பக்கம்:நா. பார்த்தசாரதி சிறுகதைகள் 1.pdf/218

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

216நா. பார்த்தசாரதி சிறுகதைகள்

—————————————————————————

கொண்டிருந்தது. சர்க்கஸ் வந்த இரண்டு மூன்று நாள் கழித்துக் குஸ்திரு பள்ளிக்கூடத்தில் சாயங்காலம் ‘கோதா’ நடந்து கொண்டிருந்தபோது அதைப் பற்றிப் பேச்சு அடிபட்டது!

“அண்னே! சர்க்கஸில் ஒரு பயில்வான் வந்திருக்கிறான் பாருங்கள், உடம்பு சும்மா தகதகவென்று தங்கம்போல மின்னுகிறது. இருநூறு பவுண்டு எடையைப் பூமாலை போடுவதுபோலத் தலைக்குமேலே தூக்கி அலட்சியமாகக் கீழே போடுகிறான்.”

திருவேங்கடம் அலட்சியமாகக் கேட்கிறவனைப்போலக் கேட்டுக் கொண்டான் இதை.

“அதெல்லாங்கூடவேடிக்கை இல்லை. தன்னுடைய இரண்டு உள்ளங்கைகளிலும் பாதங்களை வைத்துக்கொள்ளச் சொல்லி மோகினி போன்ற ஒரு பெண்பிள்ளையை அப்படியே அந்தரத்தில் தூக்குகிறான் அந்தப் பயில்வான். பிரமாதமான வேலை ஐயா!”

இன்னொருவன் அந்தப் பயில்வானின் பிரதாபத்தைத் தொடர்ந்தான். திருவேங்கடத்தின் கண்களில் பெறாமை மின்னியது. தன்னிடம் குஸ்தி பயிலும் சீடர்கள் தன்பெருமையைத் தவிர இன்னொருவன் பெருமையைப் பேசி அவன் கேட்டதில்லை. சீடர்கள் குஸ்தியையும் மறந்து எவன் பிரதாபத்தையோ அளப்பது அவனுக்குப் பிடிக்கவில்லை. இருந்தாலும் அதை வெளிக்காட்டிக் கொள்ளாதவனைப் போல், “ஏண்டா, கோதாவில் நின்று கொண்டு குஸ்தி பழகுவதையும் மறந்து ஒரேயடியாக அளக்கிறீர்களே! அது யாரடா அவன் ;அப்படிப் பெரிய கொம்பன்.” என்றான்.

“கொம்பன்தானுங்க. நீங்கள் பார்த்தால் அப்படியே அசந்து போவீர்கள்.”

“சீ மூடு வாயை!” திருவேங்கடம் எரிந்து விழுந்தான். சீடர்கள் ‘கப்சிப்’பென்று அடங்கிப் போய் நின்றார்கள். சர்க்கஸ் கம்பெனியின் பாண்டு வாத்திய முழக்கம் அப்போதுதான் ஒலிக்கத் தொடங்கியிருந்தது. இன்னும் சிறிது நேரத்தில் சர்க்கஸ் ஆரம்பமாகப் போகிறது என்பதற்கு முன்னறிவிப்பு அந்த ஒலி.

“டேய் புறப்படுங்களடா; அந்தக் கொம்பனையுந்தான் பார்த்துவிடலாமே!” ― திருவேங்கடத்தின் குரல் மிடுக்கும் கடுப்பும் கலந்து ஒலித்தது. அடுத்த விநாடியில் அரைக்குச் சல்லடம் மட்டும் தரித்துக்கொண்டிருந்த குஸ்தி உடையை நாகரிகமாக மாற்றிக்கொண்டு அந்தக் கூட்டம் சர்க்கஸ் கொட்டகையை நோக்கிக் கிளம்பிவிட்டது.

அசைந்து அசைந்து நடக்கும் மதயானைப்போல் திருவேங்கடம் முன்னால் நடக்க, சீடர் கோஷ்டி பின்தொடர்ந்தது. தூரத்திலிருந்து அதைப் பார்த்த உள்ளூர் ஆட்கள் சர்க்கஸ் கம்பெனிக்காரனுக்காக மனத்தில் அனுதாபப்பட்டுக் கொண்டு ஒதுங்கிச் சென்றார்கள்.

கொட்டகை வாசலில் டிக்கட் சரி பார்த்து உள்ளே விடுகிறவன் அந்தக்கும்பலைத் தடுத்து நிறுத்தினான். கூட்டமாகப் படையெடுத்து வருவதுபோல் இருபது முப்பது பேர் டிக்கட் வாங்காமல் உள்ளே நுழைய முயன்றால் அவன் எப்படி விடுவான்?