பக்கம்:நா. பார்த்தசாரதி சிறுகதைகள் 1.pdf/268

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

266 நா. பார்த்தசாரதி சிறுகதைகள்

பாதிரியார் அவனிடமிருந்து குழந்தையை வாங்கிக் கொண்டார். குழந்தை சூசையின் பொறுப்பில் வந்தது.

பின்பென்ன? பழைய கதைதான்.பாதிரியாருடைய தயவில் பாளையங்கோட்டை விடுதியில் பேரக்குழந்தையைச் சேர்த்தான் சூசை, பேரன் வளர்ந்து கொண்டு வந்தான் தன் பேரனை வளர்த்துப் பெரியவனாக்கித் தனது தொழிலின் வாரிசாகக் கொண்டு வந்து ஊரில் ஊன்றிவிட வேண்டும் என்று சூசையின் உள்ளத்தில் தணியாத ஆசை. பட்டுப் பட்டு நொந்து போன அவனுக்கு ஒரே நம்பிக்கை அந்தப் பேரன் உருவில் இருந்தது. தலைமுறை தலைமுறையாகக் கடலை ஆண்டு வாழும் தன் பரம்பரை தன்னோடு அற்றுப் போய்விடக் கூடாதே என்று அவனுக்குக் கவலை.

பத்துக் கட்டுமரங்கள், மூன்று பாய்மரத் தோணி, இரண்டு வள்ளம், ஏழு வலை, இவ்வளவும் சூசையின் சொத்து.

"பேரப்பிள்ளையை அதிகம் படிக்கவைக்கப்படாது. நிறையப் படித்துத் தெரிந்து கொண்டால் அப்புறம் பட்டிக்காட்டு ஊருக்கு வரமாட்டேன் என்று முரண்டு பிடிப்பான். நம் தொழிலுக்கும் மனம் இணங்காது. பத்துப் பன்னிரண்டு வயதுக்குள் படித்தது போதும் என்று பாதிரியாரிடம் சொல்லி ஊருக்குக் கூட்டிக் கொண்டு வந்துவிட வேண்டும். அப்புறம் இரண்டு மூன்று மாதம் கூடவே கூட்டிக்கொண்டு போய்த் தொழிலில் பழக்கிவிடவேண்டும்” ஒரு நாள் நடுக்கடலில் வலையைச் சரியாக வீசாமல் தவற விட்டு விட்டதற்காகச் சூசையைச் சிறு வயதில் அவன் தந்தை முதுகை உரித்து விட்டார்.

“சே! சே! பேரப்பிள்ளையை நான் அப்படியெல்லாம் அடிக்கக்கூடாது. தாயில்லாத பயல், அரட்டல் மிரட்டலிலேயே எல்லாம் சொல்லிக் கொடுத்துவிட வேண்டும். பயல் பிறந்ததிலிருந்து சமுத்திரத்தையே பார்க்கவில்லை. பயத்தைப் போக்கிக் கடலுக்குள் கூட்டிக்கொண்டு போவதே மிகவும் கஷ்டமாயிருக்கும்.”

“தாத்தா யோசனை பலமோ? பராக்குப் பார்த்துக் கொண்டே நடக்கிறீர்களே?”

நடந்து கொண்டிருந்த கிழவன் சூசை சிந்தனையிலிருந்து விடுபட்டுத் திரும்பிப் பார்த்தான். பின்னால் ஆரோக்கியம் வேகமாக வந்து கொண்டிருந்தான்.

“வா அப்பா, ஆரோக்கியம்! நீயும் ஊருக்குத்தானே வருகிறாய்?”

"வேறெங்கே போக்கிடம்” என்று ஆரோக்கியம் அலுத்துக் கொள்வது போல் பதிலளித்தான்.

“ஏதேது? மட்டிப்பழமெல்லாம் வாங்கிக் கொண்டு போவதைப் பார்த்தால் பேரப் பிள்ளையைப் பார்க்கப் போlங்க போலத் தோணுது”

"ஆமாம் அப்பா! இந்த டானியல் பயல் வலை இரவல் வாங்கிக் கொண்டு போனான். நாலு நாளச்சு, திரும்பித்தரலை. அதை வாங்கி வைத்துவிட்டுச் சாயங்காலம் பஸ்ஸில் புறப்படணும்” என்றான் சூசை

"டானியல் அண்ணாச்சி இரவல் வாங்காத ஆளு இந்த வட்டாரத்திலேயே கிடையாது. தாத்தா இரண்டு வாரங்களுக்கு முன்னாலே என்கிட்டக் கட்டு மரம்