பக்கம்:நா. பார்த்தசாரதி சிறுகதைகள் 1.pdf/243

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

முதல் தொகுதி / மூவரை வென்றான் 241

"நீங்கள் வணங்கும் குலதெய்வத்தின்மேல் ஆணையாக,உங்களைப் பெற்ற தாயின் பத்தினித்தன்மைமேல் ஆணையாக நீங்கள் இதைச் செய்வீர்களா?”

“எங்கள் மூன்று பேரையும் நீ வென்றுவிட்டால் கண்டிப்பாக இதை நான் செய்கிறேன். நாங்கள் வென்றுவிட்டாலோ நீ உன்னுடைய இனாம் கிராமத்தை எனக்கு ஜாரி செய்துவிட்டுச் சந்நியாசியாகப் போக வேண்டும்! சம்மதந்தானா?”

“ஆகா! கண்டிப்பாக”

"வீரமல்லா யோசித்துப் பேசு, நாங்கள் மூன்று பெரிய ஜமீன்தார்கள். நீயோ ஒரு சிறு கிராமத்தின் இனாம்தார். எறும்பு, யானையோடு பந்தயம் போடலாமா?”

"வீண் பேச்சு எதற்கு மருதுத் தேவரே? நாளை மறுநாள் இராத்திரி ஏழரை நாழிகையிலிருந்து பத்தரை நாழிகை வரை உங்களுக்கு நேரம் தருகிறேன். அந்த மூன்று நாழிகை நேரத்தில் தெற்கேயிருந்து நீங்களும், வடக்கேயிருந்து சாப்டூர் ஜமீன்தாரும், மேற்கேயிருந்து தேவதானம் ஜமீன்தாரும், அவரவர் ஆட்களோடு என் இனாம் கிராமத்து எல்லைக்குள் நுழைய முயற்சி செய்ய வேண்டியது. முடிந்தால் உங்களுக்கு வெற்றி: முடியாவிட்டால் எனக்கு வெற்றி”

"அது சரிதான்! ஆனால் மூன்று நாழிகைக்குள்’ என்று நீ நிபந்தனை போடுவதன் சூக்ஷமம் என்ன?”

‘சூக்ஷமம் ஒன்றுமில்லை! நீங்கள் மூன்று பெரிய ஜமீன்தார்கள் மூன்று திசையிலிருந்து தாக்க முயலுகிறீர்கள். நான் ஒருத்தனாகச் சமாளிக்க வேண்டுமே! அதனால்தான் இந்த நிபந்தனை”

“சரி, அப்படியே வைத்துக்கொள்ளேன். மூன்று விநாடியில் உன் எல்லைக்குள் நுழைந்துவிட முடியுமே! மூன்று நாழிகைக்குள் முந்நூறு தடவை நுழையலாமே? எப்படி நிபந்தனை போட்டால் என்ன? தோற்றுச்சந்நியாசியாகப் போவதென்னவோ நீதான்.”

"முடிவு எப்படியோ? சந்நியாசியாக யார் போகிறோமோ அதை இப்பொழுதே பேசுவானேன்? நிபந்தனைகளைப் பரஸ்பரம் நாம் எழுத்து மூலம் எழுதிக் கொள்ள வேண்டும்.”

“அதற்கென்ன? என் பந்தயத்தையும் நிபந்தனையையும் நாளைக்கே நான் செப்புப் பட்டயத்தில் எழுதிக் கொடுக்கிறேன். நீ?...”

“நானும் நாளைக்கே செப்புப் பட்டயத்திலே எழுதிக் கொடுக்கிறேன்.”

“இது சத்தியம்தானா, வீரமல்லா?”

“நாளைக் காலையில் செப்புப் பட்டயத்தோடு வருகிறேன்.”

கூறிவிட்டு இருளில் கதவைத் திறந்துகொண்டு, தான் திருட்டுத்தனமாக எந்த வழியே வந்தானோ அதே வழியாக இறங்கிச் சென்றான் வீரமல்லன்.

***

நா.பா.1-16