பக்கம்:நா. பார்த்தசாரதி சிறுகதைகள் 1.pdf/251

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

முதல் தொகுதி / அருமை அம்மாவுக்கு 249

“கவரைப் பிரித்துப் படித்துவிட்டால் என்ன செய்வாய்?”

"ஐயோ! ஒருத்தர் ஒட்டிப் போட்ட கவரை இன்னொருத்தர் பிரிப்பாளோ? நீங்க அப்படிச் செய்வீங்களா, மாமா? உங்களை நான் நல்ல மாமா என்று நினைத்துக் கொண்டிருக்கிறேன்!”

"சே! சே! நான் அப்படியெல்லாம் செய்வேனா, கமலீ சும்மா விளையாட்டுக்குச் சொன்னேன். நீ கடிதாசு எழுதிக் கொடு, நான் கொண்டு போறேன்.”

“அதானே கேட்டேன்! நீங்க ரொம்ப நல்ல மாமாவாயிற்றே!”

என் சிரிப்பு இதழ்களுக்கு உட்புறமே சிறைப்பட்டு நின்றது.

"மாமா! நீங்க நாலு மணிக்குத் தானே கிளம்புவீர்கள், அதற்குள் எழுதிக் கொண்டு வந்து உங்களிடம் கொடுத்துடறேன்”- இப்படி அவள் சொன்ன போது பகல் பன்னிரண்டு மணி.

“சரி கொண்டு வா.”

கமலி வீட்டுக்கு ஓடினாள்.

என் மனத்தில் சிந்தனை சூழ்ந்து கொண்டது. இந்தச் சிறுமி யாருக்குக் கடிதாசு எழுதப் போகிறாள்? அதில் என்ன இரகசியம் இருக்கும்? இவளாகத் தான் வந்து இவ்வளவும் விசாரித்தாளா? அல்லது பாட்டி ஏதாவது கடிதம் தபாலில் சேர்ப்பதற்காகக் கமலியை விட்டு விசாரித்துக் கொண்டு வரச் சொன்னாளா? எப்படியானால் என்ன? கடிதத்தைக் கொண்டு வந்து கொடுக்கும்போது, தானே தெரிந்து விடுகிறது என்று மன அமைதி பெற்றேன்.

அன்று எனக்கு மாலை நான்கு மணிக்குப் புறப்படவேண்டும். மூன்றரை மணிக்கே நான் தயாராகி விட்டேன். கிளம்பும்போது கமலி மூச்சு இரைக்க ஓடி வந்து ஒரு கவரைக் கொடுத்தாள்.அதைப் பார்க்காமல் அப்படியே வாங்கிப் பைக்குள் போட்டுக் கொண்டேன்.

ஆர்.எம்.எஸ். ஊழியர்கள் பயணம் செய்யும் மெயில் காரேஜில் ஜன்னல்களையெல்லாம் அடைத்து விடுவதால் இரயில் ஒடிக் கொண்டிருந்தாலும் உள்ளே வேர்த்துக் கொட்டும். குவிந்து கிடக்கும் கடிதங்களைப் பகுதி பகுதியாகப் பிரித்துக் கொண்டிருந்தவ்ன் வேர்வையைத் துடைத்துக் கொள்வதற்காகக் கைக்குட்டையைத் தேடிச் சட்டைப் பைக்குள் துழாவினேன்.

கைக்குட்டையோடு கமலி கொடுத்தனுப்பியிருந்த கவரும் வந்தது. அடேடே! மறந்தே போய்விட்டேனே! கமலியின் கவரைத் தபாலில் சேர்க்க வேண்டுமே. அவள் அப்பா எந்த ஊரில் டூரிங் சினிமாவில் சுற்றிக்கொண்டிருக்கிறாரோ பாட்டி சொல்லச் சொல்லக் கேட்டுக் கமலி அப்பாவுக்கு எழுதியிருப்பாள், இந்தக் கடிதத்தை என்று எண்ணியவனாய்க் கடித உறையைத் திருப்பி மேலே இருந்த முகவரியைப் படித்ததும் ஒன்றும் புரியாமல் திகைத்தேன். ஊர், பேர், தெரு ஒன்றும் புரியாமல் கோணல்