பக்கம்:நா. பார்த்தசாரதி சிறுகதைகள் 1.pdf/262

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

260 நா. பார்த்தசாரதி சிறுகதைகள்

கூச்சலிட்டு அலறியவாறே ஜன்னலோரமாகச் சுவரில் முழங்கையின் பின்புறத்தைத் தேய்த்துக் கொண்டிருந்தாள் தாரா.

“என்ன? என்ன?”

“பாழாய்போன அட்டை எப்போது பிடித்துக் கொண்டதென்றே தெரியவில்லை. திடீரென்று முழங்கையில் இரத்தம் வடிகிறது” என்றாள். “அதற்காகப் பூப்போன்ற கையை இப்படியா சுவரில் தேய்ப்பார்கள்! இதோ அட்டையை நான் எடுத்து விடுகிறேன்” என்று சொல்லி அந்தக் கையைப் பற்றிக் காவல்காரனிடம் சிறிது மூக்குப்பொடி வாங்கி அட்டை பற்றியிருந்த இடத்தில் தூவினேன். பொடிவாடையில் பிடி தளர்ந்து அட்டை கீழே சுருண்டு விழுந்தது.

தாரா கையைத் தேய்த்த இடத்தில் சுவரில் இரத்தக் கறையாகிவிட்டது. "இதென்ன இப்படிச் சுவரைப் பாழாக்கி விட்டாயே?’ என்று சிரித்துக் கொண்டே கேட்டேன்.

“பாழாக்கவில்லையே! சுவருக்கு இரத்ததானம் செய்திருக்கிறேனாக்கும்” என்று சொல்லிக் கொண்டே, என் சட்டைப் பையிலிருந்த காப்பிங் பென்ஸிலை உருவி எடுத்தாள்.

“பென்சிலை என்ன செய்யப் போகிறாய்?”

“இந்தக் கறைக்கு மேல் தாராவின் இரத்தம்! அட்டைகள் ஜாக்கிரதை' என்று எழுதப் போகிறேன்” என்று பதில் கூறிக்கொண்டே, சுவரில் 'தாரா' என்று ஆரம்பித்து எழுதத் தொடங்கி விட்டாள். "இதோ பார்! இது ரெஸ்ட்ஹவுஸ். கண்டதையெல்லாம் சுவரில் கிறுக்கக் கூடாது' என்று அவள் கையைப் பிடித்து மேலே எழுதவிடாமல் தடுத்தேன்.

கண்ணாமூச்சி விளையாடும் சிறு குழந்தையை விளையாடும் போது ஒளிந்திருக்கும் இடத்திலிருந்து கண்டு பிடித்து விட்டால் அது கலகலவென்று கைகொட்டிச் சிரிக்குமே அந்த மாதிரி சிரித்தாள் தாரா.

“பலபேர்கள் தங்கியிருக்கும் ரெஸ்ட்ஹவுஸில் இரண்டு மணிக்குமேல் ஒரு பெண் இப்படிச் சிரித்தால் என்ன நினைத்துக் கொள்வார்கள்?”

"ஏன் இரவு இரண்டு மணிக்குச் சிரிக்கக்கூடாதென்று பெலிஹூலோயே ரெஸ்ட்ஹவுஸில் ஏதாவது சட்டம் போட்டிருக்கிறார்களா என்ன? ”துடுக்குத்தனமாக எதிர்த்துக் கேட்டாள் அவள். அப்போது எங்கள் அறைக்கு வெளியே யாரோ சிரித்துக் கொண்டே மெல்லப் பேசும் குரல் கேட்டது. அந்தச் சிரிப்பும், பேச்சும், அதை அவர்கள் பேசிய விதமும், சிரித்த விதமுமே கேட்கத் துண்டக்கூடிய முறையில் இருந்தன.

தாரா அதை உற்றுக் கேட்டாள். எங்கள் பேச்சு நின்றது. நானும் கேட்டேன்.

“என்ன வாட்ச்மேன்? யார் இந்த அறைக்கு வந்திருக்கிறார்கள்? இந்த நேரத்தில் ஒரே சிரிப்பும் கும்மாளமுமாக இருக்கிறது” கேட்டவர் சிங்களத்திலேயே பேசினார்.