைகளிலுமாகத் தாங்கிக் கொண்டு துள்ளி ஓடிவந்து மேலெழும்பி அடித்தான். முதல் தடவை அடிபடவில்லை. கயிற்றுக்காரன் உறிச்சட்டத்தை மேலே இழுத்துவிட்டான். பீச்சாங்குழல்காரன் முகம் நிறையச் சுண்ணாம்புத் தண்ணீரைப் பீச்சி விட்டான். சுண்ணாம்பு கண்ணைக் கரித்தது. எரிச்சலாக இருந்தது. கண்களைத் துடைத்துக் கொண்டான். கூட்டம் உறிக்காரன் அடிக்க முடியாமல் ஏமாந்துவிட்ட காட்சியை ரஸித்துக் குலுங்கக் குலுங்கச் சிரித்துக்கொண்டிருந்தது.

இரண்டாம் முறையாக அவன் குறி வைத்துப் பாய்ந்து கம்பை ஒங்கிக் கொண்டு ஓடிவந்தான். இந்தத் தடவை சேதுராமலிங்கத்திற்குத்தான் வெற்றி. கயிற்றைப் பிடித்தவனும், பீச்சாங்குழல்காரனும் ஏமாந்துவிட்டனர்.ஒன்பது கலயங்களில் மூன்று கலயங்களை அடித்துக் கீழே தள்ளிவிட்டான் சேதுராமலிங்கம். கூட்டத்தில் ‘சபாஷ்’, ‘பிரமாதம்’ ‘அப்படியடிடா ஆம்பிளைச் சிங்கம்’ என்று பல்வேறு தினுசான பாராட்டுக் குரல்கள் எழுந்தன.