பக்கம்:நா. பார்த்தசாரதி சிறுகதைகள் 1.pdf/231

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

29. ஆத்மாவின் குரல்

ந்தச் சிறிய கிராமத்தின் குறுகலான தெருவில் அத்தனை பிளஷர் கார்கள் நிற்பதற்கு இடம் போதவில்லை. சிறிதும், பெரிதுமாக, பழைய மாதிரியும், புதிய மாதிரியுமாக எத்தனை நிறங்களில் எத்தனை விதங்களில் அவை தெருவை அடைத்துக் கொண்டு நிற்கின்றன?

“எவ்வளவு பெரிய வித்துவான் அவர்? சிஷ்யர்களெல்லாம் தேடிக் கொண்டு வந்திருக்கிறார்கள் போலிருக்கிறது! இன்றைக்கு அறுபதாண்டு நிறைவு நாளில்லையா? அதனால் குருவைத் தரிசித்து விட்டு, அவரவர்கள் தங்களாலானதைச் செய்து விட்டுப் போகலாமென்று வந்திருப்பார்கள்.”

“யார்? அருள் நந்திக்குத்தானே? மனிதர் முரட்டுச் சுபாவமுள்ளவராயிற்றே? இதெல்லாம் அவருக்குப் பிடிக்காதே? பம்பாய், டில்லி, மதராஸ், பாலக்காடு, எங்கெங்கேயிருந்தெல்லாமோ சிஷ்யர்கள் பொன்னும் பணமுமாகக் குவிப்பதற்கு ஓடி வந்திருக்கிறார்கள். மனமிருந்தால் வீட்டுக்குள் விடுவார்; இல்லாவிட்டால், ‘இதையெல்லாம் கொண்டு போய்க் குப்பையில் கொட்டுங்கள்’ என்று கோபமாகக் கத்தித் துரத்தி விடுவாரே! இவ்வளவு பிடிவாதக்காரரை நான் எங்கேயுமே பார்த்ததில்லை. ஞானம் இருந்தால் மனிதனுக்கு இவ்வளவு கர்வமும் இருக்க வேண்டுமா?”

“அந்தக் கர்வம்தானே மனிதரை இத்தனை வருடங்களாகச் சோற்றுக்குத் திண்டாட வைத்திருக்கிறது? இவருக்கு இருக்கிற ஞானத்துக்குக் கூப்பிட்ட கச்சேரிகளுக்கு ஒழுங்காகப் போயிருந்தால் இதற்குள் லட்சம் இலட்சமாகக் குவித்திருக்கலாமே? சிஷ்யர்களுக்குத்தான் குறைவா என்ன? ஒவ்வொருவரும் மாதத்திற்கு ஆயிரம் இரண்டாயிரம் என்று சம்பாதிக்கிறார்கள். சினிமாவிலும், ரேடியோவிலுமாக, ஒவ்வொருத்தரும் பெரிய இடங்களில் அண்டியிருக்கிறார்கள்.”

“சிஷ்யர்கள் யாராவது செலவுக்கு வைத்துக் கொள்ளச் சொல்லி இருநூறு, முந்நூறு மணியார்டர் செய்தால், மணியார்டரை வாங்கிக் கொள்ள மாட்டேனென்று மறுத்துத் திருப்பி அனுப்பி விடுவாராமே?”

“அதையேன் கேட்கிறீர்கள்? போன வருஷம் இவரிடம் படித்த சிஷ்யன் ஒருத்தன் ஐயாயிரம் ரூபாய்க்கு ஒரு செக் எழுதி அனுப்பியிருந்தான். சினிமாவில் பின்னணி பாடி ஏராளமான புகழும், பணமும் சம்பாதிக்கிறான் அவன். இந்த மனிதர் என்ன செய்தார் தெரியுமா? அந்தச் செக்கை நாலு துண்டாகக் கிழித்து, இன்னொரு கவருக்குள் வைத்து, அவனுக்கே திருப்பியனுப்பி விட்டார். எவ்வளவு திமிர் இருக்க வேண்டும் இவருக்கு?”