பக்கம்:நா. பார்த்தசாரதி சிறுகதைகள் 1.pdf/269

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

முதல் தொகுதி / கடல் கறுப்பா? நீலமா? : 267

கொடுன்னு இரவல் வாங்கிட்டுப் போனான். எங்கேயோ பாறையிலே மோதிச் சீரழிச்சுத் திருப்பிக் கொடுத்தான்.

“உதவாக்கரைப்பயல் இவனுக்கு இரவல் கொடுத்துக்கெட்டுப்போக நமக்கென்ன பிள்ளையில்லாச் சொத்தா பாழ்போகுது? நாளைக்குப் பேரப் பிள்ளையாண்டான் வந்து சேர்ந்திட்டால் வலையும் கட்டு மரமும் எங்கே என்று கேட்பானே?”

“உங்க பேரனை ஊருக்குக் கூட்டிக் கொண்டு வரப்போகிறீர்களா தாத்தா?”

“அட இன்னிக்கில்லாவிட்டாலும் என்றாவது ஒரு நாள் என் தொழில் நசித்துப் போகாமல் அவன்தானே ஏற்றுக் கொள்ளணும்? ஊரை மறந்து வமிசத் தொழிலை மறந்து பயலை வெள்ளை வேட்டிக்காரனாகச் சுத்த விடற எண்ணம் எனக்கில்லை; கொஞ்சம் படிச்சதும் நிறுத்திப்பிட்டு ஊருக்குக் கூட்டியாந்திடனும்னு இருக்கேன்.”

‘சகரியாஸ் பாதிரியாரு அதுக்குச் சம்மதிப்பாரா தாத்தா?

"அவரு சம்மதிக்கிறாரு சம்மதிக்கலை; அதைப் பார்த்தா முடியுமா.என் மனசிலே பட்டதைச் செய்யப் போறேன்.”

ஆரோக்கியம் பேசாமல் நடந்தான். ஊர் அருகில் வந்து விட்டார்கள் இருவரும்.

கடற்கரையில் யாரோ வற்புறுத்திக் கட்டித் தொங்க விட்டிருப்பதுபோல் அமைந்திருந்தது கடியபட்டினம் ஊர். உயர்ந்தும் தாழ்ந்தும் கடலை ஒட்டினாற் போல் தென்பட்ட பாறைகளின் இடையே சிறுசிறு குடிசைகள், சில ஒட்டடுக்கு வீடுகள், ஒன்றிரண்டு காரைக் கட்டிடங்கள் தெரிந்தன. சாலைகளோ தெருவோ அமைக்க முடியாத ஊர். அரக்கனுக்குப் பல் முளைத்த மாதிரிப் பாறைகளில் எப்படிச் சாலை அமைப்பது?

போகிற வழியில் சகரியாஸ் பாதிரியாரைச் சர்ச்சில் சந்தித்தான் சூசை.

“சூசை உன் பேரப்பிள்ளை என் பெயருக்கு ஒரு கடிதம் எழுதியிருக்கான் அப்பா' .

“என்ன எழுதியிருக்கிறான் ஐயா! படியுங்கள். கேட்கிறேன்.” .

"வேறொன்றுமில்லை. அவனுக்குச் சமுத்திரத்தைப் பார்க்க ஆசையாக இருக்கிறதாம். சமுத்திரம் எவ்வளவு பெரிசாயிருக்கும்; எவ்வளவு ஆழமாயிருக்கும்; என்ன நிறமாயிருக்கும் என்றெல்லாம் கேட்டு எழுதியிருக்கிறான்.”

“நானே இன்று மாலை பாளையங்கோட்டைபோகலாம் என்றிருக்கிறேன் ஐயா!'

“ஏது? திடீரென்று புறப்பட்டு விட்டாய்?”

“ஒன்றுமில்லை பயலைப் பார்த்து வெகு நாட்களாயிற்று”

'‘போய் வா, ஆனால் படிப்பைக் கெடுத்து விட்டு சமுத்திரம் பார்க்க ஆசைப்பட்டான் என்று கையோடு இங்கே கூட்டிக் கொண்டு வந்து விடாதே. விடுமுறையின் போது வந்தால் போதும்”.

“இந்த வருட விடுமுறையின்போது பையனை இங்கே கூட்டி வந்தால் அப்படியே ஊரோடு வைத்துக் கொள்ளலாம் என்று நினைக்கிறேன் ஐயா! இனிமேல் அவனுக்குப் படிப்பு எதற்கு? தொழிலைப் பழக்கி விட்டால் எனக்குக் கவலை இல்லை”.