பக்கம்:நா. பார்த்தசாரதி சிறுகதைகள் 1.pdf/210

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

208நா. பார்த்தசாரதி சிறுகதைகள்

—————————————————————————

தொடங்கிவிட்டது. குச்சிகள் அடிபடும் ஓசை! கும்பலாகச் சேர்ந்து பாடும் பாட்டின் ஒலி; இரண்டும் செவிகளில் புகுந்து கவனத்தைக் கவர்ந்தன.

கால் மணியாயிற்று, அரை மணியாயிற்று; கோலாட்டம் நிற்கிற வழியாது; காணோம். மழையும் நின்றுவிட்டதால் அந்தப் பெண்கள் உற்சாகம் அடைந்து விட்டனர். ஆளுக்கு ஒரு பாட்டுப் பாடிக் கொண்டு சிரிப்பும், கேலிப் பேச்சுமாக்க் கும்மாளமிடத் தொடங்கிவிட்டனர். எழுத்து துப்புரவாக ஓடவில்லை. பேனாவை மூடி மேஜைமேல் வைத்தேன். எழுதியும் எழுதாமலும் தாறுமாறாகக் கிடந்த காகிதங்களை அடுக்கி வைத்துவிட்டு மறுபடியும் ஜன்னலுக்கு வெளியே பார்த்தேன். ஆத்திரம் பற்றிக் கொண்டு வந்தது. முன்பு பத்துப் பன்னிரண்டு பெண்கள் நின்ற இடத்தில் இப்போது ஏறக்குறைய இருபது பெண்களுக்கும் மேலாக நின்று கொண்டிருந்தனர்.கோலாட்ட ஒலியும், பாட்டொலியும் அவர்களின் தொகைக்கேற்ப அதிகரித்திருந்தன.

பலத்த ஓசை உண்டாகும்படியாக, உட்கார்ந்திருந்த நாற்காலியைப் பின்னுக்கு நகர்த்திவிட்டு எழுந்திருந்தேன். வேகமாக நடந்து தெருவில் இறங்கினேன். “இந்த இடம்தான் உங்களுக்கு அகப்பட்டதோ? எதற்காக என் வயிற்றெரிச்சலைக் கொட்டிக் கொள்ளுகிறீர்கள்? நீங்கள் கோலாட்டம் போடவில்லை என்று இங்கே யார் ஏங்கி அழுதார்கள்? பேசாமல் இப்போதே இங்கிருந்து போகிறீர்களா? தண்ணீரைக் கொண்டு வந்து கொட்டட்டுமா?”

தெருவில் போய் நின்று கொண்டு அதட்டிக் கூப்பாடு போட்டேன். என் சத்தம் அவர்களிடையே அசாதாரணமானதொரு அமைதியை உண்டாக்கியது. கோலாட்டக்குச்சி ஒன்றோடொன்று அடிபடும் ஓசைநின்றது. பாடிக் கொண்டிருந்த வாய்கள் அடைத்துப் போயின. அந்தப் பெண்கள் மிரண்டு போய் என்ன செய்வதென்று தெரியாமல் ஒருவர் முகத்தை ஒருவர் பார்த்துக் கொண்டனர்.

“நீங்கள் போடுகிற சத்தத்தில் உள்ளே உட்கார்ந்து ஒரு வரிகூட எழுத முடியவில்லை. இந்த இடம்தான் உங்களுக்கு அகப்பட்டதா? வேறெங்கேயாவது போகக்கூடாதோ?”

தங்களுக்குள் கசுமுசுவென்று மெல்லிய குரலில் ஏதோ பேசிக் கொண்டார்கள் அந்தப் பெண்கள். இரண்டொரு சொற்கள் என் செவிகளிலும் அரைகுறையாக விழுந்தன.

“அடியே! மாமா கதை எழுதுகிறார் போல் இருக்கிறதடி.”

“நாம் இங்கிருந்து வேறே எங்கேயாவது போய்விடலாமடி.”

“வழக்கமாகக் கோலாட்டம் போடுகிற இடத்தை விட்டுவிட்டால் கூட்டம் கூடாதே?” இப்படி இன்னும் பல குரல்கள் என்னென்னவோ தங்களுக்குள் பேசிக் கொண்டன.

அந்தக் கூட்டத்தில் உயரமாக, நீலச் சிற்றாடை அணிந்து கொண்டிருந்த ஒரு பெண் தயங்கித் தயங்கி நடந்து கெஞ்சும் பார்வையோடு முன்னால் வந்து நின்றாள்.