பக்கம்:நா. பார்த்தசாரதி சிறுகதைகள் 1.pdf/265

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

முதல் தொகுதி / கடல் கறுப்பா? நீலமா? 263

எத்தனையோ பேர் பெண் கொடுக்க முன்வந்தார்கள். சகரியாஸ் பாதிரியார் கூட அவனை வற்புறுத்தினார். அவன் மீண்டும் மணம் செய்து கொள்ளக் கண்டிப்பாக மறுத்துவிட்டான். பெண் குழந்தையைக் கொஞ்ச நாள்தான் வைத்துக் கொண்டிருந்தான். பச்சைக் குழந்தையை வைத்துக் கொண்டு தனி ஆண் பிள்ளையால் பேணிக் காக்க முடியவில்லை. வீட்டிலேயே அடைந்து கிடந்தால் வயிற்றுப் பாட்டுக்குத் தொழிலைக் கவனிக்கவேண்டாமா? காலையில் கிழக்கு வெளுக்கும் போது கட்டுமரத்தில் கிளம்பினால் அந்தி மயங்கும் நேரத்துக்குத் திரும்புகிறவன் குழந்தைக்காக வீட்டிலேயே இருக்க முடியவில்லை.

சூசை அழுது கொண்டே சகரியாஸ் பாதிரியாரிடம் முறையிட்டான். அவர் மதச் சலுகையை வைத்துக் குழந்தையைப் பாளையங்கோட்டையிலுள்ள அருள் மரியன்னை சிறுவர் விடுதியில் சேர்க்க ஏற்பாடு செய்தார். சூசைக்குக் குழந்தையைப் பற்றிய கவலை விட்டது. அதன் பின் பதினான்கு வருடங்கள் குழந்தை பாளையங்கோட்டையிலே வளர்ந்து படித்து பெரியவளானாள். சூசை இரண்டு மாதத்துக்கொருதரம் மூன்று மாதத்துக் கொருதரம் பாளையங்கோட்டை போய் பெண்ணைப் பார்த்து விட்டுக் கடியபட்டினம் திரும்புவான்.

எல்லாம் சகரியாஸ் பாதிரியாரின் கருணை.அவர் இல்லாவிட்டால் அவனால் தன் பெண் குழந்தையை இப்படி வளர்த்திருக்க முடியாது. சீவரட்சகரான கர்த்தர் எத்தனையோ பேர்களுடைய துன்பங்களைத் தாங்கிக்கொண்டு சிலுவையில் அறைபட்டது போல், பலருடைய துன்பங்களைத் தாங்கி அவற்றில் தம்மைத் தாமாகவே அறைந்து கொண்டு வாழ்ந்து வரும் உபகாரி அவர்.

ரோஸி - அதுதான் சூசை தன் பெண்ணுக்கு இட்டிருந்த பெயர்-அவளுக்குப் பதினான்கு வயதாகியபோது எஸ்.எஸ்.எல்.சி. பாஸ் செய்திருந்தாள். அதற்கு மேலும் அவளைப் படிக்க விட விருப்பமில்லை சூசைக்கு.

உள்ளூரில் உறவு முறைக்குள் யாராவது ஒரு மீனவப் பையனுக்குக் கட்டிக் கொடுத்துப் பெண்ணை வீட்டோடு வைத்துக் கொண்டால் வயதான காலத்தில் நிம்மதியாக இருக்குமென்று தோன்றியது.

சகரியாஸ் பாதிரியாரிடம் போய்த் தன் விருப்பத்தைக் கூறிக் கலந்தாலோசித்தான்.

பாதிரியார் சிரித்தார்."சூசை படித்த பெண்ணை இங்கே கூட்டிக் கொண்டு வந்து இந்தப் பட்டிக்காட்டுக்குள் எவனாவது ஒரு கையெழுத்துப் போடத் தெரியாத பையனுக்குக் கட்டிக் கொடுத்துக் கொடுக்க வேண்டாம். நீ கவலைப் படாமல் இரு. பாளையங்கோட்டையிலேயே அவளுக்குத் தகுதியான கணவனை நான் தேர்ந்தெடுக்கிறேன்” என்று கூறினார். அவருடைய வார்த்தையைச் சூசையால் மீறமுடியவில்லை. மறு மாதமே பாளையங்கோட்டையில் ஆசிரியர் வேலை பார்த்துக் கொண்டிருந்த ஒரு அழகிய வாலிபனை ரோசிக்கு மணமகனாகப் பேசி முடிவு செய்தார் பாதிரியார். சூசையும் சம்மதித்தான்.திருமணம் கூடப்பாளையங்கோட்டைச் சர்ச்சிலேதான் நடைபெற்றது. சூசை, யாரோ மூன்றாவது மனிதன் போய்விட்டு வருவதுபோல் பாதிரியாரோடு பாளையங்கோட்டைக்குப் போய்விட்டு வந்தான்.