பக்கம்:நா. பார்த்தசாரதி சிறுகதைகள் 1.pdf/260

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

258 நா. பார்த்தசாரதி சிறுகதைகள்

வீணாகக் காரை விட்டுக் கொண்டு வருவார்களா? நீங்கள் “எட்டியாந்தொட்டை'யிலாவது, ‘கித்துல்கலை'யிலாவது வழி பிரிந்து போயிருக்கலாமே? மூலைக்கு மூலை ஐந்தாறு ரோடுகளும் வழிகளும் பிரிகின்றன. இங்கெல்லாம் வழி விவரம் தெரியாவிட்டால் இப்படித்தான் இடர்ப்பட வேண்டும்” என்று கூறிச் சிரித்தாள்.

“ஐயையோ! அப்படியானால் இப்போது என்ன செய்வது? நான் எப்படியும் “பெலிஹூலோயா'வுக்குப் போயாக வேண்டுமே!” நான் திடுக்கிட்டுப் போய்ப்பதறிய குரலில் அவளை வினவினேன்..

“கினிகத்தேனா வரை இதே ரோட்டில் திரும்பிப்போய் அங்கிருந்து 'நோர்ட்டன் பிரிட்ஜ்' மார்க்கமாகக் குறுக்கு வழியில் போனால் பெலிஹூலோயா சீக்கிரமாகப் போய்விடலாம்” என்று அவள் கூறினாள்.

"நீ சொல்கிற அந்த வழிகள் எனக்குத் தெரியாதே பகலானால் யாரையாவது கேட்டுக் கொண்டே போகலாம்.இந்த நேரத்தில் எப்படிப்போவது? யாரைக் கேட்டுக் கொண்டு போவது?” என்றேன்.

“நீங்கள் அவசியம் இப்போதே போய்த்தான் ஆகவேண்டுமா?”

“கண்டிப்பாகப் போயாகவேண்டும் நாளைக் காலை அங்கே வந்து சந்திக்கச் சொல்லி இரண்டு நண்பர்களுக்கு முன் கடிதம் வேறு எழுதிவிட்டேன். இரவிலேயே போனால்தான் காலையில் அவர்களைச் சந்திக்க வசதியாயிருக்கும்.”

"அப்படியானால் புறப்படுங்கள். நானும் உங்களுடன் கூட வருகிறேன். எனக்கு எல்லா வழிகளும் தெரியும்!

"நீயா?... நான் இரைந்து கத்துகின்றாற்போன்ற தொனியில் கேட்டு விட்டேன். எனக்குப் பகீரென்றது. நான் கேட்கும் குரலில் எனக்கு நம்பிக்கை விழவில்லை.

"ஏன் ஆச்சரியப்படுகிறீர்கள்? நான் உங்களோடு வரக்கூடாதா?’ அவள் களங்கமில்லாத குரலில் மறுபடியும் கேட்டாள். நான் நம்பிக்கையில்லாத மனத்துடன் தாராவினுடைய தாயின் முகத்தை ஏறிட்டுப் பார்த்தேன். அந்த வயதான, சுருக்கம் விழுந்த கிழட்டு முகத்தில் களங்கமோ, அவநம்பிக்கையோ, சந்தேகமோ இல்லை.

"தாராவை அழைத்துக்கொண்டு செல்லுங்கள். அவளுக்கு இங்குள்ள வழிகள் எல்லாம் கரதலப்பாடம். நாளைக்கோ, நாளன்றைக்கோ நீங்கள் திரும்பி வரும்போது உங்கள் காரிலேயே அவளை இங்கே கொண்டு வந்து விட்டால் போதும்”- கிழவியின் குரலில் தயக்கமே இல்லை. எனக்கு உடல் முழுதும் சிலிர்த்தது. மறுபடியும் அந்த வாக்கியத்தை நினைத்துக் கொண்டேன்.

அந்நியனை அந்நியனாக எண்ணவே இவளுக்குத் தெரியவில்லை. எதையும் விபரீதமாக எண்ணவே இவர்களுக்குத் தெரியாதா? அமுதத்தில் செய்து நிறுத்திய சிலைபோல் பதினெட்டு வயதுப் பெண்ணை இந்த இரவில் எனக்கு வழிகாட்டத் துணையாக அனுப்புகிறாளே இந்தத் தாய்! உலகில் நன்மைகளைத் தவிர,