பக்கம்:நா. பார்த்தசாரதி சிறுகதைகள் 1.pdf/254

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

32. ஒரு பழைய கனவு

“என்ன ரவி? இப்படியே பித்தன் மாதிரி உட்கார்ந்து கொண்டிருப்பது உனக்கு நன்றாய் இருக்கிறதா? குளிக்காமல், உடை மாற்றிக் கொள்ளாமல், சாப்பிடாமல் இதென்ன காரியம் நீ செய்கிறாய்?”

ரவி பதில் சொல்லவில்லை. சிங்கள நண்பன் குணசேனா ஒன்றும் புரியாமல் பலகணிக்கு வெளியே வெறித்துப் பார்த்தான். பஞ்சுப் பொதி போன்ற வெண் மேகப் படலங்களுக்கிடையே சிவனொளி பாதத்துச் சிகரம் தொலைவில் தெரிந்து கொண்டிருந்தது. அழகிய பெரிய பச்சை நிற வெல்வெட் கம்பளம் ஒன்றை மேடு, பள்ளமான மடிப்புக்களோடு யாரோ ஒரு சோம்பேறி கடனுக்கு விரித்துப் போட்டிருப்பது போல் தூரத்து மலைகள் தெரிந்தன. அணி வகுத்து நிற்கும் பட்டாளத்து வீரர்களைப் போல ரப்பர் மரங்கள். கரும் பசுமைத் தளிர் விளங்கக் காட்சியளிக்கும் பரந்த தேயிலைத் தோட்டங்கள். அந்தச் சிகரங்களிடையே இரையெடுத்த மலைப் பாம்பு நெளிவதுபோல் பாய்ந்து கொண்டிருக்கும் மாவலி கங்கை.

பலகணிக்கு வெளியே தெரிந்த இயற்கையின் பெரிய உலகத்தை ஒரே ஒரு கணத்தில் பார்த்து முடித்து விட்டான் குணசேனா. ஆனால் கைக்கெட்டுகிற தொலைவில் உட்கார்ந்திருக்கும் நண்பன் ரவியின் உள்ளத்தை அறிய முடியவில்லை.

அன்று காலையில்தான் அவர்கள் இருவரும் கொழும்பிலிருந்து புறப்பட்டு இரத்தினபுரி மார்க்கமாகப் பெலிஹூலோயாவிலுள்ள விருந்தினர் விடுதி (ரெஸ்ட் ஹவுஸ்)யில் வந்து தங்கியிருந்தார்கள். குணசேனாவின் அழகிய கார் வாசலில் நின்று கொண்டிருந்தது. அதில்தான் அவர்கள் இருவரும் பிரயாணம் செய்து வந்திருந்தனர். மறுநாள் காலை அவர்கள் இருவரும் நுவாரா-எலியா சென்று அங்கிருந்து கண்டிக்குப் போயாக வேண்டும். நீண்ட பிரயாணம் அலுப்பைத் தரும் என்பதற்காகப் பெலிஹூலோயாவில் அன்றிரவு தங்கி, ஓய்வு கொண்டு விட்டு மறுநாள் காலை மறுபடியும் பிரயாணத்தைத் தொடங்கக் கருதியிருந்தார்கள்.

“ரவி! இந்த மாதிரி இங்கே வந்து அடம் பிடிப்பதற்கு நீ வராமலே இருந்திருந்தால், எவ்வளவோ நன்றாக இருந்திருக்கும்.பன்னிரண்டு வருடங்களுக்குப் பின் இலங்கைக்கு வந்திருக்கிறாய். பத்துப் பதினைந்து நாட்கள் உல்லாசமாக ஊர் சுற்றிப் பார்த்து விட்டுப் போயேன். உனக்கென்ன வந்து விட்டது? ஏன் இப்படி உன்மத்தம் பிடித்தவன் மாதிரி உட்கார்ந்திருக்கிறாய்?”

பதில் இல்லை! ரவி ஆடாமல் அசையாமல் அடித்து வைத்த சிலை போல் உட்கார்ந்து கொண்டிருந்தான்.