பக்கம்:நா. பார்த்தசாரதி சிறுகதைகள் 1.pdf/223

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

28. வழுக்கு மரம்

ந்தப் பெண் சிரித்தாள்!

வெற்றிலை போட்டுக் கொண்ட வெளிர்ச் சிவப்புப் படிந்த அழகான, அளவான பல் வரிசையில் அவளுடைய நெஞ்சின் களிப்பெல்லாம் ஒரு கணம் நிழலாடிமறைந்தன.

அவளுக்கும், எனக்கும் இடையே நாலரை அடி அகலமும் இரண்டு மூன்று அடி நீளமுமுள்ள ஒரு மேஜை கிடக்கிறது. மேஜைக்கு அப்பால் எதிரே மற்றொரு நாற்காலியில் அவள் உட்கார்ந்து கொண்டிருக்கிறாள்.

வெளியே காம்பவுண்டுச் சுவருக்கு அருகில் புழுதி நிறைந்து மேடும், பள்ளமுமாக தூய்மையற்று விளங்கும் கிராமத்துச் சாலையில் அவள் வந்து இறங்கிய அழகான கார் நிற்கிறது. பலாப் பழத்தை மொய்த்துக் கொள்ளும் ஈக்களைப் போல் காரை அதிகம் பார்த்திராத கிராமத்துச் சிறுவர்கள் அருகில் வர அஞ்சி, எட்டி நின்றே வேடிக்கைப் பார்க்கிறார்கள்.

அது ஒரு கிராமத்துப் பள்ளிக்கூடம்! சிறுவர் சிறுமிகளின் குரல்கள், ஆசிரியர்களின் அதட்டல், பிரம்படி ஓசை இவ்வளவும் நிறைந்த சூழ்நிலையின் நடுவே நாங்கள் எதிரும் புதிருமாக உட்கார்ந்து கொண்டிருந்தோம்.

அவள் அமைதியைக் கலைத்துப் பேசினாள்.

“இரயில் பாதைக்கு முப்பது மைலுக்கு இப்பாலும், கார்கள் செல்லும் சாலைக்கு எட்டு மைல் அப்பாலும் உள்ள இந்தப் பட்டிக்காட்டுக் குக்கிராமத்தில் இருந்து கொண்டு உங்களால் எப்படிப் பத்திரிகைகளுக்கு எழுத முடிகிறது?”

“அப்படி இருப்பதனால்தான் நிறைய எழுத முடிகிறது” என்று சிரித்துக் கொண்டே பதில் சொன்னேன்.

நாங்கள் அமர்ந்திருந்த அறையைச் சுற்றிலும் கசுமுசுவென்று பேச்சுக் குரல்கள் கேட்டன. பக்கத்தில் ஆசிரியர்கள் ஒய்வு நேரத்தில் தங்கும் அறை. அதற்கும் நாங்கள் உட்கார்ந்து கொண்டிருந்த இடத்துக்கும் நடுவே இடையிடையே கிழிந்த ஒரு மூங்கில் தட்டியை மறைப்பாக வைத்திருந்தார்கள்.தட்டியின் இடுக்குகள் வழியே எத்தனையோ கண்கள் எங்களைப் பார்த்துக் கொண்டிருக்கின்றன! எத்தனை சிறுவர்கள் அந்தப் பெண் என்னோடு உட்கார்ந்து பேசிக் கொண்டிருப்பதை ஒரு அதிசயமாக எண்ணி நின்று வேடிக்கை பார்க்கிறார்கள்!

தரையில் புரளுவது போல் அணிந்த வாயில் புடவையும் குதிகால் உயர்ந்த, வெள்ளை நாகரிகத்தை வெளிக்காட்டும் பூட்சும், முழங்கை வரை இறுக்கிப் பிடித்த