பக்கம்:நா. பார்த்தசாரதி சிறுகதைகள் 1.pdf/225

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

முதல் தொகுதி / வழுக்கு மரம் 223

"ஏன் இப்படிக் காணாததைக் கண்டுவிட்டதுபோல் வெறித்துப் பார்க்கிறார்கள்? இந்த ஊர் மக்களின் கண்களுக்கு இலக்கான முதல் மோட்டார் கார் இதுதானா?” வீட்டுக்குள் நுழையும்போது சகுந்தலை சிரித்துக்கொண்டே என்னிடம் இப்படிக் கேட்டாள்.

‘சகுந்தலை இது கிராமம்.இங்கே அறிவைவிட உணர்ச்சிக்குத்தான் அதிக மதிப்பு. நல்லதை நினைக்க எவ்வளவோ நேரமாகும். தீயதை உடனே நினைப்பார்கள்! செய்வார்கள்.”

“கதைகளில் எழுதுவதுபோலவே அழகாகப் பேசுகிறீர்கள்! பேச்சுக்குச் சொல்லவில்லை. உண்மையாகவே சொல்கிறேன்.”

அவள் சிரித்துக்கொண்டே என்னைத் தன் மலர்விழிகளால் பார்த்தாள்.

வரிசை வரிசையாகப் புத்தகங்கள் அடுக்கிய கண்ணாடி பீரோக்களும், மூலைக்கு மூலை குவிந்து கிடக்கும் பத்திரிகைகளும், மாத இதழ்களும்,கடிதங்களும் நிறைந்த என் எழுத்தறைக்குள் அவளை அழைத்துச் சென்று உட்காரச் சொன்னேன். சந்தேகமும், பீதியும், பரபரப்பும் கொண்ட அம்மாவின் முகம் அறைக்குள் அப்போது எங்களை எட்டிப் பார்த்துவிட்டுச் சென்றதைக் கவனித்தேன். சகுந்தலையும் கவனித்தாள் போலும்.

"உங்கள் தாயாரா?"

"ஆமாம்! இங்கே உட்கார்ந்து ஏதாவது படித்துக்கொண்டிருங்கள், இதோ வந்துவிடுகிறேன்."

அவளை அங்கே உட்காரச் செய்துவிட்டு வீட்டின் உட்புறம் சென்றேன். தேன் நாடிப் பசித்துத் திரியும் அழகும் துறுதுறுப்பும் மிக்கவண்டு ஒன்றைத் தேன் துளும்பும் மலர்கள் ஏராளமாகப் பூத்துக் கிடக்கும் ஒரு சோலைக்குள் விட்டுவிட்டு வந்தது போன்ற உணர்ச்சி அப்போது என் மனத்தில் நிறைந்திருந்தது. எல்லைக்கு அடங்காத பெருமித உணர்ச்சி ஒன்று என் மனம் நிறையத் தளும்பி வழிந்து கொண்டிருந்தது என்றும் சொல்லலாம்.

"ஏண்டா! இதெல்லாம் உனக்கே நன்றாயிருக்கிறதா? யாரோ, ஊர் பேர் தெரியாத வயதுப் பெண்ணைக் கூப்பிட்டுக்கொண்டு வந்து இப்படி வீட்டுக்குள் உட்கார்த்திப் பேசுகிறாய்! இதெல்லாம் வீண் பழியாகப் பேச்சுக்களை உண்டாக்கும். நாலுவிதமாக நாக்கில் நரம்பின்றிப் பேசுவார்கள். ஊர் வாயில் விழுந்து கெட்ட பெயரைக் கட்டிக் கொள்ளாதே!

என் நெஞ்சத்துப் பெருமிதங்கள் சுக்கு நூறாக உடைந்து சிதறின. முகத்தைச் சுளித்துச் சினம் பொங்கும் பார்வையால் அம்மாவைப் பார்த்தேன். படபடப்பாகப் பேசி முடித்த சாயலோடு அம்மா எதிரே நின்று கொண்டிருந்தாள்.

நல்லவேளை அம்மா கூறிய இந்த வார்த்தைகள் சகுந்தலையின் செவிகளில் விழுந்திருக்க முடியாது.உள்வீட்டில் அடுக்களையின் ஒரு மூலையில் ஒடுங்கிய குரலில்