பக்கம்:நா. பார்த்தசாரதி சிறுகதைகள் 1.pdf/237

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

30. மூவரை வென்றான்

துரையிலிருந்து தென்காசி செல்லுகிற மங்கம்மாள் சாலையில் கல்லுபூபட்டி என்ற ஊருக்கும் ஸ்ரீவில்லிபுத்தூருக்கும் இடையில் ஒரு கிராமம் இருக்கிறது. சாலை தெற்கு வடக்காகச் செல்கிறது. சாலையின் மேல் மேற்கு நோக்கி நிறுத்தப்பட்டிருக்கும் ஒரு கைகாட்டி மரத்தில் ‘மூவரை வென்றான்-1 மைல் 4 பர்லாங்கு’ - என்று கறுப்புத் தார் பூசிய மரச்சட்டத்தில் வெள்ளை வார்னிஷால் பளிச்சென்று எழுதப்பட்டிருக்கும்.

நான் அடிக்கடி இந்தச் சாலை வழியே பஸ்ஸில் பிரயாணம் செய்கிறவன். ஏதோ ஒரு கிராமம் மேற்கே ஒன்றரை மைலில் இருப்பதாகவும், அந்தக் கிராமத்தின் பெயர்தான் அது என்றும் முதல் முதலாக நான் விசாரித்த போது அந்த ஊரைப் பற்றி ஒரு அன்பரிடம் அறிந்து கொண்டேன்.

பெயரைப் படித்தால், அந்தப் பெயர் அப்படிப்பட்ட ஒரு குக்கிராமத்திற்கு ஏற்பட்டிருப்பதில் ஏதாவதொரு காரணமோ, கதையோ அடங்கியிருக்க வேண்டுமென்று நம்பினேன் நான். 'மூவரை வென்றான்’- என்ற அந்தப் பெயர் அமைந்திருக்கிற விதத்திலிருந்து, பூர்வ சரித்திர நிகழ்ச்சியால் ஏற்பட்டதாகவும் இருக்கலாம் என்று கூடத் தோன்றியது. மேற்படி சாலையில் பிரயாணம் செய்யும் ஒவ்வொரு முறையும் என் மனதைக் கவர்ந்து, கற்பனையையும், சிந்தனையையும் கிளறச் செய்கிற அளவுக்கு 'மூவரை வென்றான் முக்கியத்துவம் பெற்று விட்டான்.

'அதிர்ஷ்டம்’ எப்படி வந்து வாய்க்கிறது பாருங்கள்! ஒரு நாள், நான் பிரயாணம் செய்து கொண்டிருந்த பஸ் என் மனோபீஷ்டத்தை நிறைவேற்ற விரும்பியோ என்ன வோ தெரியவில்லை, இந்தக் கைகாட்டிமரத்தருகிலேயே நிரந்தரமாக நின்று விட்டது.

பஸ் கிளம்பாது என்பது உறுதியாகி விட்டது. அப்போது மாலை நான்கு மணி. அதே கம்பெனியைச் சேர்ந்த மற்றொரு பஸ் மதுரையிலிருந்து புறப்பட்டு அந்த ‘ரூட்’டில் அந்த இடத்திற்கு வருவதற்கு இரவு எட்டரை மணி ஆகுமென்றும், அது வரை நாங்கள் காத்திருந்துதான் ஆக வேண்டும் என்றும் கண்டக்டர் கூறினார்.

“அந்த ஊரில் ஹோட்டல் இருக்கிறதா?” என்று விசாரித்துக் கொண்டு நாங்கள் ஏழெட்டுப் பேர் காப்பி சாப்பிடுவதற்காக ஒன்றரை மைல் தூரம் நடக்கத் தீர்மானித்து விட்டோம். காப்பியையும் சாப்பிட்டு விட்டு, அந்த ஊரின் பெயர் விசேஷத்தையும் அறிந்து கொள்ளாமல் பஸ்சுக்குத் திரும்புவதில்லை என்று நான் மட்டும் எனக்குள் தனிப்படத் தீர்மானம் ஒன்றும் செய்து கொண்டேன்.

வாய்க்கால், வரப்புகளின் மேல் குறுக்கிட்டுச் சென்ற, மேடு பள்ளம் மிகுந்த வண்டிப் பாதையில் நடந்தோம்.