பக்கம்:நா. பார்த்தசாரதி சிறுகதைகள் 1.pdf/255

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

முதல் தொகுதி / ஒரு பழைய கனவு 253

“குளிக்கும் அறையில் வெந்நீச்சுடச்சுடஇருக்கிறது. இன்னும் சிறிது நேரமானால் ஆறிப்போகும். சாப்பாடு எடுத்துக் கொண்டு வருவதற்காக டிரைவரை பலாங் கொடைக்கு அனுப்பவேண்டும். போ, எழுந்திருந்து போய்க் குளித்துவிட்டு வா”

நண்பன் குணசேனா சிறு குழந்தையைக் கெஞ்சுவது போல் கெஞ்சினான். ரவி பலகணிக்கு வெளியே எட்டிப் பிடிக்க முடியாத இயற்கை எழில் கொட்டிக் கிடக்கும் உலகத்தை வெறித்துப் பார்த்துக்கொண்டே இருந்தான்.

பனியும் இருளும் விழுங்கி ஏப்பமிடத் தொடங்கும் நேரம். செருப்பின் கனத்தையும் கடந்து பாதத்தில் உறைக்கும் ஊசிக்குளிர். சாலை வழியே ஒலமிட்டுச் செல்லும் லாரிகள், அந்த விடுதியின் பின் புறம் பாறையிடுக்கில் பாயும் காட்டாற்றின் ஒலி - எல்லாம் குணசேனாவுக்குத் தெரிந்தன; உறைத்தன; கேட்டன; அதே இடத்தில் அதே சூழலில் வீற்றிருந்த ரவிக்குத் தெரியவில்லை; உறைக்கவில்லை; கேட்கவில்லை. ரவியின் மனத்தில், மனத்துக்கு மையமான இடத்தில் ஒளியும் மனமும் கவர்ச்சியும் நிறைந்த மிகப் பெரிய பூ ஒன்று ஒவ்வோர் இதழாக விரிந்துகொண்டிருந்தது. விரிந்த வேகத்தில் மனத்தின் ஆழத்துக்கும் ஆழமான இடத்தில் ஒவ்வோர் இதழாக பூவின் இதழ்கள் - இதழ்களின் மணம் - அவற்றுக்கு என்ன பொருள்?

முதல் இதழ்

இந்தப் பெலிஹூலோயா விருந்தினர் விடுதிக்கு இப்போதுதான் நான் முதல் முறையாக வந்திருக்கிறேனென்று நண்பன் குணசேனா நினைத்துக் கொண்டிருக்கிறான். பாவம்! அப்பாவி நண்பன். என்னைத் தெரிந்து கொண்ட அளவுக்கு என் அந்தரங்கங்களைத் தெரிந்து கொள்ளாதவன். என் தகப்பனார் கொழும்பில் பிரின்ஸ் தெருவில் ஜவுளிக்கடை வைத்திருந்தபோது பழக்கமானவன் குணசேனா. தமிழர்களோடு அதிகம் நெருங்கிப் பழகிப் பழகி நன்றாகத் தமிழ் பேசக் கற்றுக் கொண்டு விட்டான். பிரின்ஸ் தெருவில் எங்கள் கடைக்கு அடுத்த கடை குணசேனாவின் தகப்பனாருடையது. அவன் தந்தை 'சொய்சா' வுக்கும் என் தந்தைக்கும் நெருங்கிய நட்பு இருந்தது போலவே எங்களுக்கும் நட்பிருந்தது.

இதற்கு முன்பு இந்த விருந்தினர் விடுதிக்கு எப்போது வந்திருக்கின்றேன்? எதற்காக வந்திருக்கின்றேன்? ஏன் வந்திருக்கின்றேன்? அந்த ஒரு பழைய நினைவு அல்லது பழைய கனவு இப்போது எப்படிநினைவுக்கு வந்தது? அதோ இவ்வளவு நேரமாக நான் வைத்த கண் வாங்காமல் பார்த்துக் கொண்டிருக்கிறேனே - அந்தப் பால்கனியின் வலதுபுறம் வெள்ளையடித்த சுவரில் மங்கலாகத் தெரிகிறதே ஒரு கறை அந்தக் கறை இத்தனை வருடங்களுக்குப் பிறகும் எத்தனையோ வெள்ளைகள் அடித்த பிறகும் இப்படி மங்கலாகத் தெரிவானேன்? அதற்குக் கீழ்ப்புறம் காப்பிங் பென்சிலால் அன்றிரவு அந்தக் கோணல் மாணலான சிங்கள எழுத்துக்களின் கிறுக்கிய 'தாரா' - என்ற பெயர்கூட இலோசாகத் தெரிகிறதே! ஊம்! இந்தப் பெயரையும், இந்தக் கறையையும் பார்க்காவிட்டால் மட்டும் நினைவு வராமல் போய்விடப் போகிறதா என்ன?

என்னவோ ஒரு அஞ்ஞானம்! வேறொன்றும் இல்லை. மனிதனுடைய சம்மதத்தின்படியா இந்த உலகத்தில் எல்லாம் நடக்கின்றன? அப்படி நடப்பதா