பக்கம்:நா. பார்த்தசாரதி சிறுகதைகள் 1.pdf/224

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

222 நா. பார்த்தசாரதி சிறுகதைகள்

சோளியுமாக ஒரு அழகிய இளம்பெண் தானே காரை ஓட்டிக் கொண்டு வந்து இறங்கினால் கிராமத்தில் அது ஆச்சரியம்தானே?

"யாரோ ஒரு அம்மா உங்களைத் தேடிக் கொண்டு காரில் வந்து காத்திருக்கிறார்கள்” என்று படிப்பு நடத்திக் கொண்டிருந்த என்னிடம் பள்ளிக்கூடத்துச் சேவகன் வந்து சொன்னதே எனக்கு வியப்புத் தாங்கவில்லை.

துள்ளி எழுந்து வரும் மான்குட்டிப் போல் காரின் முன்புறத்துக் கதவைத் திறந்து கொண்டு அவள் இறங்கினாள்; வணங்கினாள். பதிலுக்கு வணங்கி வைத்தேன். 'வாருங்கள்' என்று கூற நினைத்தேன். சொற்கள் வரவில்லை. 'யார்?’ என்று கேட்க எண்ணியும் கேள்வி வரவில்லை.‘'சகுந்தலை! உங்கள் வாசகர்களில் ஒருத்தி. உங்களை நேரில் பார்த்துவிட வேண்டுமென்று ஆசை. காரை எடுத்துக் கொண்டு வந்தேன்." அவளே முந்திக் கொண்டு சொல்லிவிட்டாள்.

"ஓ! நீங்களா? அடிக்கடி கடிதங்கள் எழுதியிருக்கிறீர்களே?”

"கடிதங்கள் எழுதியது மட்டும் நினைவில் வைத்துக் கொண்டிருக்கிறீர்கள். ஒருவரி பதிலைப் போடுவதற்கு மட்டும் உங்களுக்கு நினைவில்லை போலிருக்கிறது?” குறும்பு கொப்பளிக்கும் குமிண் சிரிப்பு. அதோடு குத்தலாக ஒரு கேள்வி.

“எங்கே பதில் எழுத முடிகிறது?” இந்தப் பதிலில் மட்டுமன்று, இதைச் சொல்லிவிட்டு நான் சிரித்த சிரிப்பிலும் அசடு வழிந்திருக்க வேண்டும். இதற்குள்ளேயே காரைச் சுற்றிலும் பள்ளிக்கூடத்து வாசலிலும் கூட்டம் கூடிவிட்டது.

‘'சகுந்தலை! வாருங்கள் உள்ளே உட்கார்ந்து பேசலாம்.”

அங்கே அப்படிப் பல பேர்கள் கூடிய கூட்டத்துக்கு நடுவில் தெருவில் நின்று அவளோடு பேசுவது என்னவோ போலிருந்தது எனக்கு.ஆகவேதான் அவளை உள்ளே அழைத்துச் சென்றேன். இதுதான் சகுந்தலை என்ற அந்த அழகி என்னைத் தேடிவந்த விவரம்.

உள்ளே அழைத்துச் சென்று எதிரே உட்கார வைத்துப் பேசிக் கொண்டிருந்தேன். நான் எழுத்தாளன். அவள் ரசிகை. அது மற்றவர்களுக்குப் புரிந்தால்தானே? கூடிக் கூடிப் பேசுவதும், குறிப்பாக வந்து எட்டிப் பார்ப்பதும் அநாகரிகமாகப் பட்டது எனக்கு.

பள்ளியில் விடுமுறை பெற்றுக் கொண்டு “வாருங்கள், வீட்டுக்குப் போகலாம்" என்று அவளையும் அழைத்துக்கொண்டு அவள் காரிலேயே வீட்டுக்குப் புறப்பட்டேன். வழியில், வாசலில், தெருவில், எங்கும் ஏதோ நடக்கக்கூடாதது நடந்து அதைப் பார்ப்பதுபோல் ஒரு பார்வை. வீட்டு வாசலில் கார் வந்து நின்ற ஓசையைக் கேட்டு உள்ளே கை வேலையாக இருந்த என் தாய் கதவைத் திறந்தாள். அவளுக்கே ஆச்சரியம், பயம், பிரமிப்பு எல்லாம் ஏற்பட்டிருக்க வேண்டும். நானும், சகுந்தலையும் காரிலிருந்து இறங்கி வீட்டுக்குள் நுழைந்தபோது அம்மாவின் கண்களிலும்

முகத்திலும் ஒடி மறைந்த உணர்வின் சாயல்களைக் கண்டு அதை நான் புரிந்து கொண்டேன்.