பக்கம்:நா. பார்த்தசாரதி சிறுகதைகள் 1.pdf/203

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

———————————————————

முதல் தொகுதி / பிரளய தாண்டவம் 201

உலகைச் சவமாக்கும் முயற்சியில் முனைந்துவிட்டது. உயிர்களைக் காக்க வேண்டிய பேருயிர் உயிர்களை விளையாடி வேதனைக்குள்ளாக்கத் தொடங்கிவிட்டது. கண்ணைத் திறந்து பார்க்க வேண்டிய நேரத்தில் கண்ணிருந்தும் காண விரும்பாதவள் போல உட்கார்ந்திருக்கிறாள். பொறுப்பை உணர்த்த வேண்டியவள் பொறுப்பில்லாதவளாகிவிட்டாளோ?

ஓலம்! ஓலம்! ஓலம்! ஈரேழு பதினான்கு புவனங்களிலும் வாழ்கின்ற உயிர்க்குலங்களின் வேதனை ஓலம்.அழிகின்ற நேரத்திலும் அழியாத ஆசையின் ஓலம். தான் அழிந்தாலும் அழியாது நிற்கும் ‘தனது’ இடுகின்ற ஓலம். நம்பிக்கையின் இறுதி மூச்சு. உயிரின் அந்திமக் குரல். பாவத்தின் பரிதாபத்தை எடுத்துரைக்கும் இரைச்சல். அழிக்கின்றவனும் அவன் இடமும் எஞ்சி நின்றன.மற்றவை அழிந்து கொண்டிருந்தன.

தாயின் கண் திறந்தது. உமைக்கு உடலெல்லாம் செவிகளாயின. உயிர்களின் ஓலத்தைக் கேட்டாள். உடலெல்லாம் கண்களாயின. அந்திம காலவேதனையைப் பார்த்தாள். உடலெல்லாம் மனங்களாயின. பிரளயத்தின் வேதனையை உணர்ந்தாள்.

கேட்டாள், பார்த்தாள், உணர்ந்தாள். உணர்ந்தவள் கிளர்ந்தாள். எழுந்தாள், ஆடாத கருவிழிகள் ஆடிச் சிவந்தன. அசையாத இமைவில்கள் அசைந்து வளைந்தன. புருவம் சுளித்தது. பவழச் செவ்விதழ்கள் கோணின.

சிலம்பும் மெட்டியும் ஒலிக்கத் தரை மேல் ஓங்கி மிதித்தாள். இலட்சோபலட்சம் கண்டா மணிகளோடு கூடிய மாபெருங் கதவொன்றைக் காலால் உதைத்தது போன்ற ஓசை உண்டாயிற்று. அந்தப் பேராசையில் அடங்கி நின்றது எம்பொருமானின் பிரளய ஓசை. எம்பெருமான் திகைத்தான்! ஓசையை அடக்கிய பேரோசை என்ன வென்று பார்த்தான். பார்த்தவன் பதைத்தான், பதறினான்.

உமை வலது பாதத்தை ஓங்கிக் கொண்டிருந்தாள்.எம்பெருமான் அவளை நோக்கி ஓடினான். எரித்த விழிகள் மூன்றும் சிரித்தன. பாய்ந்த திரிசூலம் பதுங்கியது. மிதித்துத் துள்ளிய கால்கள் பதித்து நடந்தன. கங்கை குளிர்ந்தது. தாழையும் கொன்றையும் மணம் வீசின. பிறை நிலவு பொழிந்தது. நாகம் படம் விரித்து மகிழ்ச்சியாட்டம் போட்டது.

“தேவீ என்ன இது? உனக்கு ஏன் இந்தக் கோபம்?”

உதைப்பதற்காகத் துக்கி ஓங்கிய பாதம் அவன் மார்புக்கு நேரே அப்படியே நின்றது. ஒற்றைக் காலால் நின்று கொண்டே அவனை ஏறிட்டுப் பார்த்தாள் உமை.

‘ஐயோ! பார்வையா அது? விழிகளின் சவுக்கடி கண்களின் போர்.’

“ஓகோ! நான் மன்மதனை எரித்து நீறாக்கியபோது என்னைப் பார்த்துப் பழகிக்கொண்ட பார்வையோ இது” - எம்பெருமான் குறும்புச் சிரிப்புச் சிரித்தான். எம்பெருமாட்டி நெருப்பாய் எரிந்தாள்!

“தேவிக்குத் தரையின் பலத்தைக் கால்களால் பரீட்சிக்க வேண்டிய அவசியம் என்னவோ?”

“எல்லாம் தேவனுக்கு நேர்ந்த அவசியம்தான்!”