பக்கம்:நா. பார்த்தசாரதி சிறுகதைகள் 1.pdf/263

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

முதல் தொகுதி / ஒரு பழைய கனவு 261

காவல்காரன் அவருக்குப் பதில் சொல்லாமல் ஒரு தினுசாக சிரிக்கும் ஒலி கேட்டது.

“என்னப்பா சிரிக்கிறாய்? என்ன விசேஷம்?”

“சரியான ஜோடிதான்! யாரோ ஒரு பணக்காரத் தமிழ்ப் பையன் ஒரு சிங்களக் குட்டியை இழுத்துகொண்டு.”

அவன் சொல்ல வந்ததைச் சொல்லி முடிக்கவில்லை. பேயறை பட்டவள் போல 'வீல்' என்று அலறினாள் தாரா, ஒடினாள். "தாரா! தாரா! போகாதே. இருட்டு - உலகமென்றால் நாலு விதமாகத்தான் பேசுவார்கள்” என்று கத்திக்கொண்டே பின்னால் ஒடினேன் நான். வெறி பிடித்தவள் போலத் தட்டுத் தடுமாறி விழுந்து ஓடினாள் அவள். கூண்டிலிருந்து விடுதலை அடைந்த பறவையைப் போலப் பறந்தோடிவிட்டாள் அவள்.

இருளில் அவளும் தெரியவில்லை. அவளுடைய பதில் குரலும் கேட்கவில்லை.

“ஆம்! அவள் அந்நியனை அந்நியனாகக் கருதுவதற்குத் தெரிந்து கொண்டு விட்டாள். ஒரே காரில் சேர்ந்து பிரயாணம் செய்த போதும், ஒரே அறையில் உடன் தங்கச் சம்மதித்தபோதும், கையைப் பிடித்துத் தீண்டி அட்டைக் கடியிலிருந்து விடுவித்த போதும், எந்த ஒரு களங்கம் அவள் மனத்தில் ஏற்படவில்லையோ அந்தக் களங்கத்தை இரண்டுமுட்டாள்கள் தங்கள் பேச்சின் மூலம் உண்டாக்கி விட்டார்கள், அந்த முட்டாள்கள்! அவர்கள் உலகில் எதையுமே பாவம் நிறைந்த கெட்ட கண்களோடு மட்டுமே பார்க்கத் தெரிந்தவர்கள். தீமைத் தழும்பேறிய அந்தப் பார்வையின் விளைவு என்ன? தாராவின் புனிதமான மனம் அந்நியனை அந்நியனாக எண்ணிவிட்டது. தீயவை எதையுமே பேச, நினைக்க, செய்யத் தெரியாத அந்தப் பதினெட்டு வயதுப் பெண் குழந்தையின் மென்மையான இதயத்தில் சமூகத்தின் கூரிய முள் ஒன்று தைத்துவிட்டது. அவளுக்கு அன்று வரையில் தெரியாத புதிய பயத்தை உண்டாக்கி விட்டது.

ரவியின் மனத்தில் மலர்ந்த நினைவுப் பூவின் இதழ்கள் ஒவ்வொன்றாக உதிர்ந்து விட்டன. “நீ குளிக்க வேண்டாம். உடை மாற்றிக் கொள்ள வேண்டாம். சாப்பிட மட்டுமாவது வா” என்று கையைப் பிடித்துக் கொண்டு கெஞ்சினான் குணசேனா, ரவி அவனுக்குப் பதில் சொல்லாமல் மறுபடியும் பால்கனியைப் பார்த்தான். அதே அறை! அதே கறை!. அதே எழுத்து.

***

"னக்கு என்ன பைத்தியம் பிடித்துவிட்டதா? எதைச் சிந்திக்கிறாய்?" குணசேனா உரத்த குரலில் வினவினான். ரவி சாவதானமாக நிறுத்தி நிதானமாக ஒவ்வொரு வார்த்தையாக மறுமொழி கூறினான்.

“ஒன்றுமில்லை! அது ஒரு பழைய கனவு."

(கல்கி,23.2.1959)