பக்கம்:நா. பார்த்தசாரதி சிறுகதைகள் 1.pdf/242

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

240 * நா. பார்த்தசாரதி சிறுகதைகள்

பயிரைப் பறி கொடுப்பதற்கும் என்னுடைய இனாம் கிராமமும் நானும் தயாராத இல்லை. இரண்டிலொன்று தீர்த்துக் கட்டிக் கொண்டு போவதற்குத்தான் இப்போது இப்படித் திருடனைப் போல வந்திருக்கிறேன்.”

'உன்னுடைய இனாம் கிராமத்தில் திருடர்கள் பயிரை அறுத்துக் கொண்டு போவதற்கும், கொள்ளையடிப்பதற்கும் நானா பொறுப்பு? என்னைத் தேடி வர வேண்டிய காரணம்?”

“ஒகோ! அப்படியா! ஜமீன்தார் வீரமருதுத் தேவரே! நின்று நிதானித்துப் பேசும் வீரமல்லனை நீர் அவ்வளவு சுலபமாக ஏமாற்றிவிட முடியாது. கன்னிமாலையாற்றில் அணை போட்டுத் தண்ணிiரை அடைத்து வைத்திருப்பதும் கொள்ளைத்தொழிலுக்குக் கூலிப்படை தயார் செய்து என் கிராமத்தின் மேல் ஏவி விடுவதும் உம்முடைய திருவிளையாடல்தான் என்பதை நான் அறிவேன்.”

நீ மட்டும் பெரிய யோக்கியனோ? புதிதாகக் கிடைத்த இனாம் கிராமத்துக்குக் கண்மாய் வெட்டுகிறேன் பேர்வழியே என்று ஒரே பள்ளமாக வெட்டி ஏற்கனவே இருக்கும் என் கண்மாய்களுக்குத் தண்ணிர் வரவிடாமல் பாழ் செய்வது உன் திருவிளையாடல்தானே?”

"வீரமருதுத் தேவரே! நீர் கூறுகிற குற்றத்தை வேண்டுமென்றே நான் செய்யவில்லை என்பதை நீர் முதலில் தெரிந்து கொள்ள வேண்டும். ஏதோ கண்மாய் வெட்டினேன். அது ஆற்று மட்டத்தைவிடப் பள்ளமாக அமைந்துவிட்டது. நீங்கள் ஒரு வார்த்தை கண்ணியமான முறையில் என்னிடம் கூறியிருந்தால் நானாகவே பள்ளத்தைத் தூர்ப்பதற்கு ஏற்பாடு செய்திருப்பேன். அதை விட்டுவிட்டு நீங்கள் என்னிடமே ஆழம் பார்க்கத் தொடங்கி விட்டீர்கள். நீரும் மறவர்; நான் மறவன்தான்.”

"இந்த பயமுறுத்தல் எல்லாம் என்னிடம் பலிக்காது தம்பீ! என் ஜமீனுக்கு முன்னால் உன்னுடைய கிராமம் கடுகுக்குச் சமம். நீ என்னிடம் வாலாட்டினால் உனக்குத்தான் ஆபத்து:”

வீரமல்லன் இதைக் கேட்டுக் கலகலவென்று வாய் விட்டுச் சிரித்தான்.

“உம்முடைய நத்தப்பட்டி ஜமீன் என்னுடைய இனாம் கிராமத்தைவிடப் பெரியதாக வேண்டுமானால் இருக்கலாம்; ஆனால் ஒன்று மட்டும் நினைவில் வைத்துக் கொள்ளுங்கள். வீரமல்லனும் அவனுடைய இனாம் கிராமும் மனம் வைத்தால் உம்மை இருந்த இடம் தெரியாமல் ஆக்கிவிட முடியும். ஜாக்கிரதை! ஞாபகமிருக்கட்டும்!”

“யாரிடம் காட்டுகிறாய் இந்தப் பூச்சாண்டி? தேவதானம் ஜமீன் மேற்கேயும், சாப்டூர் ஜமீன் வடக்கேயும் எனக்கு உதவிசெய்ய எந்த நேரமும் தயாராக இருக்கின்றன. நீ மட்டும் எங்கள் மூன்று பேரையும் வென்று காட்டு; உன்னால் முடிந்தால். இந்த நத்தம்பட்டி ஜமீனையே உனக்கு ஜாரி செய்துவிட்டுச் சந்நியாசியாகி விடுகிறேன் நான்”