பக்கம்:நா. பார்த்தசாரதி சிறுகதைகள் 1.pdf/205

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

———————————————————

முதல் தொகுதி / பிரளய தாண்டவம் 203


“என்ன செய்ய வேண்டும், தேவீ!”

“இந்த மகோன்னதக் கலையை இதுவரைதான் அழிப்பதற்கென்றே பயன்படுத்திவிட்டீர்கள். உலகின் சம்ஹாரத் தொழிலைச் சில யுகங்களுக்குப் பஞ்ச பூதங்களே தாமாகச் செய்து கொள்ளட்டும். நாம் இருவரும் உலகத்துக்குப் போய் வாழ்வு கொழித்து உயர்வதற்கு இந்தக் கலையைப் பயன்படுத்திப் பார்ப்போமே?”

“அது அவ்வளவு சுலபமாகச் சாத்தியமாகிவிடுமா, பார்வதீ!”

“ஏன் ஆகாது? நான் சொன்னபடி கேட்டால் ஆகிவிடும். நீங்கள் கேட்கத்தான் வேண்டும்!”

“அவசியம் கேட்கிறேன், சொல் தேவி.”

“நாளையிலிருந்து உங்கள் பெயர் நடராஜன். என் பெயர் சிவகாமி.”

“எதற்காக இந்தப் பெயர் மாற்றம்?”

“கலைத் தொழிலை உயர்த்த உலகம் செல்கிறோம் அல்லவா? அதனால்தான் அந்தத் தொழிலுக்கும் உலகத்துக்கும் ஏற்ற இந்தப் பெயர்கள்…”

“சரி! அப்படியே செய்வோம். ஆனால் பூவுலகில் எந்த ஊரில் எந்த இடத்தில் போய் நம்முடைய இந்தப் புதிய கலைத் தொழிலைத் தொடங்குவது…?”

“அதற்கும் இடம் தேர்ந்தெடுத்துவிட்டேன் சுவாமீ! சோழநாட்டில் ‘தில்லையம்பலம்’ என்ற ஓர் இடம் இருக்கிறது. அங்கே நாட்டியமாடுவதற்கு ஏற்ற பொன் வேய்ந்த அரங்கங்களெல்லாம் இருக்கின்றன. தெய்வீகத் தொடர்புடைய புனிதமான ஊர். திருச்சிற்றம்பலம், சிதம்பரம் என்றெல்லாம் அதற்கு வேறு பெயர்கள் உண்டு. உங்களுக்கும் எனக்கும், என் தமையனார் திருமாலுக்கும்கூட அங்கே கோவில்கள் இருக்கின்றன.”

“நல்லது, நாளைக்கே புறப்படுவோம். உலகப் பிரளயத்துக்காகப் பயன்பட்டு வீணாகும் நிருத்திய கலையை உலக நலத்துக்காகச் செலவிடப் பயில்வோம். சுடலை மேட்டில் சாம்பல் பூசி, எலும்பு அணிந்து மண்டையோடு ஏந்திச் சூலமுகம் பிடித்து ஆடிய ஆட்டத்தை, பொன்னம்பலத்தில் சந்தனம் பன்னிர் பூசிச் சர்வாபரணங்களும் அணிந்து மானும் மழுவும் ஏந்தி அழகுக் கலையாக ஆடுகிறேன். நீ ‘சிவகாமியாக’ இருந்து இரசிக்கலாம். முடியுமானால் சேர்ந்து ஆடிக் கற்றுக் கொள்ளலாம்.”

குழப்பம் அடங்கியது. ஓலம் நின்றது. ஓசைகள் நின்றன. பிரளயத்துக்குப் பின் தோன்றிய புதிய உலகம் மழைக்குப்பின் மலர்ந்த மல்லிகைப் பூவைப் போல அமைதியாகக் குளிர்ந்த நிலையில் இருந்தது.

கைலாச சிகரம்! ― அங்கே சூனிய அமைதி நிலவியது. நந்திதேவரின் கம்பீரமான அதட்டல் குரல் கேட்கக் காணோம். முனிகணங்களின் ஓங்கார சப்தம் ஒலிக்கவில்லை. சங்கங்கள் முழங்கவில்லை. மணிகள் நாதத்தால் கீதம் பாடவில்லை. எம்பெருமான் இல்லை, எம்பெருமாட்டி இல்லை. யாருமே இல்லை. சாவு நிகழ்ந்த வீடாக,