பக்கம்:நா. பார்த்தசாரதி சிறுகதைகள் 1.pdf/227

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

முதல் தொகுதி / வழுக்கு மரம் : 225

பலகாரம் வந்தது; காப்பி வந்தது. சகுந்தலையின் வயிறு நிறைந்திருக்கலாம்! ஆனால் மனம்? அவள் அந்தக் கடிதத்தைப் பார்ப்பதற்கு முன்பிருந்த மலர்ச்சி, சிரிப்பு, குறும்புப் பேச்சு எல்லாம் பார்த்தபின்பு எங்கோ போய் ஒளிந்து கொண்டன. சாயங்காலம் ஐந்து மணி வரை இருந்தாள். பின்பு விடைபெற்றுக் கொண்டு போய்விட்டாள். மனத்தில் குறைவோடு சடைவோடுதான் அவள் போனாள். எனக்கும் புழுதியில் நடந்து வந்த காலோடு பூவை மிதித்துவிட்டதுபோல் - தெரியாமல் மிதித்துவிட்டுத் தெரிந்தபின் அருவருப்பும் தன்னை நொந்து கொள்ளுதலும் அடைவது போல் அந்த நிகழ்ச்சி உள்ளத்தில் தைத்து நிலைத்துவிட்டது.

அன்றிரவு முழுவதும் தூக்கமில்லை. வட்ட முழுமதியும் அதில் கருவண்டுகளாய்ச் சுழலும் கண்களும், அழகும், அளவும் பொருந்திய அந்த செம்பவழமாய்ச் சிறு முறுவலும், நினைவில் வந்து வந்து என்னை நோகச் செய்தன

அமைதியும், மந்தமும் உள்ள கிராமத்தில் நாட்கள் ஆமைகளாய் நகர்ந்தன. திரும்பத் திரும்பக் குசேலர் கதையையும், நளன் கதையையும் அறிவுக் கூர்மையற்ற கிராமத்துச் சிறுவர்களுக்குக் கற்பித்து அலுத்த பள்ளிக்கூடவேலையின் போக்கிலும், எழுத்தின் முனைப்பிலும் அதை மறந்துவிட முயன்றேன்.

இரண்டு மூன்று மாதங்களுக்குப் பின் கடுமையான டைபாய்டு ஜுரத்தினால் ஒரு மாதம் படுத்த படுக்கையாகக் கிடந்தேன். அந்தச் செய்தி எப்படியோ சகுந்தலையின் காது வரையில் நூற்றைம்பது மைல்களைக் கடந்து சென்று எட்டியது போலும்,

"செய்தி கேள்விப்பட்டேன்! தைரியமாக இருங்கள்! மனத்தை அலட்டிக் கொள்ளாதீர்க்ள. உங்களைப் பார்க்க வேண்டும் போலிருக்கிறது. இரண்டு நாட்களில் புறப்பட்டு வருகிறேன்” என்று அவளிடமிருந்து ஒரு கடிதம் வந்தது.

அந்தக் கடிதம் கைக்குக் கிடைத்தவுடன் முன் யோசனையாக மனோதத்துவ ரீதியில் சிந்தித்து ஒரு தந்திரமான காரியம் செய்து வைத்தேன் நான்.

முன்பு எப்போதோ அவள் எழுதியிருந்த பழைய கடிதம் ஒன்றை எடுத்துப் படக் கடையில் கொடுத்து கண்ணாடிச் சட்டம் போட்டுக் கொண்டு வரச் செய்தேன்.முத்து முத்தான அவள் எழுத்துக்களுக்கு மேலே "என் எழுத்து ஏற்றுக் கொண்ட ஈடு இணையற்ற சன்மானம்" என்று தலைப்பு எழுதி அறையில் பார்வையில்படும்படியான இடத்தில் தொங்கவிட்டேன். மறுநாளைக்கு மறுநாள் சகுந்தலை வந்தாள். தொண்ணுாறு நாட்களுக்குப்பின் மறுபடியும் அந்தக் கார் என் வீட்டில் வந்து நின்றது.

அந்த முறை சகுந்தலை நான்கு நாட்கள் என் வீட்டில் தங்கினாள். அப்போது அவளுக்குக் கல்லூரியும் விடுமுறையாக இருந்தது. பி.ஏ. இறுதியாண்டும் எழுதிவிட்டாள். அந்த நான்கு நாட்களும் அவள் ஒடியாடி எனக்குச் செய்த பணிவிடைகளைக் கண்டபோது என் தாய்கூடமனம் மாறிவிட்டாள். சகுந்தலையைப் பற்றிக் கள்ளங்கபடமில்லாத பெண், தங்கமான குணம்,படித்ததற்குக் கொஞ்சமாவது கர்வம் இருக்காதோ?’ என்று என்னிடமே புகழத் தொடங்கிவிட்டாள்.

நா.பா. 1 - 15