பக்கம்:நா. பார்த்தசாரதி சிறுகதைகள் 1.pdf/201

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

25. பிரளய தாண்டவம்

வானப் பரப்பில் வெண் பஞ்சுப் பொதிகளென மினுக்கும் மேகங்களைத் தழுவி நிற்கும் பனிமலை. படரும் ஆசைகளைப் போல எழுச்சி பெற்று நிற்கும் சிகரங்களுக்கெல்லாம் நடுநாயகமாக விளங்கும் கைலாச சிகரம். நன்றாக வார்த்தெடுத்த வெண்கல மணியின் பேதமற்ற நாத அலைகளைப் போல ‘ஓம் ஓம்’ என்ற ஒலி அலைகள் காற்றைச் சாடி மோதுகின்றன. சங்கு முழங்குகிறது. மணிகள் ஒலிக்கின்றன. ‘ஜண் ஜண், ஜன, ஜன ஜண்’- எட்டுத் திசைகளிலும் இனிமையை வாரி வழங்கும் ஒர் ஒலிக் காவியம் எழுத்தில் எழுத முடியாத ஒர் ஒசை ஒவியம்.

பாடகமும், சிலம்பும், தண்டையும், சலங்கையும், வளைகளும், மணிகளும் ஒலிக் கலவையாக ஒன்று கூடின. ஒலிக் கலவையின் நடுமையமாக மிருதங்கத்தின் மேல் மிதித்தால் உண்டாகின்றாற் போன்ற சத்தம். அது பாதங்கள் தரையை மிதிக்கும் நாதம். நாதத்தைக் குழைய வைக்கும் படியான பறை. அடிமை கொள்ளும் மென்மை. நிருத்தியம், அது சாதாரண நிருத்தியமில்லை - நிருத்தியத்தின் நிருத்தியம். பரதத்தின் பரதம்; ஊழியின் ஊழி; சலனத்தின் சலனம், கூத்தின் கூத்து, அவிநயத்தின் அவிநயம்; ஆடுகிறவனும், ஆடுகிறவளும் ஆடவில்லை அங்கே! ஆட்டுகிறவனுடன் - ஆட்டிவைப்பவன் ஆடிக் கொண்டிருக்கிறான்!

பிரம்மசிருஷ்டியின் திகிரி வேகத்தின் எல்லையை மீறி தாகத்தின் எல்லையைத் தொட்டுத் துழாவி எட்டி இறுகிக் கொண்டிருந்தது. உலகத்தின் ஆட்டத்தில் பூதங்கள் ஐந்தும் ஆடின. பூதங்களை உண்டாக்கிய பரம் பொருள், பரம் பொருளை உண்டாக்கிய மாயை, மாயையை உண்டாக்கிய சூன்ய வஸ்து எல்லாம் கிடுகிடாய்த்துக் கொண்டிருந்தன. சலசலத்து வெலவெலத்துக் கொண்டிருந்தன.

“என்ன நடக்கிறது? ஏன் நடக்கிறது? எங்கு நடக்கிறது? ஐயோ!” தேவர்களை எண்ணி மானிடர்கள் கலங்கினார்கள். அசுரர்களை எண்ணித் தேவர்கள் கலங்கினார்கள். தருமத்தை எண்ணி அசுரர்கள் கலங்கினார்கள். மண், விண், பாதலம், கடல் எல்லாம் கலங்கின. எண்ண முடியாததை எண்ணிக் கலங்கின. காண முடியாததைக் கண்டு கலங்கின. உணர முடியாததை உணர்ந்து கலங்கின. கதித்தன, அதிர்ந்தன, பிதிர்ந்தன. எல்லாம் ஆயின!

நயனங்கள் மூன்றும் கீறி வைத்த நெருப்புத் துண்டங்களெனக் கனன்றன. சடா முடியில் நாகம் முசுமுசு என்று மூச்சை விஷமாக்கி, விஷத்தைக் காற்றாக்கி வெளித்தள்ளியது. விழிகளின் கனற்சியும் விஷ மூச்சின் வெப்புமாகத் தேங்காய்த் துண்டமெனத் தோன்றிய சீதப் பனி மதியின் பாதிப் பிறை வடிவை வெதுப்பு வெதுப்பென்று வெதுப்பின. கங்கை சுட்டாள், சடையிடையே செருகிக் கிடந்த