பக்கம்:நா. பார்த்தசாரதி சிறுகதைகள் 1.pdf/244

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

242 நா. பார்த்தசாரதி சிறுகதைகள்

றுநாள் நத்தம்பட்டி ஜமீன்தார் ஜமீன் முத்திரையும் கையொப்பமும் அமைந்த செப்புப் பட்டயமொன்றைத் தயார் செய்தார். அது வீரமல்லனிடம் கொடுக்கப் பட்டது. அதேபோல் வீரமல்லனின் கையொப்பமிட்ட செப்புப் பட்டயம் ஒன்று ஜமீன்தார் வீரமருதுத் தேவரின் கைகளில் ஒப்படைக்கப் பட்டது. இரண்டு பட்டயங்களும் முறையே பின்வருமாறு அமைந்திருந்தன.

ஜமீந்தார் வீரமல்லனுக்கு அளித்த பட்டயம்

இந்த ஜமீனுக்கு அருகிலுள்ள வீரமல்லனின் இனாம் கிராமத்தின் எல்லைக்குள் நாளை இரவு ஏழரை நாழிகையிலிருந்து பத்தரை நாழிகைக்குள் நானும் என்னுடைய சக ஜமீன்தார்களும் திசைக்கொருவராக நுழைந்துவிட்டால், வீரமல்லன் தன் கிராமத்தை எனக்கு ஜாரி செய்து விட்டுச் சந்நியாசியாகப் போக வேண்டியது. மேலே குறிப்பிட்ட நாளில், குறிப்பிட்ட மூன்று நாழிகை நேரத்திற்குள், நாங்கள் மூவரும் வீரமல்லனின் கிராம எல்லைக்குள் நுழையாமற்போனால், நான் என்னுடைய நத்தம்பட்டி ஜமீனை வீரமல்லனுக்குக் கொடுத்துவிட்டுச் சந்நியாசியாகப் போவேனாகுக.

இப்படிக்கு,
வீரமருத்துதேவர்,
நத்தம்பட்டி ஜமீன்தார்



ஜமீந்தாருக்கு வீரமல்லன் அளித்த பட்டயம்

என்னுடைய இனாம் கிராமத்துக்கு அருகிலுள்ள நத்தம்பட்டி ஜமீந்தாரும் அவருக்கு வேண்டிய சக ஜமீன்தார்களும் நாளை இரவு ஏழரை நாழிகையிலிருந்து பத்தரை நாழிகைக்குள் எனது கிராம எல்லைக்குள் நுழைந்து விட்டால், என் கிராமத்தை நத்தம்பட்டி ஜமீன்தார் வீரமுத்துத் தேவருக்கு ஜாரி செய்துவிட்டு நான் சந்நியாசியாகப் போவேனாகுக. ஜமீன்தார்கள் என் கிராம எல்லைக்குள் குறிப்பிட்ட மூன்று நாழிகைக்குள் நுழையாவிட்டால், நத்தம்பட்டி ஜமீனை எனக்கு ஜாரி செய்துவிட்டு வீரமருதுத் தேவர் சந்நியாசியாகப் போக வேண்டும்.

இப்படிக்கு,
வீரமல்லன்


பட்டயம் தன் கைக்கு வந்த உடனேயே தேவதானம், சாப்டூர், ஆகிய இரு ஜமீன்தார்களுக்கும் தன் பக்கம் உதவினால் வீரமல்லனுடைய இனாம் கிராமத்தைக் கைப்பற்றிப் பங்கு தருவதாகச் செய்தி அனுப்பினார் நத்தம்பட்டி ஜமீன்தார் வீரமருதுத்தேவர். ஜமீன்தார்கள் இருவருமே உதவச் சம்மதித்தனர்.

குறிப்பிட்ட மூன்று நாழிகைநேரத்தில் தான் வடபுறமிருந்து எல்லைக்குள் நுழைய முயலுவதாகச் சாப்டூர் ஜமீன்தாரும், மேற்குப்புறமிருந்து நுழைவதாக தேவதானம் ஜமீன்தாரும், நத்தம்பட்டி ஜமீன்தாருக்கு உடன்பட்டிருந்தனர்.