பக்கம்:நா. பார்த்தசாரதி சிறுகதைகள் 1.pdf/256

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

254 நா. பார்த்தசாரதி சிறுகதைகள்

யிருந்தால் அன்றைக்கு இந்த ரெஸ்ட் ஹவுஸில் அப்படி ஒரு சம்பவம் நடந்திருக்குமா? இப்போது நினைத்துப் பார்த்தால் என்றோ ஒரு நாள் தன்னை மறந்த உறக்கத்தில் முன்னிரவு நேரத்தில் கண்ட ஏதோ ஒரு பழைய கனவைப் போல அது தோன்றுகிறது! என்னைப் பொறுத்த வரையில்தான் கனவாகத் தோன்றுகிறது. நீங்களோ, அருமை நண்பன் குணசேனாவோ 'கனவு’ என்று கூட அதை நம்பமாட்டீர்கள். கனவில்கூட அப்படி நடப்பது சாத்தியமில்லை என்று உங்கள் வலிமை வாய்ந்த திடமான சிந்தனைக்குத் தெரியும்.

ஆனால் இந்த உலகத்தில் நம்ப முடிந்தவைகள் எங்கும், எப்போதும், எல்லோர் முன்னிலையிலும் நடந்து கொண்டிருக்கின்றன. நம்ப முடியாதவைகளோ, எங்கேயாவது, எப்போதாவது, எவர் முன்னிலையிலாவது நடக்கின்றன. வித்தியாசம் அவ்வளவே. வேறு ஒன்றும் இல்லை.

இரண்டாவது இதழ்

நாங்கள் கொழும்பிலிருந்தபோது அப்பாவின் வியாபாரம் செழிப்பாக நடந்து வந்ததனால் மிக வசதியாக வாழ்ந்து வந்ததோம். வெள்ளவத்தையில் கடற்கரையோரத்தில் பெரிய பங்களா. வீட்டோடு இரண்டு பெரிய கார்கள். கடை, வியாபார உபயோகங்களுக்காக அப்பா ஒரு காரைப் பயன்படுத்திக் கொண்டார். மற்றொரு காரை நானும், வீட்டிலுள்ள எல்லோரும் பொதுவாக உபயோகித்துக் கொண்டோம்.

அப்போது எனக்கு இருபத்தி நான்கு வயது. கல்லூரியில் படித்துக் கொண்டிருந்தேன். விடுமுறை நாட்களில் காரை எடுத்துக் கொண்டு இயற்கை எழில் கொஞ்சும் இலங்கையின் மலைப் பகுதிகளில் சுற்றுவது எனக்கு விருப்பமான பொழுது போக்கு அவசியத்தை உத்தேசித்துப் பத்தொன்பதாவது வயதிலேயே நன்றாகக் கார் ஒட்டக் கற்றுக்கொண்டிருந்தேன்.

அந்த வருடம் டிசம்பர் மாதக் கடைசியிலேயே கிறிஸ்துமஸ் விடுமுறை ஆரம்பமாகி விட்டது. இரண்டு மூன்று நாட்கள் நிம்மதியாக மலைப்பகுதிகளில் சுற்றிவிட்டு வரலாமென்று காரில் புறப்பட்டேன். கொழும்பிலிருந்து புறப்படும் பொழுது காலை பதினொரு மணி. வழக்கத்தைவிட அன்று வெய்யில் அதிகமாக இருந்தது. ஏற்றமும் இறக்கமுமாக வளைந்து நெளிந்து செல்லும் மலை ரோடுகளில் கார் சென்று கொண்டிருந்தது.வெள்ளைக்காரர்களின் மூளையும், தமிழர்களின் உழைப்புமாகச் சேர்ந்து இந்த மலைகளைத் தேங்காய் துருவுகிறது போலத்துருவி ஒரே தார் ரோடுகளாக அமைத்திருக்கும்போது மலைப் பிரயாணத்திலுள்ள சுகத்துக்கும் கேட்க வேண்டுமா?

அவிசாவெளியில் மலைமேல் படிப்படியாக ஏற்றப் பாதையை அடைந்த கார், உலப்பனை வருகிறவரை ஒரு தொல்லையில்லை. உலப்பனையைக் கடந்ததும் மழை சோனா மாரியாகப் பிடித்துக்கொண்டது. ரோட்டில் இரு புறமும் மேடுகளிலிருந்து காட்டாறு போல் நீர் பெருக்கெடுத்து ஓடியது. சாதாரணமாகவே வழவழவென்று