பக்கம்:நா. பார்த்தசாரதி சிறுகதைகள் 1.pdf/221

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

முதல் தொகுதி / மல்லன் திருவேங்கடம் ★ 219



சூட்டும் பூட்ஸும் பட்டுக் குல்லாயுமாக அணிவகுத்து வீற்றிருந்த பாண்டு வாத்தியக்காரர்களுக்கு அருகில் காஸ்லைட்டுகளின் கண்ணைக் கூச வைக்கும் ஒளி வெள்ளத்தின் இடையில், கீழே தரையில் உட்கார்ந்திருந்த கூட்டமெல்லாம் பார்க்கும்படி, சோபாவில் மேடைமேல் அமர்ந்திருப்பது என்னவோ போல் இருந்தது. திருவேங்கடத்துக்கு கூட்டத்தில் இருப்பவர்களெல்லாம் தன்னையே பார்ப்பது போல, தன்னைப்பற்றியே பேசிக் கொள்வதுபோல, அவன் மனத்தில் ஒரு பிரமை உண்டாயிற்று. அப்படி அங்கே வீற்றிருக்கத் தான் தகுதியில்லாதவன் போன்றதொரு தாழ்வு மனப்பான்மை அவனுள்ளேயே உண்டாயிற்று.

சர்க்கஸ் பயில்வான் ஆட்டம் ஆரம்பிப்பதற்கு முன்னால் திருவேங்கடத்துக்கு மாலை போட்டான். விழாவைத் தொடங்கி வைப்பதற்காக பேச எழுந்திருந்தபோது திருவேங்கடத்துக்கு வேர்த்துக் கொட்டியது. நடுங்கியது. ஏதோ உளறிக் குழறி ஒருவாறு பேசினான்.

ஆட்டம் ஆரம்பமாயிற்று. பயில்வானின் தங்கை ‘பார்’ விளையாடினாள். குறிவைத்து மரப்பலகையில் கத்தி எறிந்தாள். திருவேங்கடத்துக்கு எல்லாமே ஆச்சரியமாக இருந்தது. ‘அவள் சாதாரணப் பெண்பிள்ளைதானா? அல்லது மந்திர சக்திகள் பெற்ற தேவதையா?’ என்று பிரமித்தான் அவன்.

பயில்வான் எடை தூக்கும் கட்டம் வந்தது. அன்றைக்கு அதிகமாக ஐம்பது பவுண்டு தூக்கிக் காட்டினான் அவன். அதன்பின் கோயில் கருடவாகனம் போல இரண்டு உள்ளங்கைகளையும் முன்புறம் நீட்டிக் கொண்டு கீழே அமர்ந்தான். நீட்டிய கைகளின் மேல் அவனுடைய தங்கை பாதங்களைத் தூக்கி வைத்து ஏறினாள். அப்படியே உள்ளங்கைகளில் அவள் பாதத்தைத் தாங்கி அவளை மேலே தூக்கிக் கொண்டு எழுந்தான் பயில்வான். அந்தக் காட்சியோடு சர்க்கஸ் முடிந்தது. திருவேங்கடம் போன்ற திறமைசாலிகள் இருப்பது ஊருக்கே பெருமை என்றான் சர்க்கஸ் பயில்வான். திருவேங்கடம் தலைமை வகித்ததற்கு நன்றி கூறிப் புகழ்ந்தான். அப்போது கூட்டத்தில் இலேசாகக் கைதட்டல் எழுந்தது. திருவேங்கடத்தின் சீடர்களுடைய கைகள் அவை.

அன்றிரவு தன்னுடனேயே விருந்துண்ட பின்புதான் திருவேங்கடத்துக்கு விடை கொடுத்தான் சர்க்கஸ் பயில்வான். மறுநாள் காலையில் சர்க்கஸ் பயில்வானும், அவன் தங்கையும் திடீரென்று முன் தகவல் இல்லாமல் திருவேங்கடத்தின் குஸ்திப் பள்ளிக்கூட ‘கோதா’வுக்கு விஜயம் செய்துவிட்டனர். சீடப்பிள்ளைகளுக்குப் பெருமை தலைகால் புரியவில்லை.

சர்க்கஸ் பயில்வானின் தங்கை குஸ்திப் பள்ளிக்கூடத்து வாசலில் கட்டியிருந்த காளையைப் பார்த்து ஆச்சரியப்பட்டு, "இது எங்கள் சர்க்கஸில் இருந்தால் இதை வைத்துக் கொண்டு நல்ல வித்தைகளைப் பழக்கிக்காட்டலாம்” என்று வேடிக்கையாகச் சொன்னாள். அதையே வேத வாக்காக எடுத்துக்கொண்டு அன்று மாலையே காளையைக் கொண்டு போய்ச் சர்க்கஸ் கொட்டகையில் கட்டிவிட்டுத்தான் திரும்பினான் திருவேங்கடம்.