பக்கம்:நா. பார்த்தசாரதி சிறுகதைகள் 1.pdf/246

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

244 நா. பார்த்தசாரதி சிறுகதைகள்

கண்மாய்களையும் யாரோ உடைத்துவிட்டார்கள். ஆற்றில் ஆள் இறங்க முடியாதபடி பிரவாகம் சுழித்தோடத் தலைப்பட்டது. வடக்கே வீரமல்லனின் கண்மாய் வடிகால் உடைத்துக் கொண்டு வெள்ளக்காடாயிற்று மூன்று திசையிலும் நின்ற மூன்று ஜமீன்தார்களும் அண்டமுடியாதபடி, கிராமத்தைத் தீவாக ஆக்கிவிட்டுச் சுற்றி ஒரே பிரவாகமாகப் பெருகி ஓடியது உடைப்பு வெள்ளம்.மேற்கே நின்றதேவதானம் ஜமீன் ஆட்கள் ஒரு வகையிலும் மீள வழியின்றி வெள்ளக்காட்டின் இடையே திகைத்து நின்றனர்.

வடக்கே இருந்த சாப்டூர் ஜமீன் ஆட்களும், தெற்கே இருந்த நத்தம்பட்டி ஜமீன் ஆட்களும் கிழக்குத் திசையில் கிராம எல்லைக்குள் நுழைவதற்காக ஓடினார்கள்

என்ன ஆச்சரியம்! கிழக்கே கிராம எல்லையைச் சுற்றி வளைத்துக் கொண்டு, நெருப்பு எரிந்து கொண்டிருந்தது. உள்ளே நுழைய இம்மியளவும் இடம் கிடையாது.

மூன்று திசையிலும் வெள்ளப் பிரவாகம் மறுநாள் காலை வரை ஒயவே இல்லை. நெருப்பு, முதல் நாள் இரவு பன்னிரண்டு நாழிகைக்குத்தான் அணைந்தது.தலைகீழாக நின்று பார்த்தும் ஜமீன்தார்களால் குறித்த மூன்று நாழிகைக்குள் வீரமல்லனின் கிராம எல்லையில் நுழைய முடியவில்லை.

உதவிக்கு வந்த ஜமீன்தார்கள் வருத்தத்தோடு திரும்பிப் போனார்கள். வீரமருதுத் தேவர் சந்நியாசியாகிப் போனார்.

செப்புப் பட்டய நிபந்தனைப்படி நத்தம்பட்டி, ஜமீன் வீரமல்லனுக்குச் சொந்தமாய்விட்டது. வீரமல்லன் அன்று சாமர்த்தியத்தால் தனியாக இருந்து மூன்று ஜமீன்தார்களை வென்று வாகை சூடியதால், அவன் பரம்பரையினர் வாழும் இந்தக் கிராமமும் பிற்காலத்தில் 'மூவரை வென்றான்' என்றே வழங்கப்படலாயிற்று. இன்று கூட, இவ்வூரின் மேற்கு எல்லையில் வீரமல்லனுக்கு ஒரு கோவில் இருக்கிறது. இவ்வூராருக்கு அவன்தான் குலதெய்வம். அவன் கோவிலில் அந்தப் பழைய செப்புப் பட்டயங்களும் வைக்கப்பட்டுள்ளன.

இதுதான் ஐயா இந்த ஊருக்குப் பேர் வந்த கதை!

வெற்றிலை பாக்குக் கடைக் கிழவர் கதையை முடித்தார். பஸ்ஸுக்கு நேரமாகிவிட்டது. இன்னும் ஒன்றரை மைல் நடந்தாக வேண்டுமே? நான் அவரிடம் பாக்கிச் சில்லறையைக்கூட வாங்கிக் கொள்ளாமல் விடைபெற்றுக் கொண்டு நடந்தேன். கற்பனையோ, நிஜமோ, அல்லது பொய்யோ, எனக்குப்பிடித்தமான அந்த ஊரின் பெயருக்கு அந்தக் கிழவர் காரணம் சொல்லிவிட்டார். அவ்வளவு போதும் எனக்கு!

(1959-க்கு முன்)