பக்கம்:நா. பார்த்தசாரதி சிறுகதைகள் 1.pdf/232

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

230 நா. பார்த்தசாரதி சிறுகதைகள்

“ஊம்! ஏதாவதொரு கலையில் அபாரமான ஞானமிருந்து விட்டால், அவர்களெல்லாம் இப்படித்தான் விநோதமாகப் பைத்தியம் போல் நடந்து கொள்கிறார்கள்.”

‘'பைத்தியமென்றாலும் இந்த அருள் நந்தியைப்போலப் பைத்தியம் நான் பார்த்ததே இல்லை. இருபத்தைந்து வயதிலிருந்து இன்றைக்குத் தேதி வரை இந்த முப்பத்தைந்து வருடங்களில் ஐம்பது பேர்களாவது இந்த பஸ், இரயில் போக்குவரவில்லாத குக்கிராமத்தைத் தேடி வந்து இவரிடம் படித்துவிட்டுப் போயிருப்பார்கள். இவரிடம் ஆறு மாதம், மூன்று மாதம், வேட்டி துவைத்துப் போட்டுக் கொண்டிருந்தவன்கூட அரைகுறை சாரீரத்தை வைத்துக் கொண்டு, பத்து விரலிலும் வைர மோதிரம் மின்ன, பட்டு அங்கவஸ்திரத்தைப் போட்டுக் கொண்டு திரிகிறான். இவர் அந்தப் பழைய நீர்க்காவி வேஷ்டியும், காஞ்சீபுரம் பட்டைக் கரைத் துண்டுமாக ஒருவேளை சாப்பிட்டுக் கொண்டு உட்கார்ந்திருக்கிறார்.”

“விட்டுத் தள்ளு பேச்சை! உலகம் தெரியாத மனிதரைப் பற்றிப் பேசி என்ன பிரயோசனம்?" இவ்வளவும் அந்தக் கிராமத்தில் தெருவோடு போய்க் கொண்டிருந்த யாரோ இரண்டு பேருக்கும் இடையே நிகழ்ந்த உரையாடல். தெருவோடு போய்க் கொண்டிருந்தவர்கள், கார்களையும், அருள்நந்தியின் வீட்டு வாசலில் கூட்டத்தையும் பார்த்துவிட்டுத் தங்களுக்குள் தற்செயலாக இப்படிப் பேசிக் கொண்டு போனார்கள்.

அருள்நந்தி பூஜையறைக்குள் தியானத்தில் அமர்ந்திருந்தார். தியாகராஜ சுவாமிகளின் பெரிய படம் பூமாலையால் அலங்கரிக்கப் பெற்றுச் சுவரில் காட்சியளிக்கிறது. தீட்சிதர் படமும் சியாமா சாஸ்திரி படமும் இன்னொரு புறம் காட்சியளிக்கிறது. நடராஜர் படம், கலைமகள் படம், இன்னும் எண்ணற்ற சங்கீத உலக மேதைகளின் படங்கள் அறை முழுவதும் காட்சியளிக்கின்றன.

தூபக்காலில் இருந்து சாம்பிராணிப் புகை சுருள் சுருளாக எழுந்து பரவிக் கொண்டிருக்கிறது. உடை கழித்த கன்னிப்பெண்ணின் உடல்போல், புனிதமான வீணை உறை கழித்து, அவருக்கு முன் வைக்கப்பட்டிருந்தது. இன்னொரு புறம் பழமையான சங்கீத ஏட்டுச் சுவடிகள். அந்த அறையின் காட்சிகளை சூழ்நிலையைப் பார்க்கும்போதே மனத்தில் ஒரு பயபக்தி தானாகவே ஏற்பட்டது.அந்த அறை அப்படி ஏற்படுத்தியது என்று சொன்னாலும் பிழையில்லை. எல்லாவற்றிற்கும் மேலாகத் தியாராஜ சுவாமிகளின் படத்திற்கு மேல் காவிநிற எழுத்துக்களில் எழுதப்பட்டிருந்தன அந்த வாக்கியங்கள்! எப்படிப்பட்ட கல் நெஞ்சனுக்கும் அவற்றைப் படித்தவுடன் உடல் புல்லரிக்கும். நெஞ்சு சிலிர்க்கும்! ஆகா! சாதாரண வாக்கியங்களா அவை? அட்சர லட்சம் பெறும் பொன்மொழிகளல்லவா? முப்பத்தைந்து தை மாதப் பிறப்புக்கள் அந்த வாக்கியங்கள் அவருடைய பூஜையறையில் எழுதப்பட்டபின் வந்து போயிருக்கின்றன. ஒவ்வொரு தை மாதப் பிறப்பின்போதும் அறைக்குப் புதிதாக வெள்ளையடிப்பதுண்டு. அப்போதெல்லாம் அந்த வாக்கியங்களை அதே இடத்தில் அதே தியாகராஜர் படத்திற்குமேல் மீண்டும் எழுதச் செய்வது அவருடைய வழக்கம்!