பக்கம்:நா. பார்த்தசாரதி சிறுகதைகள் 1.pdf/228

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

226 * நா. பார்த்தசாரதி சிறுகதைகள்

நான் நினைத்தபடி சகுந்தலை என் அறையில் அவள் கடிதத்துக்குத் கிடைத்திருக்கும் மரியாதையையும் பார்த்துக்கொண்டாள். என்னிடம் அவள் அதுை பற்றிக் கேட்கவில்லையானாலும் மழை பெய்த சில நாட்களுக்கெல்லாம் புல்வெளிகளில் தென்படும் பசுமையைப் போல் அவள் அதை என் அறையில் கண்டபின் அவளிடம் நிலவிய மகிழ்ச்சியை நானே பார்த்தும் சிந்தித்தும் அறிந்து கொண்டேன்.

ஐந்தாவது நாள் மாலை அந்தப் பச்சை நிறக் காருக்குள் ஏறிக் கொண்டு இந்தப் பச்சைக்கிளி பறந்து போய்விட்டது.

அதன்பின் ‘சகுந்தலை என்ற கந்தர்வ உலகத்துக் கனவை நான் ஏறக்குறைய மறந்தே போகவேண்டிய சூழ்நிலைகள் என் வாழ்வில் ஏற்பட்டுவிட்டன.

மறு வருடமே நான் நகரவாசியாக மாறிவிட்டேன்.

கிராமத்துப் பள்ளிக்கூட வேலையை உதறிவிட நேர்ந்தது. வேகமும், நின்று நினைக்க அவகாசமும் இல்லாத நகரத்தில் எத்தனையோ புதிய சிநேகிதர்கள், சிநேகிதிகள் எல்லோரும் கிடைத்தார்கள். தை மாதத்தில் எனக்குத் திருமணமும் முடிந்துவிட்டது.

குடும்ப வாழ்வில் இறங்கினேன். பத்திரிகைகளுக்கும், புத்தகங்களுக்கும் எழுதும் வழக்கம் மட்டும் என்றும்போல் அப்படியே இருந்தது. எப்போதாவது ஏதாவதொரு வாசகரிட (பெண் வாசகர்) மிருந்து கடிதம் வந்தால் அப்போது சில விநாடிகள் சகுந்தலை நினைவுக்கு வருவாள். அடுத்த கணமே அந்த நினைவும் மறைந்துவிடும். வயதும், குடும்பப் பொறுப்பும், குழந்தை குட்டிகளும் அதிகமாக அதிகமாக நளினமான நினைவுகளை உல்லாசமாக சிந்தனைகளை எழுதும் ஆற்றல் என்னிடமிருந்து குறைத்து வருவதாக எனக்குத் தோன்றியது. அது என்னுடைய தனிப்பட்ட தாழ்வு மனப்பான்மையோ என்று நினைக்கவும் முடியவில்லை. வரவரப் பெண் வாசகர்களின் பாராட்டே குன்றி வந்தது போல் எனக்கு ஒரு பிரமையும் உண்டாயிற்று.

ஐம்பத்தெட்டு ஆண்டுகள், அரை நூற்றாண்டுக்கும் அதிகம். வெளுத்து நரைத்த தலையும், வரி வரியாய்ச் சுருங்கிய நெற்றியும் எனக்கே என் பொறுப்பை நினைவுபடுத்தும் வயது.

பதினெட்டு வயதில் எனக்கு ஒரு பெண். அவளுக்கு வரன் தேடி ஊரூராய் அலைந்துகொண்டிருக்கிறேன். எழுத்தாளன் பெற்ற பெண் என்றால் மாப்பிள்ளைகள் போட்டி போட்டுக்கொண்டா வருகிறார்கள்? புகழ் வேறு! பணம் வேறு ஐயா! இரண்டும் இரு வேறு உலகத்து இயற்கை.

கும்பகோணத்தில் ஒரு வரன் குதிரும் போலிருந்தது. பார்த்துப் பேசிவிட்டு ஊர் திரும்பினேன். இரவு ரயிலில் கூட்டமில்லை. திருமணச் செலவுகள் பற்றி யோசித்துக் கொண்டே ரயிலில் அலுப்பு மிகுதியால் கண்ணயர்ந்துவிட்டேன். அந்தக்