பக்கம்:நா. பார்த்தசாரதி சிறுகதைகள் 1.pdf/238

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

236 நா. பார்த்தசாரதி சிறுகதைகள்

அந்தச் சின்னஞ்சிறு கிராமத்தில் 'ஹோட்டல்’ என்ற பெயருக்குரிய போர்டு மாட்டாத கூரைக் குடிசையைக் கண்டுபிடிப்பதுதான் கஷ்டமாக இருந்தது. அது மட்டுமா? அங்கே காப்பி என்ற பெயரில் கிடைத்த திரவத்தைச் சாப்பிடுவதும் கஷ்டமாகத்தான் இருந்தது.

காப்பி என்ற பெயரில் எதையோ குடித்துவிட்ட திருப்தியில் மற்றவர்கள் எல்லோரும் கார் நின்ற இடத்திற்குக் கிளம்பிவிட்டார்கள். 'நீங்கள் போங்கள். நான் கொஞ்சம் இருந்து வருகிறேன்’ என்று அவர்களிடம் கூறிப்பின் தங்கிவிட்டேன் நான்

ஹோட்டல் வாசலில் இருந்த வெற்றிலைப் பாக்குக் கடையில் உட்கார்ந்து கொண்டிருந்த வயதான பெரியவர் ஒருவரை அணுகினேன். மெல்லப் பேச்சைக் கிளப்பினேன். என்னுடைய வெளுத்த உடைக்கும் கைக்கடியாரத்திற்கும் நகரத்துப் பாணியில் வெளிவந்த பேச்சுக்கும் மரியாதை கொடுக்க எண்ணினார் போலும் அந்தப் பெரியவர். எனக்கு வேண்டிய விஷயமோ அவருடைய பதிலில் இருந்தது.

“சாமீ! அது ஒரு பழைய கதைங்க. பொழுதிருந்தா இங்கனே குந்திக் கேளுங்க, சொல்றேன்.”

"சந்தோஷம் பெரியவரே.அதைத் தெரிந்து கொள்ளவேண்டும் என்றுதானே நான் இங்கே வந்தேன், சொல்லுங்கள் கேட்கிறேன்.”

ஆவலோடு கடை வாசலில் போட்டிருந்த நீளமான பெஞ்சை மேல் துண்டால் தட்டிவிட்டு உட்கார்ந்தேன் நான்.

"அதுக்கென்னங்க? தாராளமாய்ச் சொல்றேன். வெத்திலை, பாக்கு, பொவையிலை, சோடா ஏதாச்சும் வேணுமுங்களா?”

பெரியவர் கதையை இனாமாகச் சொல்ல விரும்பவில்லை என்று குறிப்பாகத் தெரிந்து கொண்டேன். எனக்கிருந்த ஆத்திரத்தில் எப்படியாவது கதை வந்தால் போதுமென்றிருந்தது.

“எல்லாம் கொடுங்கள்! பெரியவரே!” என்று ஒரு முழு எட்டனாவை எடுத்து நீட்டினேன். பெரியவர் என்னை ஒரு தினுசாக வியப்புத் தோன்றப் பார்த்தார். வெற்றிலை, பாக்கு, புகையிலை, சோடா எல்லாம் பெஞ்சியில் எடுத்து வைத்தார்.நான் சோடாவை மட்டும் குடித்தேன்.

கதை கேட்கத் தயாராகிற பாவனையாகப் பெஞ்சியில் சப்பணங்கட்டி நிமிர்ந்து உட்கார்ந்து கொண்டேன். “சகோதர சகோதரிகளே!” என்று கூறிப் பேச்சு ஆரம்பிப்பதற்கு முன்னால் மேடைப் பேச்சாளர் கனைத்துக் கொள்ளுவார்பாருங்கள், அந்த மாதிரி ஒரு கனைப்புக் கனைத்துவிட்டுப் பெரியவர் கூறத் தொடங்கினார்.

அவருடைய தமிழ் மிகவும் கிராமியமாக இருப்பதால் இலக்கண சுத்தமான நடையில் மாற்றி உங்களுக்கு அதை நான் சொல்லிவிடுகிறேன். அந்தக் கிழவர் கூறியது எட்டனா விலைக்குத் தயார் செய்த கற்பனைச் சரக்கோ, அல்லது உண்மையேதானோ, எனக்குத் தெரியாது. அதற்கு நான் உத்திரவாதமும் அளிக்க முடியாது. இவ்வளவு