பக்கம்:நா. பார்த்தசாரதி சிறுகதைகள் 1.pdf/202

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

200நா. பார்த்தசாரதி சிறுகதைகள்

—————————————————————————

கொன்றை மலர்க் கொத்துக்களும் தாழைமடல்களும் வாடிக் கருகின. அக்னியைச் சிருஷ்டிக்கும் பிரளய வாயில்களா அந்த விழிகள்? பிருதிவியை மிதித்து மிதித்துச் சிதைத்து அழித்தொழித்து இல்லையாகும்படி செய்து விடவா அந்தப் பாதங்கள் இப்படி வெறிக் கொண்டு விட்டன! கரங்கள்! அவை ― கரங்களா, அல்லது மின்னல்களா? கரங்கள் ஆடிக் களிக்கின்றனவா? கரங்களில் பிடித்திருக்கின்ற திரிசூலம் ஆடிக் களிக்கின்றனவா? ஐயோ! ஒன்றும் புரியவில்லையே? ஆட்டுவது யார்? ஆடுவது யார்? ஆட்டப்படுவது எது? எது? எது? ஏன்? ஏன்? ஏன்…?

ஊழி வந்துவிட்டதா? எம்பெருமான் பித்தனாகி விட்டானா? சடையாடச் சடை பெற்ற பிளையாட, பிறை கொண்ட சிரம் ஆட, சிரம் கொண்ட உடல் ஆட, உடல் கொண்ட தராதலம் ஆட ஆட்டம் ஒரே ஆட்டம்! ஓய்வு ஒழிவில்லாத ஆட்டம் முக்கண்ணன் ஆடுகின்றான்; யூத கணங்கள் ஆடுகின்றன. எட்டுத் திசைகளும் ஆடுகின்றன. எட்டுத் திசைப் பாலகர்களும் ஆடுகிறார்கள். மால் ஆடுகின்றான், மறைகள் ஆடுகின்றன. மறைகளைப் படைத்த பிரமன் ஆடுகின்றான். இந்திரன் ஆடுகின்றான். தேவர்கள் ஆடுகின்றனர். விநாயகன் ஒரு மூலையில் தன் யானைப் பாதங்களை மிதித்து ஆடுகிறான். குழந்தை முருகனும் தாறு மாறாக மிதித்து ஆடுகிறான். நந்தி சாட்டையை வீசி எறிந்து விட்டு ஆடுகிறான். நாட்டியப் பெண்களாகிய கந்தர்வ சுந்தரிகளெல்லாம் ஆடுகின்றனர்.

எம்பெருமானின் சரீரத்தைச் சேர்ந்த ஜட, ஜீவ, சேதனாசேதன வஸ்துக்களெல்லாம் ஆடுகின்றன. மான் ஆடுகிறது, மழு ஆடுகிறது, கங்கை ஆடுகிறாள், பிறை ஆடுகிறது. ஆனால்…?

அச்சரீரத்தின் உபாங்கமாகிய உமை ஆடவில்லை. உமையின் கருவிழி ஆடவில்லை. அந்தக் கருவிழிகளின் இமைகள்கூட அசையவில்லை. அர்த்தத்தின் அர்த்தம்போல, விளக்கத்தின் விளக்கம் போல, புரிந்தும் புரியாத அமைதியோடு அவள் வீற்றிருந்தாள்.அது கையாலாகாத அமைதியா? சினத்தின் அமைதியா? பொறுமையின் அமைதியா? பொறாமையின் அமைதியா? யார் கண்டார்? யார் காண முடியும்? யாருக்குத் தெரியும்?

கைலாசபதியின் மான் தோல் விரித்த ஆசனம் வெறுமையாக இருந்தது. அதனருகே இருந்த ஆசனம்! ஏற்றி வைத்த குத்து விளக்கா? எழுதி வைத்த சித்திரமா? செதுக்கி வைத்த சிலையா? இல்லையானால், உருக்கி வைத்த பொற் பிழம்பா? அமைதியின் வடிவாக வீற்றிருந்தாள் எம் அன்னை. அவளைச் சுற்றி ஒரே ஆட்டம், ஒரே ஓசை. ஒரே பிரளயம்! அவளுக்கு உள்ளேயோ ஒரே அமைதி. ஒரே தனிமை, ஒரே சிந்தனை. அவள் தாய் அல்லவா? எனவே, தாயாகவே வீற்றிருந்தாள்.

கடல் வானை முத்தமிடுகிறது. திசைகள் நேர் எதிரெதிரே முட்டிக் கொள்கின்றன. எல்லை ஊரை விழுங்குவதைப்போலப் பஞ்சபூதங்கள் உலகை விழுங்கத் தயாராகின்றன. தரை, வானம், கடல், பாதாளம், திக்கு, திகந்தம் என்ற பேதங்கள் குன்றுகின்றன. ‘எல்லாம் சமாப்தி’ என்ற அபேதம் ஏற்பட்டுக் கொண்டிருக்கிறது. சிவம்