பக்கம்:நா. பார்த்தசாரதி சிறுகதைகள் 1.pdf/233

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

முதல் தொகுதி / ஆத்மாவின் குரல் * 231

அந்த எழுத்துக்கள் சிறிது மங்கினால்கூட அவருக்குப் பொறுக்காது. அப்படி என்ன விந்தை அந்த வாக்கியங்களில் அடங்கியிருக்கிறது? பார்க்கலாமே!

'சங்கீதம் ஆத்மாவின் குரல் ஆத்மாவைக் காட்டிலும் உயர்ந்ததை ஆத்மாவினால் எட்டிப் பிடிக்க முடியாததை உரக்கக் கூவி அழைப்பதற்கு அதைப் பயன்படுத்த வேண்டும். காசுக்காக அல்ல!’

எங்கெங்கிருந்தெல்லாமே வந்திருந்த சிஷ்யர்கள், பயபக்தியோடு மேல் வேஷ்டியை அரையில் கட்டிக் கொண்டு பூஜை அறை வாசலில் நின்றார்கள். சிஷ்யைகளான பெண்மணிகளும் இரண்டொருவர் வந்திருந்தனர்.அவர்களும் அடக்க ஒடுக்கமாக நின்று கொண்டிருந்தனர். ஒவ்வொருவரும் குருநாதரின் அறுபதாண்டு நிறைவு விழாவில் அவருக்குக் கொடுப்பதற்காக ஆயிரக்கணக்கில் செலவழித்து ஒவ்வொரு பொருளை வாங்கிக்கொண்டு வந்திருந்தார்கள். பணமாகக் கொடுத்தால், அவர் வாங்கமாட்டாரென்று அவர்களுக்குத் தெரியும்.அதனால்தான் பொருள்களாக மாற்றிக் கொண்டு வந்திருந்தனர்.

அவர்களில் ஒருவர் பத்தாயிரம் ரூபாய்க்குப் பவுன்களாக வாங்கி, அந்தத் தங்கம் முழுவதையும் சிறு சிறு காசுகளாக அடித்து ஒரு சிறு பட்டுப்பை நிறைய அடைத்துக் கட்டிக் கொண்டு வந்திருந்தார்; குருவை உட்காரச் சொல்லி, அப்படியே கனகாபிஷேகம் செய்ய வேண்டுமென்பது அவருடைய ஆசை. இன்னொருவர் கல் மூவாயிர ரூபாய் பெறுமானமுள்ள இரண்டு புஷ்பராகக் கற்கள் வாங்கிக் குருவினுடைய காதுகளில் அணிவிப்பதற்காக இரண்டு வைரக் கடுக்கண்கள் செய்து கொண்டு வந்திருந்தார். வேறொருவர் தந்தத்தில் வெற்றிலைப் பெட்டியும், தங்கத்தில் சிறிய சுண்ணாம்புச் சிமிழும் வெள்ளியில் பாக்குவெட்டியும் செய்து கொண்டு வந்திருந்தார். ஒரு பெண் - சமீபத்தில் அவரிடம் வந்து முறையாகப் படித்து வெளியேறிய சிஷ்யை இரண்டாயிரம் ரூபாய்க்கு வெள்ளிப் பாத்திரங்களாக வாங்கிக் கொண்டு வந்திருந்தாள். இன்னொரு சிஷ்யை புது மாதிரி ஒரு வீணைசெய்து, அதன் குடத்தில் (பத்தரில்) அறுபது நல்முத்துக்களை, அவருக்கு அறுபது வயது ஆனதற்கு அடையாளமாகப் பதித்துக் கொண்டு வந்திருந்தாள். டில்லி ரேடியோவில் வேலை பார்க்கும் சிஷ்யர் தங்கத்தில் சிறிய தாஜ்மஹால் உருவமும் ஆயிர ரூபாய்க்கு மேல் விலையுள்ள ஒரு காஷ்மீர் சால்வையும் வாங்கி வந்திருந்தார்.

இன்னும் எத்தனை எத்தனையோ? கூடை கூடையாகப் பழங்கள்! கூடை கூடையாகக் காய்கறிகள்! கூடைகூடையாகச் சந்தனம்-மல்லிகை-ரோஜாமாலைகள்!

எல்லோரும் எல்லாவற்றோடும் காத்துக் கொண்டிருந்தனர். ஆவல் அலை மோதும் உள்ளங்களில் குரு பத்தியின் சுமையோடு நின்றனர். அவர்கள் வந்ததே அவருக்குத் தெரியாது. வரப்போவதும் முன்கூட்டித் தெரியாது. அவருடைய முரண்டும், பிடிவாதமும்தான் எல்லோருக்கும் தெரியுமே! அதனால் அவர் எதிர்பாராமலிருக்கும் போது திடீரென்று போய்த் தங்கள் அன்பைச் செலுத்திவிட வேண்டுமென்று ஒடோடி வந்திருந்தனர் அவர்கள். அவர் இன்னும் தியானம் கலைந்து