பக்கம்:நா. பார்த்தசாரதி சிறுகதைகள் 1.pdf/22

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

20 ★ நா. பார்த்தசாரதி சிறுகதைகள்



முயற்சியிலேயே பெற்றுக் கொள்ளலாம் என்கிற நம்பிக்கை எனக்குப் பிறந்துவிட்டது. என் நண்பர்களில் பலர் அது என் எதிர்காலத்தை ரொம்பவும் பாதிக்கும் என்று கூறி என்னை, மேலும் படிக்கும்படி தொந்தரவு செய்கிறார்கள். ஆனால் எனக்கு விருப்பம் இல்லை. நான் முடிவு செய்துவிட்டேன்.

“எதிர்காலம்” என்று அவர்கள் எந்த அர்த்தத்தில் கூறுகிறார்கள் என்பதை நான் புரிந்து கொண்டேன். “கல்யாண மார்க்கெட்டில் தங்கள் மதிப்பை உயர்த்திக் கொள்வது, ஏதாவது ஒரு உத்தியோகத்தில் ஒட்டிக் கொள்வது. இவ்வளவுதான்” அவர்கள் குறிப்பிடும் எதிர்காலத்திற்கு அர்த்தம் எனக்கு இந்த இரண்டிலும் விருப்பம் இல்லை. காலத்தின் நெஞ்சிலே காலை வைத்து நடக்க வேண்டும் என்று என் மனம் விரும்புகிறது. மனித வாழ்விலே மடியாமை பெற்று மக்கள் மனத்திலே என்றும் விளங்கும் பெரிய காரியம் ஏதாவது செய்யவேண்டும் என்று நான் விரும்புகிறேன்.

நண்ப, அரசியலிலே பிரவேசிக்க எனக்கு ஆர்வம் இல்லை. அது பிளவுகளையும் வேற்றுமைகளையும் பெருக்கிக் கொண்டுதான் இருக்கிறது என்று எண்ணுகிறேன்.என் முழுமுயற்சியையும் கலைத்துறையில் திருப்ப வேண்டும் என்று நான் எண்ணுகிறேன். ஆனால் அதற்காக என்ன செய்ய வேண்டும் என்பதும் என்னால் புரிந்து கொள்ள முடியவில்லை. நான் ஒரு கவிஞனாக வேண்டும் என்று கனவு காண்கிறேன். சிந்தனையில் மின்னொளி கண்டு மக்கள் மனத்தினிலே ஒளி ஏற்றி வைக்க வேண்டும் என்று துடிக்கிறேன். இதற்காகக் கற்பதிலும் கவிதை நெஞ்சோடு பழகுவதிலும் ஈடுபட்டிருக்கிறேன்.

இந்த நிலையில் உங்கள் உதவியை ரொம்பவும் எதிர் பார்க்கிறேன். என் மனம் ஏனோ உங்கள் முன்னால் கட்டுப்படுகிறது எனக்கு நீங்களே யோசனை கூற முடியும் என்று நம்புகிறேன். உங்கள் பதிலை ஆவலுடன் எதிர்பார்க்கிறேன்.

வணக்கம். அன்புடைய நண்பன்,

கணபதி


கணபதிக்கு ராமு பதில் எழுதினான். ரொம்பவும் சுருக்கமாக:

நண்பா,

தங்கள் முயற்சிகளை நான் வரவேற்கிறேன். மக்களுக்கு எது தேவையோ அதைக் காலத்தையும் பண்பையும் அனுசரித்து அளிப்பது தான் கலைஞர்களின் லட்சியமாக இருக்க வேண்டும். இது ஒன்றை மாத்திரம் மனதில் வைத்துக் கொண்டால் போதும் உன்னத வாழ்வை எட்டிப் பிடித்துவிடலாம்.

அடுத்தபடியாக செய்யும் காரியங்களில் தெளிவு வேண்டும்.அவையும் புதிர்களாக இருக்கக்கூடாது. அதற்கு மனதில் தூய்மை வேண்டும். தூய்மை ஒழுக்கத்தின் பயன் ஆகும்.