பக்கம்:நா. பார்த்தசாரதி சிறுகதைகள் 1.pdf/220

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

218நா. பார்த்தசாரதி சிறுகதைகள்

—————————————————————————


“நேற்றுக் கேள்விப்பட்டோமே; இந்த ஊர் பயில்வான் திருவேங்கடம்; அவர்தாம் இவர்.”

“இவள் என்னுடைய தங்கை ஓமனே.”

அப்போது அணிந்திருந்த சர்க்கஸ் உடையில் அவள் மின்னல் கொடி போன்றிருந்தாள். நினைவு தெரிந்த நாளிலிருந்து நாற்பது வயது வரை முரட்டுத் கல்லாகவே இறுகி வந்த திருவேங்கடத்தின் மனத்தில் அதுவரை ஏற்பட்டிராத ஒரு நளினமான நெகிழ்ச்சி பிறந்தது.

“உங்களைப் போன்ற திறமைமிக்க பயில்வான்கள் இப்படிக் கிராமத்து இருளில் மறைந்து வாழக்கூடாது. சரியான இடத்தில், சரியான பதவியில் இருந்தால் எவ்வளவோ பேரும் புகழும் பெற வேண்டியவர் நீங்கள்.” சர்க்கஸ் பயில்வான் ஆர்வத்தோடு பேசினான்.

“எங்கே நமக்கு அதற்கெல்லாம் நேரம் இருக்கிறது? ஏதோ ஊரோடு இருந்து நாலு பிள்ளைகளுக்குக் குஸ்தி சொல்லிக் கொடுத்துக் கொண்டு காலத்தைக் கடத்துகிறேன்.”

பயில்வானின் தங்கை இரண்டு பீங்கான் தட்டுகளில் பிஸ்கோத்தும் தேநீரும் கொண்டு வந்து வைத்தாள்.

“எடுத்துக் கொள்ளுங்கள்.”

“எதுக்குங்க… இதெல்லாம்?”

“எங்கள் அன்பை மறுக்கக்கூடாது!” திருவேங்கடத்தைப் பார்த்து இப்படி வேண்டிக் கொண்டு முல்லை அரும்பைச் சரம் தொடுத்துக்கட்டினதுபோல் சிரித்தாள் அந்தப் பெண்.

திருவேங்கடம் களித்தான். கிளாஸ்கோ பிஸ்கோத்தும் தேநீரும் இனித்தன. பவளம் பூட்டவிழ்ந்து முத்துவரிசை வெளித்தோன்றியது போன்ற செவ்விதழ் விரித்து அந்தப் பெண் சிரித்த சிரிப்போ அவன் உள்ளத்தில் இனித்தது.

“அண்ணா! இன்றைக்கு இவரை மேடையிலேயே உட்காரச் செய்து நம்முடைய ஆட்டத்தைக் காணச் செய்ய வேண்டும். ஆளைப் போக விட்டு விடாதீர்கள்!” அவள் குறும்பு மிளிரும் சிரிப்போடு அண்ணனிடம் கூறினாள்.

“ஓமனே, மேடையில் உட்கார்த்துவதோடு இவரை விடப் போவதில்லை நான். இன்றைக்கு ஆட்டத்துக்கே இவரைத் தலைமை வகித்துத் தொடங்கி வைக்கும்படி செய்யப்போகிறேன். முடிவுரையில் இவர் நமக்கு வாழ்த்துக் கூறுவார்.”

“சபாஷ் சரியான யோசனை!” சிறு குழந்தை போலக் கை கொட்டிச் சிரித்தாள் அவள். தான் மேடையில் உட்கார முடியாதென்றும் கீழேயே உட்கார்ந்து ரசித்துவிட்டுப் போவதாகவும் அவர்களிடம் எவ்வளவோ மன்றாடிப் பார்த்தான் திருவேங்கடம் முடியவில்லை. பயில்வானும் அவன் தங்கை ஓமனேயும் பிடிவாதமாக அவனை மேடையில் கொண்டு போய் உட்கார்த்திவிட்டார்கள்.