பக்கம்:நா. பார்த்தசாரதி சிறுகதைகள் 1.pdf/257

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

முதல் தொகுதி / ஒரு பழைய கனவு 255

கண்ணாடி பதித்தது போலிருக்கும் அந்த ரோடுகளில் சற்று அதிகமான வேகத்தில் சென்றால் காரின் டயர் வழுக்கும். மழை வேறு பெய்யவே நான் அஞ்சினேன். போதாக் குறைக்கு மாலை நேரம் முடிந்து இருள் பரவத் தொடங்கியது. எத்தனை முறை வந்து பழகியவர்களாக இருந்தாலும் இலங்கை மலைகளில் ரோடுகளை நினைவாக அடையாளம் வைத்துக்கொள்வது என்பது மட்டும் முடியாத காரியம். திரும்பின இடமெல்லாம் ரோடுகளாக இருந்தால் எதைத்தான் நினைவு வைத்துக் கொள்வதற்கு முடியும்?

மழை நிற்கிறவரை கிளம்பவேண்டாம் என்று உலப்பனையைக் கடந்து சிறிது தூரம் வந்ததும் சாலையோரத்தில் காரை நிறுத்திவிட்டேன். மழை ஒசை, இருட்டு - காரைச் சுற்றிலும், எங்கே என்ன இருக்கிறதென்றே தெரியவில்லை. காருக்குள் மேலே இருக்கும் விளக்கு முன்விளக்குள்-எல்லாம் அணைத்து இருளில் உட்கார்ந்திருந்தேன். சுற்றும் முற்றும் பார்த்தபோது பத்துப் பதினைந்து கெஜ தூரம் முன்னால் பாதையோரத்தில் விளக்கொளி தெரிந்தது.அங்கே ஏதாவது குடிசை இருக்கவேண்டும் என்று அனுமானித்தேன். மழை பெய்து கொண்டிருந்தால் என்ன? இருளில் காருக்குள் எவ்வளவு நேரம்தான் பொறுமையாக உட்கார்ந்திருக்கமுடியும். காரைப் பூட்டிச் சாவியைக் கையில் எடுத்துக் கொண்டேன். நனைந்தாலும் பரவாயில்லை என்று கீழே இறங்கி ஒளி வந்த இடத்தை நோக்கி நடந்தேன்.

"கஜ்ஜிக் கொட்டை' (முந்திரிப் பருப்பு)யும், செவ்விள நீரும் விற்கும் சிறிய கடை அது. குடிசை முகப்பில் தட்டு நிறையச் சுட்ட முந்திரிப்பருப்பு குவித்திருந்தது. இன்னொருபுறம் கொத்துக் கொத்தாகத் தங்கக் கட்டிகளே காய்த்துப் பழுத்ததுபோல் செம்பொன் நிறத்தில் செவ்விளநீர்க் குலைகள். பக்கத்தில் அவற்றைச் சீவிக் கொடுக்கப் பயன்படும் ஒரு அரிவாள். முந்திரிப் பருப்பைப் பொட்டலம் கட்டும் காகிதங்கள். அவற்றின் இடையே ஒரு சின்ன முக்காலியில் பதினேழு, பதினெட்டு வயது மதிக்கத் தக்க ஒரு சிங்கள யுவதி. கரும்புகையைக் கக்கிக்கொண்டு எரியும் ஒரு மண்ணெண்ணெய் விளக்கு.

காரை விட்டு இறங்கி நனைந்துகொண்டே சென்றவன், அந்த இடத்தில் அப்படி ஒரு அற்புதமான காட்சியை எதிர்பார்க்கவே இல்லை. 'இவள் முந்திரிக்கொட்டை விற்கும் சிங்களப் பெண்ணா? அல்லது எங்கிருந்தாவது வழி தவறி வந்துவிட்ட வானுலகத்து மோகினியா? - என்று ஒரு கணம் மலைத்துப் போனேன். நனைந்துகொண்டே அந்தக் கீற்றுக் கொட்டகை வாசலில் நின்ற என்னைப் பார்த்து விட்டாள்.

"ஆ, முதலாளி! (இப்படி அழைப்பது ஒரு மரியாதை வழக்கம்) இப்படி உள்ளே வாருங்கள்’- இனிய குரலில் சிங்களத்தில் பேசினாள் அவள் சிவப்பு நிற வெல்வெட் பெட்டிக்குள் மறைந்திருக்கும் முத்துச்சரம்போல் அவள் செவ்விதழ்களுக்கிடையே நகை மலர்ந்தது. அதே குடிசைக் குள்ளிருந்து வேறு ஒரு வயதான கிழவி எட்டிப் பார்த்து விட்டு, "யார் வந்திருக்கிறார்கள்?’ என்று அந்த யுவதியிடம் கேட்டாள். அவள் பதில் கூறினாள். நான் கொட்டகைக்குள் நுழைந்தேன். அவள் உள்ளே போய்