பக்கம்:நா. பார்த்தசாரதி சிறுகதைகள் 1.pdf/258

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

256 நா. பார்த்தசாரதி சிறுகதைகள்

உட்காருவதற்கு இன்னொரு சிறிய முக்காலியைக் கொண்டு வந்து போட்டாள்; உட்கார்ந்தேன். அத்தனை ஆண்டுகளாக இலங்கையில் வசித்ததின் பயனாகச் சுமாராகச் சிங்களம் பேசவும், மற்றவர்கள் பேசினால் புரிந்து கொள்ளவும் தெரிந்திருந்தது. "உன் பெயர் என்ன?” - என்று சிங்களத்தில் அந்த யுவதியைக் கேட்டேன். "தாரா' - என்று சொல்லிவிட்டுக் கன்னத்தில் குழி விழச் சிரித்தாள் அப்பப்பா! ஆளைக் கொள்ளையடிக்கிற மோகனச் சிரிப்பு!

உலகத்தில் எந்தெந்தப் பெண்களிடமோ அழகு இருப்பதாகச் சொல்கிறார்கள். இங்கே இந்தக் கண்காணாத மலைப் பெண்ணுக்குக் கடவுள் இவ்வளவு அழகை வழங்கியிருக்கிறானே! கரந்தும், சரிந்தும், வளைந்தும், நெளிந்தும், குழைந்தும், குவிந்தும், உயர்ந்த ஊனுடல் ஒன்று என் முன் அந்தக் குடிசையில் நிற்கவில்லை. ஆண் பிள்ளைகளின் உள்ளங்களைச் சூறையாட ஆசை கொண்ட மாயச்சிற்பி ஒருவன் செம்பொற்சிலை ஒன்று செய்து கொல்லிப் பாவையாக உலாவ விட்டிருக்கிறான். அந்தச் சிலை உயிர் பெற்று உணர்வுபெற்றுத் 'தாரா' என்ற பெயரும் பெற்று இங்கே முந்திரிப் பருப்பு விற்றுக் கொண்டிருக்கிறது.

"இதோ! இதை எடுத்துக் கொள்ளுங்கள்!” - உட்கார்ந்தவன் நிமிர்ந்து பார்த்தேன். ஒரு காகிதத்தில் வறுத்த முந்திரிப் பருப்பும், மற்றொரு கையில் கிளாஸ் நிறைய ஆவி பறக்கும் தேநீருமாக அருகில் நின்றாள் அவள். அவளுடைய நாசிக்குக் கீழே, முகவாய்க்கு மேலே இரத்தச் சிவப்பில் இரண்டு மாதுளை மொட்டுக்கள் சிரித்தன. அவை? உதடுகள்! அவளுடைய அதரச் செம்மலர்கள் அப்படியே சிரித்தன.

“மழைக்கு ஒதுங்கியவனுக்காக வீண் சிரமத்தை எடுத்துக் கொள்கிறீர்கள். பக்கத்தில் காரை நிறுத்தி விட்டு வந்திருக்கிறேன். இதோ மழை நின்றதும் புறப்பட்டு விடுவேன்” என்று அவளிடம் எனக்குத் தெரிந்த அறைகுறைச் சிங்களத்தில் சிரித்துக் கொண்டே கூறினேன்.

"பரவாயில்லை! இவற்றை எடுத்துக் கொள்ளுங்கள்!” கதவோரத்தில் மறைந்து நின்று கொண்டிருந்த கிழவியும் வெளியே வந்து என்னை வற்புறுத்தினாள். நான் தாராவின் கைகளிலிருந்து முந்திரிப் பருப்பையும் தேநீரையும் வாங்கிக் கொண்டேன். சற்றே நீண்ட செண்பக மொட்டுக்களைப் போன்ற அந்த விரல்கள். அவை தாம் எவ்வளவு நேர்த்தியாக அமைந்திருந்தன!

"ஒரு இளநீர் சீவித்தரட்டுமா?"கேள்வி- அதே மோகனச் சிரிப்பு: ஏன் இப்படிச் சிரிக்கிறாள்? சிரிக்காமல் பேசவே தெரியாதா இவளுக்கு?

“இந்த மழையில் இளநீர் சாப்பிடவா சொல்கிறாய்? என்னைக் கேலி செய்கிறாய் போலிருக்கிறது:”

மறுபடியும் அதே சிரிப்பு! ஐயோ அவளிடம் அந்தச் சிரிப்பையும் என்னிடம் இந்தக் கண்களையும் ஏன் வைத்தாய்? முந்திரிப் பருப்பு இருந்த காகிதமும், தேநீர்க் கிண்ணமும் காலியாயின. கிழவி வந்தாள். ஏதேதோ விசாரித்தாள். இரவில் அங்கேயே சாப்பிட வேண்டுமென்று வற்புறுத்திவிட்டுக் குடிசைக்குள் சென்று விட்டாள்.