பக்கம்:நா. பார்த்தசாரதி சிறுகதைகள் 1.pdf/217

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

———————————————————

முதல் தொகுதி / மல்லன் திருவேங்கடம் 215

வைத்துக்கொண்டு கரையை அழித்து ஒடிச் சுற்றுப்புறத்தையும் பாழாக்கும் பொறுப்பற்ற காட்டாற்று வாழ்க்கை வாழ்ந்து வந்தான் திருவேங்கடம்.

குஸ்திப் பள்ளிக்கூட சீடர் புடைசூழத் தன் கணங்களோடு படையெடுத்து வரும் அரக்கன்போல் அவன் தெருவின் மேலைக் கோடியிலிருந்து புறப்பட்டுவிட்டான் என்றால் அன்றைக்கு கீழைக்கோடியில் யாருடைய கடை வாய்ப் பற்களோ உதிரப் போகின்றன என்றுதான் அர்த்தம். அதே மாதிரி அவனுடைய வளர்ப்புக் காளை அவிழ்த்துக் கொண்டு புறப்பட்டுவிட்டால் யாருடைய வயலில் பயிர் அழியுமோ, தெருவில் எவருடைய குழந்தை முட்டப்படுமோ; ஒன்றும் உறுதியாகச் சொல்வதற்கு இல்லை. இரண்டு ‘காளைகளு’மாகக் கேட்பாரற்று ஊரை மேய்ந்துகொண்டிருந்தன. அவனுடைய காளையையாவது அவனே பார்த்து எப்போதாவது போனால் போகிறதென்று குஸ்திப் பள்ளிக்கூடத்து வாசலிலுள்ள தென்னைமரத்தில் கட்டிப் போட்டு வைப்பான். ஆனால், அவனை அந்த மாதிரிக் கட்டிப் போட அந்த ஊரில் அதுவரை ஆண்பிள்ளை பிறக்கவில்லை.

ஆண்பிள்ளைகள் இருந்தார்கள். அவர்கள் நியாய அநியாயம் தெரிந்தவர்களாக, நீதி நேர்மை உணர்ந்தவர்களாக; உள்ளத்தால் வாழ்ந்தார்கள். திருவேங்கடத்தைப் போலவே பயில்வான் குடும்பத்துப் பிள்ளைகளும் வேறு சிலர் அந்த ஊரில் இருந்தார்கள். உடலால் வாழும் வலு அவர்களுக்கு இருந்தும் முயன்று பார்த்து அவனை வெல்லமுடியாதென்று அவநம்பிக்கையடைந்து விட்டுவிட்டார்கள். அதன்பின் எல்லோரையும் போல அவர்களும் உள்ளத்தால் மட்டும் வாழத் தொடங்கிவிட்டார்கள்.

முத்துக் கொத்தனார் மகள் ஆற்றோரமாக மணல் அள்ளுவதற்குப் போனாள். திருவேங்கடத்தின் குஸ்திப் பள்ளிக்கூடத்து வேலி ஓரமாக ஒரு கூடை மணலை அள்ளிவிட்டாள். “இங்கே வந்து மணல் அள்ள உனக்கு என்ன தெம்பு?” என்று இரைந்து கொண்டே வயது வந்த பெண்ணாயிற்றே என்றும் பாராமல் தொட்டுக் கன்னத்தில் அறைந்து கூடையைப் பறித்துக் கொண்டு அவளைத் துரத்திவிட்டானாம் திருவேங்கடம்.

கோதாவில் குஸ்தி பழகும் சீடர் கும்பலுடன் நம்பியார் தோப்பில் நுழைந்து திருவேங்கடம் நாற்பது ஐம்பது இளநீரைக் காலி செய்துவிட்டான். தோப்புக்காரர் நியாயம் பேச வந்தபோது, “இந்த இளநீரைச் சீவியது பொய், உன் தலையைச் சீவப் போவது நிஜம். ஜாக்கிரதையாகப் போய்ப் பிழை!” என்று திமிராகப் பதில் சொல்லி அனுப்பினானாம்.

கிராமம் கிராமமாக ஆடிப் பிழைத்துக் கொண்டிருந்த சர்க்கஸ் கம்பெனி ஒன்று அந்த ஊரில் முகாம் இட்டிருந்தது. மலபார்க்கார நாயர் ஒருவருடைய கம்பெனி அது. திருவேங்கடத்தின் கோதா குஸ்திப் பள்ளிக்கூடத்திற்குப் பக்கத்தில் ஆற்றங்கரை மணற்பரப்பில் சர்க்கஸ் கூடாரம் போட்டிருந்தார்கள். உள்ளூர்க் கூட்டமும், அக்கம் பக்கத்துக் கிராமங்களின் கூட்டமுமாகச் சர்க்கஸுக்கு நல்ல வசூல் ஆகிக்