பக்கம்:நா. பார்த்தசாரதி சிறுகதைகள் 1.pdf/234

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

232 * நா. பார்த்தசாரதி சிறுகதைகள்

கண்களைத் திறக்கவில்லை.மூடிய கண்கள் மூடினபடியே இருந்தன.கை, வீணையைத் தேடி எடுத்து, விரல்களால் வருடியது.

அடுத்த கணம் அந்த அறையிலிருந்து கல்லை, மரத்தை, மண்ணை, ஏன் காசினியை முழுதும் அடிமை கொள்ளும் நாதவெள்ளம் பெருகிப் பாய்ந்தது.

‘ராம நன்னு ப்ரோவரா!' நின்று கொண்டிருந்தவர்கள் மூச்சு விடுகிற ஒசைகூடத் கேட்காமல் நாதப் பிரம்மத்தின் சுருதி வெள்ளத்தில் யான், எனதென்ற உணர்வற்றுக் கட்டுண்டு கிடந்தனர். பேச்சொடுங்கி மூச்சொடுங்கிப் புலன்களொடுங்கி நின்றனர் அவர்கள்.

நேரம் ஆகிக் கொண்டே இருந்தது. நாதத்தின் வெள்ளம் அலை அலையாக உயர்ந்து, அந்த அறையிலிருந்து பாய்ந்து கொண்டே இருந்தது.

பாட்டா அது? அறுபது வயது வாழ்ந்து மூப்படைந்த தொண்டையில் பிறக்கிற சாரீரமாகவா இருந்தது? ஒர் ஆத்மா தன் நாதத்தால் பல்லாயிரம் பேராத்மாக்களைக் கூவிக் கூவி அழைக்கிறதோ? அமுதம் மடை உடைந்து பாய்கிறதோ?

இரண்டு மணி நேரமாயிற்று அந்த ஒரு கீர்த்தனை முடிய. அருள்நந்தி மெல்லக் கண்களைத் திறந்தார். அவர் பார்வை தியாகராஜ சுவாமிகளின் படத்தில் நிலைத்து, அதற்குமேல் எழுதியிருந்த எழுத்துக்களில் பதிந்து, பின் வாயிற் பக்கமாகத் திரும்பியது.

"அடேடே! நீங்களெல்லாம் எப்போது வந்தீர்கள்?”

"அண்ணா பாடத் தொடங்குவதற்குச் சிறிது நேரத்துக்கு முன்னாலேயே வந்துவிட்டோம்!” சிஷ்யர்களில் ஒருவர் அவருக்குப் பதில் சொன்னார்.

“என்ன காரியமோ?”

‘அண்ணாவுக்கு இன்றைக்கு அறுபதாண்டு நிறைகிறது இல்லையா? சிஷ்யர்கள் எல்லாம் வந்து தரிசித்து, ஆசீர்வாதமும் அனுக்கிரகமும் பெற்றுக் கொண்டு போகலாமென்று வந்தோம்”

“ஏண்டா இந்த அறுபது வயது எனக்கா என் சாரீரத்துக்கா?” அருள்நந்தி வேடிக்கையாகச் சிரித்துக் கொண்டே, அவர்களைப் பார்த்துக் கேட்டார்.

"அபசாரம்! அபசாரம் அண்ணாவின் சாரீரத்துக்கு வயது ஏது? இதோ இந்த ஒரு கீர்த்தனையை இவ்வளவு நேரம் கேட்பதற்கு ஜன்ம ஜன்மாந்திரங்களில் நாங்கள் எவ்வளவோ புண்ணியம் செய்திருக்க வேண்டும்!” ஒருவர் விநயமாகப் பவ்வியத்தோடு அடக்க ஒடுக்கமாகப் பதில் சொன்னார்.

அருள்நந்தி அதைக் கேட்டுச் சிரித்துக் கொண்டார்.

“எல்லாரும் செளக்கியமாக இருக்கிறீர்களோ இல்லையோ?” மொத்தமாக விசாரித்தார்.

‘'அண்ணாவின் கிருபையால் ஒரு குறைவுமில்லை. எல்லாம் இவ்விடத்து ஆசீர்வாதப் பலன்தான்.”