பக்கம்:நா. பார்த்தசாரதி சிறுகதைகள் 1.pdf/206

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

204நா. பார்த்தசாரதி சிறுகதைகள்

—————————————————————————

பாழ்பட்டுப் போன வெறுமனையாக, திலகமிழந்த நெற்றி போல, எல்லோரையும் இழந்தும் ― தன்னை இழக்காமல் வெறும் கல்லாய், மலையாய், வீண் நிலமாய், வீற்றிருந்தது கைலாச சிகரம்.

அதற்குப் பெருமை நல்கி வந்த அம்மையும் அப்பனும், அம்மையப்பனைச் சேர்ந்தவர்களும், சேர்ந்தவைகளும், அங்கில்லாமற் போனால் வீண் நிலமாகத்தானே இருக்க முடியும்?

கைலாசம் சூனியமாய்ப் போன அதே நாளில், சூன்யமாக இருந்த சிதம்பரம் கைலாசமாக மாறியது. சிதம்பரத்தில் அன்றைக்கு மழை பெய்தது. அது அதற்கு முன்பு பெய்திருக்க முடியாத புனிதமான மழை. பூக்கள் மலர்ந்தன. அது அதற்கு முன்பு மலர்ந்திருக்க முடியாத புனிதமான மலர்ச்சி. காற்று வீசியது. அது அதற்கு முன்பு வீசியிருக்க முடியாத புனிதமான காற்று. வெயில் எரித்தது. அது அதற்கு முன்பு கொடுத்திருக்க முடியாத புனிதமான ஒளியைக் கொடுத்தது.

ஏன் இந்தப் புதுமை? கைலாசத்தைச் சூனியமாக்கிய தெய்வத் தம்பதிகள் அன்று சிதம்பரத்தைக் கைலாசமாக்கிவிட்டார்கள். எம்பெருமான் நடராஜனாகவும், எம்பெருமாட்டி சிவகாமியாகவும் அங்கே பொன்னம்பலத்தில் குடிபுகுந்துவிட்டனர். கலையை அருளாக வழங்கும் புனிதத் தொழிலைத் தொடங்குவதற்கு வந்துவிட்டார்கள். பிரளயத்தை உண்டாக்கிய கலையைப் பெருமையை உண்டாக்கும் வரப்பிரசாதமாகப் பயன்படுத்துவதற்குத் துணிந்துவிட்டார்கள்.

எம்பெருமான் நடராஜனாகக் கால் மாறி ஆடினான். முன்பு அண்டங்கள் குலுங்க மிதித்த பரதம் இப்போது அரங்கம் மகிழ மதித்து ஆடியது. கனன்ற விழிகள் ஆர்வம் ததும்பும் மனோபாவங்களைப் படம் பிடித்தன. திரிசூலம் வீசிய கரம் விரல்களை வளைத்து அபிநயம் பிடித்தது. அழிவு அழகாகியது!

மனைவி எப்போதும் கணவனின் ரசிகைதானே? சிவகாமி கண்களில் ஆனந்தக் கண்ணீர் மல்க, உடலும் உள்ளமும் புளகிக்கக் கரங்கூப்பி நின்று கொண்டு அந்த நிருத்தியமூர்த்தியின் நிர்மலமான அழகைப் பருகிக் கொண்டிருந்தாள்.

உயிர்கள் எல்லாம் வணங்கிக் களித்தன. உயிர் குலத்தின் பிரதிநிதியாகிய தாயே அவனருகில் நின்று வணங்கிக் களிக்கும்போது உயிர்கள் வணங்காமலிருக்க முடியுமா? ‘நான் அழிக்க முடியும்’ என்ற அகந்தையை நீக்கி, ‘நான் வளர்க்க முடியுமானால் நல்லது’ என்ற அறிவை உண்டு பண்ணிய சக்தியை ஆடிக் கொண்டிருந்த சிவன் பெருமிதத்தோடு நன்றி சுரக்கும் கண்களால் கண்டான். சக்தியின் பவழக் கனியிதழ்களில் நாணம் கோலமிட்டது. சிரம் தாழ்ந்தது. நடராஜன் ஆடினான். சிவகாமி சிரித்துக் கொண்டே அவனை ஆட்டிவைத்தாள். யுக யுகாந்திரங்களாக இந்த திருத்தியம் நடந்து கொண்டிருந்தது.