பக்கம்:நா. பார்த்தசாரதி சிறுகதைகள் 1.pdf/229

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

முதல் தொகுதி / வழுக்கு மரம் * 227

'கம்பார்ட்மெண்டு' முழுவதும் அநேகமாகக் காலியாகத்தான் இருந்தது. வண்டி புறப்பட்ட பின் அடுத்தடுத்து வரும் ஸ்டேஷன்களில் யார் யாரோ ஏறினார்கள் போலிருக்கிறது. எனக்குத் தூக்கக் கலக்கம். பேச்சுக்குரல்கள், குழந்தையின் அழுகை எல்லாம் எழவே தூக்கம் கலைந்து சும்மா கண்ணை மூடிக் கொண்டு படுத்திருந்தேன்.

"ஏண்டி தடிக்கழுதை! எப்போதிருந்து சொல்லிக் கொண்டு வருகிறேன் நான்? கண்டவன் எழுதின குப்பைப் புத்தகத்தையெல்லாம் படித்து ரயிலில் கண்ணைக் கெடுத்துக்கொள்ளாதே தலையைச் சுற்றி வெளியில் எறிந்துவிட்டுத் துங்கு!" வயதான, பெண் குரல் ஒன்று ரயில் ஒடும் 'கடக், கடக்' ஓசையையும் மீறிக் கூப்பாடு போட்டு இறைந்தது. மெல்லக் கண்களைத் திறந்து எதிர்வரிசைப் 'பெஞ்சை'ப் பார்த்தேன்.

என் நெஞ்சில் யாரோ ஓங்கி அடிக்கிற மாதிரி இருந்தது. காரணம் அந்த யுவதி கையில் வைத்துப் படித்துக்கொண்டிருந்தது நான் இளம் வயதில் எழுதிய நாவல். காதற்சுவையைச் சித்தரிப்பதில் இணையற்ற நவீனமென்று பத்திரிகைகளில் மதிப்புரை பெற்று ஆறேழு பதிப்பு விற்ற புத்தகம் அது! ஆ! இன்னொன்றும் நினைவுக்கு வருகிறது இப்போது. இந்தப் புத்தகத்தைப் படித்துவிட்டுத்தான் சகுந்தலை என்ற பெண் முதன்முதலாக எனக்குக் கடிதம் எழுதினாள். என்னைத் தேடி ஒரு நாகரிகமான பெண் வந்ததைப் பார்த்து அந்தக்காலத்தில் சினிமாவும் தினப்பத்திரிகையும் நுழைய முடியாத அந்தக் கிராமத்து மக்கள் ஆச்சரியப்பட்டுப் போனார்கள்.

ஏன்? நானே அவளையும் அவள் வந்திருக்கிற விஷயத்தையும் பார்த்து ஆச்சரியப்பட்டுப் போனேன். என்னைத் தேடி வந்திருக்கும் ரசிகைதான் எவ்வளவு அழகானவள்! எத்தகைய இலக்கியப் பண்பு நிறைந்த நளினமான உள்ளம் படைத்தவள்! புத்தம் புதிய காரிலே தானே சவாரி செய்து கொண்டல்லவா என்னைத் தேடி வந்திருக்கிறாள்.இந்த வாலைப் பருவத்துக் குமரிக்குத்தான் எவ்வளவு துணிச்சல் நான் பாக்கியசாலி! உலகத்திலேயே பெரியவன். 'காளிதாசனுக்கு சகுந்தலை என்ற பெயரில் ஒரு கதாபாத்திரம்தான் கிடைத்தாள், எனக்கோ ஒரு ரசிகையே கிடைத்திருக்கிறாள்!:” என்றெல்லாம் எண்ணி எண்ணி வியந்து போனேன். அதன்பின் அவள் என்னிடம் எவ்வளவோ நெருங்கிப் பழகினாள்.

அவ்வளவு அருமையான நாவலை இழித்துப் பேசிய அந்த மூதாட்டியின் முகம் எப்படி இருக்கிறது என்று நன்றாக எழுந்து உட்கார்ந்து திரும்பிப் பார்த்தேன். பார்த்த கண்களை பார்த்துக்கொண்டே இருந்தன. அடுத்த கணம் என் நெஞ்சைக் கிழித்துக் கொண்டு, “சகுந்தலை நீயா? நீயா இப்படிச் சொன்னாய்!” என்ற அலறல் கிளம்ப இருந்தது. அதிகச் சிரமப்பட்டு என் உணர்ச்சிகளை அடக்கிக் கொண்டேன். "கண்ட கண்ட புத்தகத்தைப் படித்துக் கெட்டுப் போகாதே" என்று தன் மகளை அக்கறையோடு கடிந்து கொண்ட அந்தத் தாய் யார் தெரியுமா?

வேறு யாருமில்லை! சகுந்தலையேதான்! ஒரு காலத்தில் படிப்பும், அழகும், முற்போக்கும் கொண்ட புதுமைப் பெண்ணாக விளங்கிய சகுந்தலை இன்று எல்லா விதத்திலும் உருமாறிப் போய்விட்டாள். பெற்றுப் பட்டு, வாழ்ந்து தாயாகிப்