பக்கம்:நா. பார்த்தசாரதி சிறுகதைகள் 1.pdf/216

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

27. மல்லன் திருவேங்கடம்

மிழ்நாட்டின் பழமையான வீரக் குடிமக்கள் அதிகமாக வசிக்கும் சிற்றூர்களில் அதுவும் ஒன்று. கிழக்கு மேற்காக ஒரே தெரு. நூறு வீடுகளுக்குக் குறையாமல் இருக்கலாம். பெரும்பாலும் குடிசைகள்தாம். இரண்டொரு காரை வீடுகளும் இருந்தன. தோப்பு, துரவு, வயல் வெளிகளோடு ஊர் அழகாகத்தான் இருந்தது.

மேலைக் கோடியில் ஆற்றோரத்தில் விசாலமான தோப்பும், அதன் நடுவே தென்னங் கீற்றுச் சார்ப்பு வேய்ந்து ஆசிரமம் போன்ற கட்டிடமுமாகத் தெரிகிறதே, அதுதான் பயில்வான் திருவேங்கடத்தின் வீடு. வீடு மட்டும் அல்ல; கோதா குஸ்திப் பள்ளிக்கூடம் எல்லாமே அதுதான். தோட்டத்து முகப்பில் தஞ்சாவூர் நந்தியைப் போலக் கொழுகொழுவென்று வளர்ந்த தோற்றத்துடன் தென்னமரத்தில் கட்டிப் போட்டிருக்கும் காளை திருவேங்கடத்தின் வளர்ப்புக் காளை, அந்தக் காளைக்கும் அவனுக்கும் அதிகமான வேறுபாடுகள் இருந்ததாகத் தெரியவில்லை. அது நாலு காலால் நடந்து ஊரில் அட்டூழியம் பண்ணிக் கொண்டிருந்தது. அவன் இரண்டு காலால் நடந்து அதைச் செய்து கொண்டிருந்தான். குடும்பம், குழந்தை, குட்டி இந்த மாதிரிப் பிடுங்கல் எதுவும் இல்லாத தனிக் கட்டை அவன். வயது என்னவோ நாற்பதுக்குமேல் ஆகியிருந்தது. தலைமுறை தலைமுறையாக மல்லர்களை உண்டாக்கிக் கொடுத்த பயில்வான் குடும்பத்துக் கடைசி வாரிசு அவன்.

ஆனால், தட்டிக் கேட்க ஆளின்றித் தனியாக வளர்ந்த விடலைத் தனம் அவனைத் தனி மரமாக வளர்த்து விட்டிருந்தது. ஊரில் அவனை வாத்தியாராக எண்ணுவதற்குப் பத்து, இருபது முரட்டு வாலிபப் பிள்ளைகள் இருந்தனர். குஸ்தி சொல்லிக் கொடுக்கிறேன் பேர்வழி என்று காலையில் இரண்டு மணி நேரம், மாலையில் இரண்டு மணி நேரம் கோதாவின் புழுதி மண்ணில் அவர்களைப் புரள விட்டான் அவன். சில சமயங்களில் அவனுக்கும், அவனுடைய விடலைப் பருவத்துச் சீடர் கூட்டத்திற்கும் உற்சாகம் கிளம்பி விட்டால் பக்கத்து மலைத் தொடரில் வேட்டைக்குப் புறப்பட்டு விடுவதும் உண்டு.

மத்தளம் போல் பருத்த தோள்களும், முன் தள்ளிய பீப்பாய் வயிறும், கரளை கரளையாகச் சதை வைத்த துடைகளுமாகப் பார்த்த மாத்திரத்திலேயே பயில்வான் என்று சொல்லி விடக் கூடிய தோற்றம் அது. எப்போதும் சிவப்பு மிளிரும் குரூரமான கண்கள். சப்பை மூக்கு, நறுக்கு மீசை, முகம் காண்பதற்கு அவ்வளவு அழகு என்று சொல்லத் தகுதியற்றது. அவசலட்சணம் என்றும் சொல்லிவிடுவதற்கில்லை. ஏதோ ஒருவிதமான முகம் அது. உடல் பலத்தின் திமிரையும் தோற்றத்தின் அச்சுறுத்தும் நிலையையும், முரட்டுச் சீடர் கூட்டம் அளித்து வந்த ‘வாத்தியார்’ வீறாப்பையும்