பக்கம்:நா. பார்த்தசாரதி சிறுகதைகள் 1.pdf/226

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

224 நா. பார்த்தசாரதி சிறுகதைகள்

என்னை நோக்கிக் கூறப்பட்ட சொற்கள் முன்புற அறையில் வீற்றிருக்கும் அவளுக்குக் கேட்டிருக்க நியாயமில்லை.

"அம்மா! இரையாதே. அந்தப் பெண்ணின் காதில் விழுந்தால் ஏதாவது நினைத்துக் கொள்வாள். பாவம் என்னைப் பார்த்துப் பேசிவிட்டுப் போக வேண்டுமென்று வெகு துரத்திலிருந்து தேடி வந்திருக்கிறாள். காப்பி பலகாரம் தயார் செய் அம்மா!”

என் வார்த்தைகளைக் காதில் வாங்கிக் கொள்ளாமல் மறுபடியும் ஆத்திரப்பட்டுப் பேசினாள் அம்மா. கோபம் குமுறிக் கொண்டு வந்தும் தாயாரிடம் அதை வெளிக் காட்டிக் கொள்ள முடியாமல் தவித்தேன். நீண்ட நேரத் தர்க்க விவாதத்துக்குப் பின் தாயாரிடம் நயந்து பேசி ஒரு வழியாகக் காப்பி பலகாரத்துக்கு ஏற்பாடு செய்துவிட்டு மீண்டும் முன்புறத்து அறைக்குத் திரும்பினேன்.

"சகுந்தலை! நீங்கள்."அவள்முகத்தை ஏறிட்டுப்பார்த்த நான், திகைத்துப் போய்ப் பேச்சைப் பாதியிலேயே நிறுத்திவிட்டேன். தாயாரிடம் சாப்பிடமாட்டேனென்று முரண்டு பிடிக்கும் சிறு குழந்தை போல் முகத்தை 'உம்'மென்று வைத்துக் கொண்டிருந்தாள் அவள். அவள் கையில் தூசி படிந்து சுருண்டு மடிந்த காகிதம் ஒன்று இருந்தது.

எனக்குப் புரிந்துவிட்டது. சில வாரங்களுக்கு முன் வெளி வந்த என்னுடைய சிறுகதை ஒன்றை அவள் மனம் திறந்து பாராட்டி எழுதிய விரிவான கடிதம் அது. கடிதங்களைப் பத்திரப்படுத்தி அழகாக மடித்து 'ஃபைல்' செய்து வைக்கும் 'கெட்ட பழக்கம்' என்னிடம் கிடையாது. அறைக்குள் மூலைக்கு மூலை கவனிப்பாரற்றுச் சிதறித் தூசி படிந்து கிடக்கும் அவை எப்போதாவது இரண்டு மூன்று மாதங்கள் கழித்து அம்மா அறையைப் பெருக்கி மெழுக வரும்போது அவைகளுக்கு விமோசனம் பிறக்கும்.

குழந்தைத்தனமான அவள் இரசிகத்தன்மை, குழந்தைத்தனமான அவள் கோபம், இரண்டையும் எப்படிச் சமாளிப்பதென்றே எனக்கு விளங்கவில்லை.

"சகுந்தலை! வந்து நீங்கள் தப்பாக நினைத்துக் கொள்ளக்கூடாது." நான் சிரித்து மழுப்பிப் பேசி அவள் கோபத்தைத் தணிக்க முயன்றேன்.

"நீங்களெல்லாம் பெரியவர்கள். இலட்சிய எழுத்தாளர்கள். என்னைப்போல் ஒரு அசட்டுப் பெண் பாராட்டித்தான் உங்கள் எழுத்து வளர வேண்டுமா? ஏதோ தத்துப்பித்தென்று எழுதித் தொலைத்திருக்கிறாளே என்று கிழித்துக் குப்பைத் தொட்டியில் போடாத குறையாக வாங்கி மூலையில் போட்டு வைத்திருக்கிறீர்கள்!"

சரியான சவுக்கடி சகுந்தலை என் உள்ளத்தில் மிக மிருதுவான பாகத்தில் அடித்துவிட்டாள். சற்றுமுன் அவள் தேடி வந்தபோது என் மனத்தில் எத்தனை ஆயிரம் பெருமிதக் கனவுகளை அவள் எழுப்பினாள். தற்செயலாக நேர்ந்த ஒரு சிறிய தவற்றினால் அவள் மனத்தை வருத்த நேர்ந்துவிட்டதே. எனக்கே நான் தவறு செய்துவிட்டேனென்று தோன்றியது.