பக்கம்:நா. பார்த்தசாரதி சிறுகதைகள் 1.pdf/209

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

26. கோலாட்டம்

ப்பசி மாதக் கடைசிப் பருவம் மழை தூறிக் கொண்டிருந்தது. அறையினுள் அமர்ந்து எழுதிக் கொண்டிருந்தேன். எழுதுவதற்கு இதமான சூழ்நிலை. எழுதிக் குவித்த தாள்கள் மேஜையின் மேல் குவிந்து கிடந்தன. தடங்கவில்லாமல் எழுத்து வளர்ந்து கொண்டிருந்தது. இந்த மழைக் காலத்தைப் போல், எழுத்தாளனுக்கு வசதியான காலம் வேறு இருக்க முடியாது. வெளியிலிருந்து தேடி வருகிறவர்கள் இருக்க மாட்டார்கள். வெளியில் புறப்பட்டுச் செல்லவும் தோன்றாது.

இவ்வளவு அருமையான வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுத்த மழையை வாழ்த்திக் கொண்டே இலக்கியப் படைப்பை நடத்திக் கொண்டிருந்தேன். பத்திரிகை ஆசிரியர் ‘கெடு’ வைத்து விட்டார்.இன்னும் பதினைந்து நாட்களில் அந்த நாவலை முழுமையாக முடித்துக் கொடுக்க வேண்டும். இதோ அவருடைய அவசரக் கடிதம் கூட மேஜை மேல் கிடக்கிறது. எந்தக் காரியத்தையுமே சொந்தமாக நன்கு உணர்ந்து செய்வதைக் காட்டிலும் இன்னொருவர் பின்னாலிருந்து தூண்டிக் கொண்டிருந்தால் வேகம் ஏற்படத்தான் செய்யும்! அந்த வேகத்தில் எதையும் மறந்து, எதற்கும் துணிந்து செயல்படும் ஒருவித முனைப்பு உண்டு. அத்தகைய முனைப்போடு குனிந்த தலை நிமிராமல் வெள்ளைக் காகிதத்தில் கற்பனையை வளர்த்து, உருவாக்கிக் கொண்டிருந்தேன். ஆற்று வெள்ளம் போல் கதை போய்க் கொண்டிருந்தது. மழையோடு மழையாக நனைந்து கொண்டே தெருவில் என் வீட்டு வாசலில் பத்துப் பன்னிரண்டு பெண்கள் கோலாட்டம் போட வந்து சேர்ந்தார்கள். நான் உட்கார்ந்து எழுதிக் கொண்டிருந்த அறையின் ஜன்னல், தெருவை ஒட்டி அமைந்திருந்தது.

குனிந்து எழுதிக் கொண்டிருந்தவன், பட்டுப் பாவாடைகளின் சலசலப்பு, வளையல்களின் ஒலி, மல்லிகைப் பூவின் நறுமணம் இவற்றால் கவரப்பட்டுத் தலை நிமிர்ந்தேன். ஜன்னலுக்கு வெளியே தெருவோரமாக அப்பெண்கள் நின்று கொண்டிருந்தார்கள். ஏறக்குறைய அத்தனை பேருமே பெதும்மைப் பருவத்துப் பெண்கள்தாம். அவர்களுடைய வளை குலுங்கும் இளங்கரங்களில், பச்சை, சிவப்பு, மஞ்சள் என்று பல நிறக் கோலாட்டக் குச்சிகள் காட்சியளித்தன. வட்டமாக ஒரு ஒழுங்கில் நின்று கோலாட்டம் போடத் தயாராகிவிட்டார்கள். மழை அவ்வளவாக வலுத்துப் பெய்யவில்லை. தெருவில் அது ஒரு மையமான இடம். கழைக் கூத்தாடி முதல், புடவை ஏலம் போட வருகிற துணி வியாபாரி வரையில் தொழிலைத் தொடங்குவது அந்த இடம்தான். கோலாட்டம் போட வந்த பெண்களும் தெருவுக்கு மையமான அந்த இடத்தைத் தேடிக் கொண்டு வந்து விட்டார்கள். இனி நான் எழுதி உருப்பட்டாற்போலத்தான். இதோ அவர்களுடைய கோலாட்டமும்