பக்கம்:நா. பார்த்தசாரதி சிறுகதைகள் 1.pdf/241

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

முதல் தொகுதி / மூவரை வென்றான் 239

"வீரமல்லன் தன்னைப் பார்க்க வந்திருக்கிறான்' என்பதைக் கேள்விப்பட்ட உடனே குடல் நடுங்கியது மருதுத் தேவருக்கு ."ஜமீன்தார் கையாலாகாத வெறும் பயல்களை எல்லாம் பார்க்கிற வழக்கம் இல்லை” என்று பயத்தை மறைத்துக் கொண்டு பதில் சொல்லி அனுப்பினார்.

இந்தப் பதில் வீரமல்லனிடம் கூறப்பட்டது.

"ஓஹோ பட்டப்பகலில் வாசல் வழியே அனுமதி கோரி வந்தால் உங்கள் ஜமீன்தார் சந்திக்கிற வழக்கம் கிடையாதா? சரி.வரவேண்டிய நேரத்தில், வரவேண்டிய வழியாக, அவர் விரும்பாவிட்டாலும் அவரை வந்து சந்திக்கிறேன் என்று சொல்.”

வாயிற்காவலனிடம் வீரமல்லன் ஆத்திரமாகக் கூறி விட்டுச் சென்ற இந்த வார்த்தைகளை அவனே புரிந்து கொள்ளவில்லை.ஏதோ ஆத்திரத்தில் உளறிவிட்டுப் போகிறான், இதைப் போய் ஜமீன்தாரிடம் சொல்லுவானேன்? - என்று பேசாமல் இருந்துவிட்டான். வீரமல்லனை அவமானப்படுத்தி அனுப்பிவிட்டோம் என்று இறுமாந்திருந்தார் ஜமீன்தார்.

***

தேநாள் இரவு; ஒன்பது நாழிகை, ஒன்பதரை நாழிகை சுமாருக்கு, ஜமீன்தார் மருதுத் தேவர் நிம்மதியான உறக்கத்தை நாடி மாளிகையின் மேல் மாடியில் இருந்த சயன அறைக்குச் சென்றார்.

கட்டிலில் போய்ப் படுத்துப் போர்வையை இழுத்து விட்டுக் கொண்டிருந்தவர் யாரோ அறைக் கதவை மூடித் தாழிடுகின்ற ஒசை கேட்டுத் துள்ளி எழுந்தார். அவர் கண்கள் அவரை ஏமாற்றுகின்றனவா? இல்லையானால் வெறும் பிரமையா? கனவா?

கதவுத் தாழ்ப்பாளைப் போட்டுப் பூட்டிவிட்டு வீரமல்லன் அவர் எதிரே நின்று கொண்டிருந்தான். அவன் இதழ்களில் குறும்புத்தனமும் அலட்சிய பாவமும் நிறைந்த புன்னகை தவழ்ந்து கொண்டிருந்தது. ஜமீன்தாருக்குக் கைகால்கள் வெடவெடத்தன. புலியைக் கண்ட பூனையானார் அவர்.

"ஜமீன்தார்வாள்! நான்தான் வீரமல்லன்! உங்களைச் சந்திப்பதற்கு இந்த நேரம்தான் எனக்கு வாய்த்தது. உங்களுடைய உறக்க நேரத்தில் குறுக்கிட்டதற்கு அடியேனை மன்னிப்பீர்களோ?” என்று வீரமல்லன் அலட்சியமாகச் சிரித்தான். கம்பீரமான தோற்றத்தோடு பின்னால் கையைக் கட்டிக் கொண்டு அவன் நின்ற விதமே ஜமீன்தாரை மலைத்துப் போகும்படிச் செய்தது.

“நீ வீரமுள்ள மறவனாக இருந்தால் மாற்றான் மாளிகையில் திருடனைப் போல் நுழைந்திருப்பதற்காக வெட்கப்பட வேண்டும்” என்று தைரியத்தைக் கஷ்டப்பட்டு வரவழைத்துக் கொண்டு கூறினார் ஜமீன்தார்.

“வீரனைப்போல் நுழைய முயன்றேன். 'ஜமீன்தார் வாள்' மறுத்துவிட்டார். என்னால் பொறுக்க முடியவில்லை. இனியும், கொள்ளை கொடுப்பதற்கும் விளைந்த