பக்கம்:நா. பார்த்தசாரதி சிறுகதைகள் 1.pdf/247

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

31. அருமை அம்மாவுக்கு

தாமரைப் பூவின் இதழ் போல் கமலிக்குப் பெரிய கண்கள். அந்தக் கண்களின் வனப்பைத் தெரிந்து கொள்ள வேண்டுமென்றால் அவளுக்கு ஆச்சரியம் வரும் போது அவற்றைப் பார்க்க வேண்டும். முகத்தில் ரோஜா மொட்டுக்கள் அரும்பியது போன்ற அவளுடைய சின்னஞ்சிறு உதடுகள் குவியக் கண்கள் காதோரங்களைத் தொட்டு மீள்கிறாற் போல அப்படி அகன்று நீளும் அந்தக் கண்கள்.

“கமலிக்குப் புறா முட்டை போலக் கண் பெரிசு, அப்பா!” என்று என் பையன் அடிக்கடி கேலி செய்வான்.

“உங்கள் வீட்டு ராமு என்னைக் கேலி செய்கிறான், மாமா! என் கண் புறா முட்டையாம். இவனுக்கு மட்டும் கிளி மூக்கு இல்லையோ?” என்று என்னிடம் கட்சி கட்டிக் கொண்டு நியாயத்துக்கு வந்து சேருவாள் கமலி.

“அவன் கிடக்கிறான் அசட்டுப் பயல். உன் கண்கள் பார்க்க எவ்வளவு அழகாக இருக்கின்றன தெரியுமா? கொள்ளை அழகு” என்று கமலிக்குச் சமாதானம் சொல்லி அனுப்புவேன் நான். என் சமாதானத்தைக் கேட்டுக் கொண்டு “வவ்வ-வே! உனக்குத் தாண்டா கிளி மூக்கு” என்று ராமுவுக்கு அழகு காட்டி விட்டுத் திரும்பிப் போய் விடுவாள் கமலி.

கமலி தாயில்லாக் குழந்தை. எட்டு அல்லது ஒன்பது வயதிருக்கும். அவள் தகப்பனாருக்கு ஏதோ ஒரு திரைப்படவிநியோகக் கம்பெனியில் ஊர் சுற்றும் பிரதிநிதி வேலை. முக்கால்வாசி நாட்கள் வெளியூரில் இருப்பார். கம்பெனியின் படம் ஓடுகிற ஊரெல்லாம் போய்ச் சுற்ற வேண்டும். நான் குடியிருந்த வீட்டிலேயே பின் கட்டில் அவரும் குடியிருந்தார். தூரத்து உறவுள்ள வயதான பாட்டியம்மாள் ஒருத்தி வீட்டோடு இருந்து சமையல் செய்து போட்டுக் கொண்டிருந்தாள். தகப்பனார் ஊரில் இல்லாத நாட்களில் வீட்டில் பாட்டியும், கமலியும்தான் இருப்பார்கள். சின்ன வயதானாலும், குறும்புத்தனம், வேடிக்கைப் பேச்சு எல்லாம் கமலியிடம் நிறைய உண்டு.

“கமலி! அப்பாவை எங்கே காணோம்? ஊரிலே இல்லையா?” என்று எப்போதாவது நான் கேட்பேன்.

“மாமா! அதை ஏன் கேட்கிறீர்கள்? வீரமார்த்தாண்டனின் சபதம் முடிந்ததும், பாட்டியின் பசிக்காகவும், புருஷன் போற்றிய பெண் திலகத்துக்காகவும் அப்பா கிளம்பி விட்டார்!” என்று சொல்லி விட்டு ரப்பர்ப் பந்து மாதிரித் துள்ளிக் குதித்துக்கொண்டே கை கொட்டிச் சிரிப்பாள் கமலி.