பக்கம்:நா. பார்த்தசாரதி சிறுகதைகள் 1.pdf/264

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

33. கடல் கறுப்பா? நீலமா?

கிழவன் சூசை நடந்து கொண்டிருந்தான். ‘சரக், சரக்’ என்று நீண்ட காலமாக உழைத்து விட்ட அலுப்பை ஒலமிடுவது போல் அவனுடைய கால்களின் பழைய செருப்புக்கள் செம்மண் சாலையின் புழுதியைக் கிளப்பி விட்டன. அத்தனை வயதான பின்பும், வேகம் குறையாமல் துள்ளிப் பாய்கிறாற் போல் அவனுக்கென்று ஒரு நடை வாய்த்திருந்தது.

முழங்காலுக்கு மேல் வரித்து கட்டிய செம்புழுதி படிந்த வேட்டி, அது இடுப்பிலிருந்து நழுவி விடாமல் பழைய காலத்துப் பாணியில் ஒரு தடிமனான பெல்ட்டு, மார்பில் அழுக்கடைந்த பனியன், கழுத்தில் ஒரு கருப்புக் கயிற்றில் முடிந்த சிலுவை.

வலது கையில் மார்பளவு உயரத்தில் பூண் பிடித்த கிளுவைக் கம்பு. இடது கையில் ஒரு பெரிய மட்டிப் பழத் தாறு. (மட்டி நாஞ்சில் நாட்டில் பிரசித்தமான ஒரு வகை வாழைப் பழம்) தலை மேல் துணியில் கட்டிய மூட்டை ஆசாரிப் பள்ளம் சந்தைக்குப் போய்ச் சாமான் வாங்கிக் கொண்டு ஊர் திரும்பிக் கொண்டிருக்கிறான். .

குளச்சல் உப்பளத்திலிருந்து உப்பு மூட்டைகளை ஏற்றி வரும் லாரி ஒன்று பிசாசு போல் பாய்ந்து புழுதியைக் கிளப்பிக் கொண்டு வந்தது. குறுகலான சாலையிலிருந்து கீழே இறங்கி ஒதுங்கிக் கொண்டான் சூசை. லாரி போனதும் அவன் நடை தொடர்ந்தது. நாகர் கோவிலையும், அதன் தென் மேற்குக் கோடியிலுள்ள துறைமுகப்பட்டினமான குளச்சலையும் இணைக்கும் சாலை அது. தென்மேற்கு மூலை தொடங்கி கிழக்கு முகமாக நாஞ்சில் நாட்டை வளைத்துக் கொண்டு கிடக்கும் கடற்கரையோரத்து ஊர்களில் எண்ணற்ற மீனவர்கள் வாழ்ந்து வருகின்றனர். சூசையும் அவர்களில் ஒருவன். அவனுக்கு ஊர் மணவாளக் குறிஞ்சிக்கு அருகில் கடிய பட்டினம். கிழவன் சூசை தனிக்கட்டை. பட்ட காலிலேயே படும் கெட்ட குடியே கெடும் என்பது போல், அந்த ஐம்பத்தாறு வயதுக்குள் எத்தனையோ துன்பங்களுக்கு ஈடு கொடுத்து விட்டது அவன் வாழ்க்கை.

சகரியாஸ் பாதிரியாரின் ஆறுதலான அறிவுரைகளும், ஆதரவும் பேரப் பிள்ளையாண்டான் என்ற அந்த ஒரு கடைசிக் குலக் கொழுந்தும் இல்லையானால், சூசை இதற்குள் என்றைக்கோ உயிரை விட்டிருப்பான். -

சூசைக்கும், மரியாளுக்கும் திருமணம் நடந்த போது அவனுக்கு இருபத்தெட்டு வயது. மூன்று வருடங்களில் மரியாள் ஒரு பெண் குழந்தையைப் பெற்று விட்டுப் போய்ச் சேர்ந்தாள். அந்தப் பேரிடியைத் தாங்கிக் கொண்டும் வாழமுடிந்தது.அவனால்.