பக்கம்:நா. பார்த்தசாரதி சிறுகதைகள் 1.pdf/236

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

234 : நா. பார்த்தசாரதி சிறுகதைகள்

கூடத்திலிருந்த விறகு அடுக்கின்மேல் கிடந்த கோடாரியைக் கையில் தூக்கி விட்டார் அவர்,

ஒவ்வொருவராகத் தெரு வாசலை நோக்கி நகர்ந்தனர். அடுத்த ஐந்தாவது நிமிஷத்தில் அந்தக் குறுகலான தெருவில் ஒரு பிளஷர் கார் கூடத் தென்படவில்லை. கார்கள் புறப்பட்டபோது கிளம்பிய தெருப்புழுதிதான் மேலெழுந்து வட்டமிட்டுச் சுழன்று கொண்டிருந்தது.

இரண்டொருவர் மறந்து போய் வைத்துவிட்டுப் போய்விட்ட பழக்கூடைகள் வீட்டு வாசல் வழியே நடுத்தெருவில் வந்து விழுந்தன.

பத்து நிமிஷத்தில் அந்த வீட்டில் கலகலப்பு ஒய்ந்து, சூனிய அமைதி நிலவியது.

சாந்தமடைந்து மறுபடியும் பூஜையறைக்குள் போய் உட்கார்ந்தார் அருள்நந்தி, வீணையை மடியிலெடுத்து வைத்துக் கொண்டார், ஒரு செல்லக் குழந்தையை எடுத்து வைத்துக் கொள்வதுபோல.

அந்தச் சமயத்தில் சமையலறையிலிருந்து அவருடைய தர்மபத்தினி தலையை நீட்டினாள். கவலை தோய்ந்த அந்தப் பதிவிரதையின் முகத்திலிருந்து துயரம் பதிந்த விழிகளின் பார்வை அவரையும் அவர் கையிலிருந்த வீணையையும் மாறி மாறிப் பார்த்தது. அவரும் அவளைப் பார்த்துவிட்டார்.

“என்ன? உனக்கு என்ன வேண்டும்?”

“அடுப்பில் உலை கொதிக்கிறது:”

"கொதித்தால் கொதிக்கட்டுமே”

“போடுவதற்கு ஒரு மணி அரிசிகூட வீட்டில் இல்லை”

கேட்டுவிட்டு அவர் கலகலவென்று வாய்விட்டுச் சிரித்தார்.

“சபாஷ்! இப்போதுதான் உண்மைக் கலைஞனுடைய வீடு இது! வா நீயும் இப்படி வந்து எனக்கெதிரே உட்கார் இருவருடைய பசிக்கும்போதுமான அமுதம் என்னிடம் இருக்கிறது.”

அந்த அம்மாள் தயங்கினாள்.

“வந்து உட்காரப் போகிறாயா இல்லையா?” இரைந்து ஒர் அதட்டுப் போட்டார் அருள்நந்தி. அவர் மனைவி பயந்துபோய் அவரெதிரே உட்கார்ந்தாள். “இதோ கேள்! பசிக்கு அமுதம்”

“நாத தனு மனுஸம்.... வீணையின் இனிய ஒலியோடு அவருடைய கண்டத்தின் அமுத ஒலியும் இணைந்து தொடங்கியது.இனி அந்த ஒலிக்கு முடிவு ஏது? ஆத்மாவின் குரல் அல்லவா அது?

(கல்கி, 1958)